போர் தரும் வலி – 14 வயதில் கை கால்களை இழந்து வாடும் நஜ்லா இமாத் லாப்டா | Najla Imad Lafta
என்னுடைய பள்ளி நாட்களில் என் வயது சிறுவர்கள் விளையாடுவார்கள், நடப்பார்கள், எதிர்காலத்தில் என்ன செய்வோம் என பேசுவார்கள் ,நான் வீல் சேரில் அமர்ந்துகொண்டு அவர்களைப்போல ஓட முடியுமா நடக்க முடியுமா என சிந்தித்துக்கொண்டிருப்பேன் – Najla Imad Lafta
Image/story credit : nytimes
இப்போதெல்லாம் எளிமையாக போர், தாக்குதல்கள் பற்றி விரும்பி பேசுகிறவர்களை பார்க்க முடிகிறது. குறிப்பாக பாகிஸ்தானுடன் ஏதேனும் உரசல் ஏற்படும் போது நம்மிடம் தான் ராணுவ பலம் இருக்கிறதே அவர்களை தாக்கி வென்றுவிடலாமே என பேசுவார்கள். ஆனால் போர், வன்முறை, தீவிரவாதம், தாக்குதல் போன்றவற்றினால் பாதிக்கப்படுபவர்களின் வாழ்க்கையை கண்டவர்களால் “தாக்குதல்” என்ற வார்த்தையைக்கூட பயன்படுத்த முடியாது என்பதே எதார்த்தமான உண்மை. போர், வன்முறை, தீவிரவாதம் போன்றவை ஏற்படும் போது கட்டிடங்கள் சாய்ந்துவிழும், பொருளாதாரம் பாதிக்கப்படும், ஏராளமான உயிர்பலி ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
ஆனால் தாக்குதலுக்கு உட்பட்டு மீண்ட பின்னர், வாழ்வின் பிற்பகுதியை கைகள் இல்லாமல், கால்கள் இல்லாமல் வாழ்வோரைக் கண்டால் போர், வன்முறை, தீவிரவாதம், தாக்குதல் ஆகியவை எவ்வளவு கொடுமையானவை என்பதை புரிந்துகொள்ள முடியும். போருக்கான தேவை ஒருபுறம் இருப்பதனை மறுப்பதற்கு இல்லை, ஆனால் அது எவ்வளவு கொடுமைகளை ஏற்படுத்தும் என்பதனையும் முடிந்தவரையில் அது தவிர்க்கப்பட வேண்டியது என்பதனையும் உணர்த்துவதற்காகத்தான் இந்தக்கட்டுரை.
நஜ்லா இமாத் லாப்டா | Najla Imad Lafta
அமெரிக்கா – ஈராக் மீது போர் தொடுத்திருந்த காலம், நஜ்லா வின் தந்தை அமெரிக்கா ராணுவத்துடன் இணைந்து பணியாற்றினார். அங்கிருக்கும் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு அது தெரிந்திருந்தது. ஆகவே அவருக்கு அச்சுறுத்தல் இருந்துவந்தது. இது நஜ்லா வின் தந்தைக்கும் தெரிந்தே இருந்தது. அங்கிருக்கும் குழந்தைகளில் நஜ்லா தான் மிகவும் புத்திசாலித்தனமான பெண் குழந்தை. தந்தை ராணுவ மையத்திலிருந்து காரில் இருந்து வீட்டிற்கு திரும்பி வரும்போது 3 வயது நஜ்லா காரை நோக்கி ஓடிவருவாள். அவளை அவளது அப்பா அழைத்துக்கொண்டு வீடுதிரும்புவார்.
வெடித்த கார் குண்டு சிதறிய உடல்
ஏப்ரல் 19,2008 அன்று வழக்கம் போல அப்பாவின் கார் வீட்டை நோக்கி வந்தது. நஜ்லா கைகளை விரித்துக்கொண்டு ஆரவாரமாக அப்பாவின் காரை நோக்கி ஓடினாள். அப்பா கார் கதவை திறப்பதற்கு முன்னதாக கார் கதவில் கையை வைத்தால் நஜ்லா. நஜ்லாவின் அப்பாவை கொல்ல தீவிரவாதிகள் ஏற்கனவே காரில் பொருத்திரியிருந்த குண்டு வெடித்தது. நஜ்லா தூக்கி வீசப்பட்டாள், அவளது கைகளில் ஒன்று பறந்து சென்று அருகில் உள்ள வீட்டில் விழுந்தது. பெரும் ரத்த வெள்ளத்தில் சிதறிக்கிடந்தவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள். ஏற்கனவே அதிக ரத்தம் போய்விட்டதால் காப்பாற்றுவது கடினம் தான் என மருத்துவர்கள் கூற பின்னர் ஒருவழியாக பிழைத்துவந்தாள் நஜ்லா.
