தென்னிந்தியாவின் “லேடி சூப்பர் ஸ்டார்” சாதனை மகத்தானது, நயன்தாரா எப்படி இதை நிகழ்த்தினார்?
ஆண்களை மையப்படுத்திய தென் இந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெறுவது அவ்வளவு எளிதானது இல்லை. ஆனால், அதனை நிகழ்த்திக்காட்டி உள்ளார் நயன்தாரா. இனிவரும் காலகட்டங்களில் இன்னொரு நடிகையால் இதை அவ்வளவு எளிதாக செய்துவிட முடியுமா என தெரியவில்லை. ஆகவே தான் அவரைப்பற்றி எழுத வேண்டிய தேவையும் உள்ளது.
தமிழ் உள்ளிட்ட தென் இந்திய சினிமாக்களில் ஆண் நடிகர்களை மையப்படுத்தியே சினிமாக்கள் எடுக்கப்படும். பல சினிமாக்களில் முக்கியத்துவம் கொஞ்சமும் இல்லாமல் நடிகைகள் நடிக்க வைக்கப்பட்டு இருப்பார்கள். காதல் காட்சிகள், பாடல்கள் இதற்காக மட்டுமே நடிகைகள் இருக்கும் படங்களும் உண்டு. கதை எழுதும்போதே நடிகர்களுக்காக எழுதப்படுவதும் ரசிகர் பட்டாளம் நடிகர்களுக்காக இருப்பதும் நடிகைகளின் முக்கியத்துவத்தை குறைக்க காரணமாக இருக்கலாம். ரசிகர்கள் பலம் இல்லாத நடிகைகளுக்கு கதை எழுதப்படுவது இல்லை. அப்படியே எழுதப்பட்டால் கூட அதனை திரைப்படம் ஆக்க தயாரிப்பாளர்கள் முன்வருவது இல்லை. காரணம், செய்த முதலீட்டை எடுக்க முடியாது என்பதனால் தான்.
ஆனால், மேற்கூறிய அனைத்தையும் தகர்த்து எறிந்து தென் இந்திய சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி, நடிகையை மையப்படுத்திய திரைப்படங்கள் பலவற்றை வெற்றிப்படங்களாக கொடுத்து லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார் நயன்தாரா. இந்த இடத்தை அவர் அவ்வளவு எளிதாக பெற்றுவிடவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நேர்த்தியாக அவர் எடுத்த முடிவுகள் அவரை இந்த நிலைக்கு உயர்த்தி உள்ளது என்பதே உண்மை. அவர் எப்படி இதை செய்தார்?
நயன்தாராவின் துவக்கம்
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு Manassinakkare என்ற மலையாள படத்தில் தான் அறிமுகம் ஆனார் நயன்தாரா. அந்த நேரங்களில் அவர் கொடுத்த நேர்காணல்களில் தனக்கு ஒரு பட்டய கணக்காளர் (charted accountant) ஆவதே லட்சியம் என குறிப்பிட்டுள்ளார். சில சினிமாக்களில் நடித்த பிறகு தீர்மானமாக நடிப்பு தான் தனது தொழில் என்பதை முடிவு செய்தார். தீர்மானமாக முடிவெடுத்த பிறகு அவர் அதற்கான தீவிர உழைப்பில் இறங்கினார். அவருக்கு காலமும் துணை நின்றது.
தமிழில் சரத்குமார் அவர்களுடன் ஐயா திரைப்படம், ரஜினி அவர்களுடன் சந்திரமுகி, சிம்புவுடன் வல்லவன், விஜய் அவர்களுடன் வில்லு, சூர்யாவுடன் கஜினி, அஜித்துடன் பில்லா என முன்னணி நடிகர்களுடன் வெற்றிப்படங்களில் நடித்தார். நயன்தாராவின் ஆரம்பகால படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்ததால் அவருக்கு ரசிகர் பட்டாளமும் அதிகரிக்க துவங்கியது.
