கற்பு , உடலுறவு ,மதம் , வன்முறை என எதுவுமே தெரிந்திருக்க வாய்ப்பில்லாத வயது அந்த சிறுமிக்கு , வயது எட்டு ,பெயர் ஆசிபா . மயக்கமருந்து கொடுத்து பலமுறை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இறந்துபோகிறாள் அந்த பிஞ்சு குழந்தை. தேகத்தை சிதைத்து வெறியாட்டம் போட்டிடுக்கிறது சில இரண்டுகால் மானுட சிந்தனையற்ற கொடூர மிருகங்கள் .
முதற்கட்ட விசாரணையில், முஸ்லீம் மக்கள் இந்துக்களை கண்டால் பயப்படவேண்டும் என்கிற நோக்கத்தில் செய்யப்பட்டதாக கூறுகிறார்கள் .
இந்தியா முழுமைக்கும் இந்நிகழ்வு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது . சாதி மதம் பாராமல் அனைவரது குரலும் அந்த கயவர்களுக்கு எதிராக ஒலிக்கிறது . அரசில் இருப்பவர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களும் வழக்கம் போல கண்டனத்தை தெரிவித்ததோடு “நீதி கிடைக்கும்” என ஆறுதல் கூறினர் .
இந்த ஆசிபாவிற்க்காக வாதாட இருக்கும் வழக்கறிஞர் தீபிகா சிங் ராஜவாட் , தனக்கு அச்சுறுத்துதல் இருப்பதாக கூறுகிறார் , இந்த வழக்கில் ஒரு முஸ்லீம் குழந்தைக்காக வழக்காட இருப்பதால் இந்து மதத்திற்கு எதிரானவள் போல சித்தரிக்கிறார்கள் , கொலை செய்யப்படலாம் என அஞ்சுவதாக கூறுகிறார் .
இந்த நிகழ்வுகள் அனைத்தும் எனக்கு மிகப்பெரிய அச்சத்தை கொடுக்கின்றது , நம் இந்தியா இன்னொரு ஆசிபா வன்கொடுமைக்கு பலியாவதை தடுக்குமளவுக்கு உருப்படியாக செய்திருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்பதே உண்மை .
பிரதமர் தொடங்கி சாதாரண பாமரன் வரை ஆசிபாவுக்காக குரல் கொடுக்க தவறவில்லை , ஆனால் இன்னொரு ஆசிபா தடுக்க இவர்களின் குரல் போதுமானதா என்றால் நிச்சயமாக இல்லை . அதனை உணர்ந்தவர்களும் செய்ய வேண்டியவர்களும் இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க செய்யவேண்டியதை இன்னும் செய்யவில்லை.
சட்டங்கள் எங்கே ? நீதிமன்றங்கள் எங்கே ?
இவ்வளவு கொடுமைகளை கண்ட பின்னரும் குற்றவாளிகளுக்கு உடனடி கடுமையான தண்டணை வழங்கும் வகையில் சட்டங்களை மாற்றாமல் வேடிக்கை பார்க்கிறோம் .
அனைத்து வகையான குற்றங்களுக்கும் ஒரே நீதிமன்றங்களை அணுகி பல யுகங்கள் நீதிக்காக காத்திருக்கும் கேவலமான நிலையை வைத்திருக்கிறோம் .
மறைந்த குழந்தைக்கு பரிந்து பேசுபவர்களையும் , வழக்காட நினைப்பவர்களையும் குற்றவாளிகள் மிரட்டும் அளவிற்கு தேசத்தை வைத்திருக்கின்றோம் .
மத குழுக்கள் என்கிற பெயரால் திரியும் வன்முறை கும்பல்களை எந்தவித சங்கடமும் இன்றி சமூகத்தில் செயல்பட விட்டிருக்கிறோம் .
அதிகார அல்லது பிரபல நபர்களின் குழந்தைகளுக்கு இக்கொடுமை நடந்திருந்தால் இதே இந்தியா விரைவாக செயல்பட்டிருக்குமோ என்கிற சந்தேகம் எனக்கு வலுக்கிறது .
இப்படி இருந்தால் இன்னொரு ஆசிஃபாவை இவ்வாறு காப்பாற்ற முடியும் ?
என்ன செய்யலாம் ?
கடுமையான சட்டங்கள் , விரைவான தீர்ப்புகள் வழங்க தனி நீதிமன்றங்கள் அவசியம் .
மேல்முறையீடு , குடியரசுத்தலைவர் கருணை மனு ஆகிய எந்த பலன்களையும் இக்குற்றவாளிகளுக்கு கொடுக்காமல் உடனடி தண்டணை அவசியம் .
சமூக சிந்தனையில் மாற்றங்களை ஏற்படுத்திட கல்வித்திட்டதில் பெண்கள் குறித்த புரிதலை ஆண்கள் புரிந்துகொள்ளுமளவிற்கு இடம்பெற செய்யலாம் .
குறைந்தபட்சம் ஆசிபாவின் மரணத்திலிருந்து ஏதாவது ஒன்றினை இந்த சமூகம் கற்றுக்கொண்டு வரும்காலங்களில் அதுபோன்ற வருந்தக்கூடிய நிகழ்வுகளை தவிர்க்க முயல வேண்டும் .
பாமரன் கருத்து