இப்போது அவளுக்கு ஒரு கால் தொடையிலிருந்து இல்லை, இன்னொரு கால் முட்டியிலிருந்து இல்லை, ஒரு கை முட்டியிலிருந்து இல்லை. தான் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு இருக்கிறோம் என்பது 4 ஆவது படிக்கும் போதுதான் நஜ்லாவிற்கு புரிந்திருக்கிறது.
ஈராக்கின் சிறந்த டேபிள் டென்னிஸ் பிளேயர்
என்னுடைய பள்ளி நாட்களில் என் வயது சிறுவர்கள் விளையாடுவார்கள், நடப்பார்கள், எதிர்காலத்தில் என்ன செய்வோம் என பேசுவார்கள் ,நான் வீல் சேரில் அமர்ந்துகொண்டு அவர்களைப்போல ஓட முடியுமா நடக்க முடியுமா என சிந்தித்துக்கொண்டிருப்பேன். 5 வருடங்களுக்கு முன்பு வீட்டுப்பாடங்களை செய்தபிறகு விளையாடுவதற்கு டேபிள் டென்னிஸ் வாங்கி அதில் விளையாடத்துவங்கினாள். வலது கை பழக்கம் கொண்ட நஜ்லா தாக்குதலில் வலது கையைத்தான் இழந்திருந்தாள். ஆகவே இடது கையை பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டிய தேவை இருந்தது.
அவளது அப்பாவின் $400 டாலர் ஓய்வூதியத்தை மட்டுமே நம்பியிருந்த குடும்பத்தில் இவளுக்கு உபகரணங்கள் வாங்குவது அவ்வளவு எளிமையானதாக இருக்கவில்லை. ஆனாலும் மிகக்கடுமையாக போராடி தன்னுடைய 12 ஆம் வயதில் ஈராக் நாட்டின் ஊனமுற்றோருக்கான அணியில் இடம் பிடித்தார். கடந்த ஜூன் மாதம் எகிப்தில் நடைபெற்ற போட்டியில் நான்காவது சில்வர் மற்றும் வெண்கல பதக்கங்களை பெற்றார்.
நாம் கவனிக்க வேண்டியது
2003 ஆம் ஆண்டு அமெரிக்காவின் படையெடுப்பு மற்றும் அதற்க்கு பின்பாக நடந்த உள்நாட்டுப்போருக்கு பிறகு ஈராக் சார்பில் ஊனமுற்றோர் பிரிவில் பங்கேற்பவர்கள் 70 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் அந்த எண்னிக்கை தீவிரவாத தாக்குதல் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. அவர்கள் மிகைத்திறமையானவர்களாக இருந்த போதிலும் அவர்களுக்கு கடந்த கால நினைவுகள் அவர்களை சோகப்படுத்துகின்றன என கூறுகிறார்கள்.
நஜ்லா இமாத் லாப்டா ஒரு உதாரணம் தான் நண்பர்களே! இன்னும் ஏராளமான மனிதர்கள் இங்கு இப்படித்தான் கொடுமைகளை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள். எதிர்பாராத விபத்தினால் இப்படி நடந்தால் பரவாயில்லை, ஆனால் தங்களது சுய லாபத்துக்காக நடத்தப்படும் வெறித்தாக்குதல்களில் அப்பாவிகள் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்க்கையை இழப்பது என்பது எவ்வளவு பெரிய கொடுமையான விசயம். நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் இதனை உணரவேண்டும். நாம் செய்யும் தவறான செயல்காளால் அப்பாவிகள் பாதிக்கப்படுவார்கள் என தெரிந்தால் அதை செய்திடவே கூடாது என்பதற்காகவே இந்தப்பதிவு.
எங்களுடைய பதிவுகளை நேரடியாக வாட்ஸ்ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்து இணைந்திடுங்கள்_ : https://chat.whatsapp.com/BpBkoxYbAdXLPCC0kZ4Apg
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!
Pingback:சோம்பேறித்தனத்திற்கு முடிவு கட்டுங்கள் | Say good bye to Laziness – பாமரன் கருத்து