யாரடி நீ மோகினி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற திரைப்படங்கள் அவருடைய மற்றொரு பாணியை வெளிக்காட்டியது.
லேடி சூப்பர் ஸ்டார்
ஆரம்ப காலங்களில் வெற்றிப்படங்களை கொடுத்ததால் சினிமா வட்டாரத்தில் அவருக்கென முக்கியத்துவம் இருந்தது. இடையில் கிளம்பிய பிரபு தேவாவுடன் காதல் முறிவு போன்ற செய்திகளால் சுமார் 11 மாதங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தவர் தனது அடுத்த ஆட்டத்தை ஆடத்துவங்கினார். நயன்தாரா தனக்கு முக்கியத்துவம் இருக்குமாறு உள்ள திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ராஜா ராணி, ஆரம்பம், இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா போன்ற திரைப்படங்கள் அவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்தன.
ஒருபக்கம் கமர்சியல் சினிமாக்களில் நடித்துக்கொண்டு அவரை மட்டுமே மையப்படுத்திய கதைகளிலும் நடிக்கத் துவங்கினார். இதுதான் அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை தேடி கொடுத்தது. தெலுங்கில் அனாமிகா, தமிழில் மாயா போன்ற அவரை மையப்படுத்திய திரைப்படங்கள் பெரும் வெற்றியை பெற்றன.
அந்த காலகட்டங்களில் தான் நானும் ரவுடி தான், தனி ஒருவன், ஐரா, இமைக்கா நொடிகள், அறம், டோரா என பல வெற்றித் திரைப்படங்களை தந்தார். பொதுவாக, நடிகைகளை மையப்படுத்திய சினிமாக்கள் வராததற்கு காரணம் வசூல் கிடைக்காது என்பதால் தான். ஆனால், நயன்தாரா நடித்த அவரை மையப்படுத்தி எடுத்த அறம் போன்ற திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றன. கோல மாவு கோகிலா அதிலே உச்சம் தொட்ட படம். ஒரு நடிகையின் திரைப்படம் அதிகாலை 6 மணி காட்சியில் திரையிடப்பட்டது என்றால் அது கோலமாவு கோகிலா திரைப்படம் தான்.
அஜித் அவர்களுடன் விஸ்வாசம், விஜய் அவர்களுடன் பிகில் போன்ற படங்களில் நடித்தார். அண்மையில் அவர் நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ச்சியாக அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் சாருக்கானுடன் நடிக்கிறார்
நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டாராக கருதப்பட முக்கியக்காரணம் அவர் பல ஆண்டுகளாக பல வெற்றிப்படங்களை தொடர்ச்சியாக கொடுத்து வந்தமை தான். 2018 ஆம் ஆண்டு அதிகம் சம்பாதிக்கும் இந்திய பிரபலங்கள் பட்டியலில் 69 ஆம் இடம் பிடித்தார். அவருக்கு பின்னால் தான் கமல் அவர்களே இருந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்.
அற்புதமாக நடிக்கும் பல நடிகைகள் சினிமாவுக்குள் வருகிறார்கள். ஆனால், தங்களுக்கு முக்கியத்துவம் தரும் சினிமாக்களை அவர்கள் தெரிவு செய்வதில் தவறுகளை செய்கிறார்கள். சினிமா நடிகர்களுக்கு மட்டுமே என்கிற எண்ணம் நடிகைகளுக்கு உள்ளார்ந்து இருப்பதும் அவர்கள் பெரும் முயற்சி எடுக்காமல் இருக்க காரணமாக இருக்கலாம். ஆனால், நயன்தாரா அதனை செய்து காண்பித்து உள்ளார். ஆகவே, இனிவரும் நடிகைகள் அப்படியொரு இடத்தை பிடிக்க முயற்சிக்கலாம். நடிகைகள் அப்படி முயற்சி செய்தால் அவர்களுக்கு கதைகளிலும் முக்கியத்துவம் கிடைக்கும்.
வாழ்த்துக்கள் நயன்தாரா!
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!