அடிப்படை சட்டங்களை பாட புத்தகமாக்குங்கள்
இந்தியா ஜனநாயக நாடு, அனைவரும் சட்டத்தின் முன் சமம்
மக்களால் மக்களுக்காக மக்களே உருவாக்கிக்கொண்ட அரசமைப்பு சட்டத்தின்படி அமைந்த அரசு இந்தியா என்பதனை நிறுவுவதற்காக இவையெல்லாம் நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட பாடங்கள் . ஆனால் எதார்த்தம் அப்படியா இருக்கின்றது ?
அந்த சட்டங்கள் குறித்த ஏதேனும் ஒரு புரிதல் மக்களிடம் இருக்கின்றதா ?
அடிப்படை சட்டங்களாவது அனைவருக்கும் தெரிந்திருக்கிறதா ?
5 சட்டபிரிவுகளை சரியாக கூறிட 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் முடியுமா?
முடியாது, பல Phd பட்டம் பெற்றவர்களால் கூட முடியாது. காரணம் அதற்கான சூழல் , கல்விமுறை இங்கு இல்லை.
ஒரு விதி அரசமைப்பு சட்டமாக அங்கீகரிக்கப்பட அது பாராளுமன்றத்திலோ அல்லது சட்டமன்றத்திலோ மக்கள் பிரதிநிதிகளால் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். அப்படி பிரதிநிதி வாக்களிக்கும் போது அதன் பொருள் இந்திய மக்கள் அனைவரும் அந்த விதியினை புரிந்துகொண்டு அரசமைப்பு சட்டமாக ஏற்றுக்கொண்டுள்ளோம் என்பதே . அப்படியானால் அந்த விதி நமக்கு தெரிந்திருக்கிறது என்பது தான் மறைமுகமான பொருள் .
ஒவ்வொருவருக்கும் சட்டம் தெரிய வேண்டும்
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் சட்டப்படி தான் நடந்துகொள்ள வேண்டும் . ஒருவேளை நாம் எவருக்கேனும் தீங்கு செய்தாலோ அல்லது பிறர் நமக்கு தீங்கு செய்தாலோ நாம் அடுத்ததாக செல்லவிருக்கும் இடம் காவல்துறை , பிறகு நீதிமன்றம் . ஒருவர் தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் செல்லக்கூடிய இடங்கள் இவை.
அங்கு சென்றால் அவர்கள் இயங்குவது முற்றிலும் அரசமைப்பு சட்டப்படிதான் . நமக்கு அரசமைப்பு சட்டம் குறித்த தெளிவு இல்லாவிடில் நாம் நமக்கான நீதியை அனைத்து நேரங்களிலும் பெற்றுவிட முடியாது .
நம் அன்றாட வாழ்வினை சிறப்பாக நடத்திட வேண்டுமெனில் நமக்கான உரிமைகள் என்ன என்பதனையும் சில அரசமைப்பு சட்டங்களையும் தெரிந்துவைத்திருப்பது அவசியம்
நம் மாணவர்கள் வாழ்வின் பெரும்பாலான நேரங்களில் உதவாத கடினமான கணக்குகளையும் அறிவியல் ஆய்வுகளையும் படிக்கின்றனர் . மனப்பாடம் செய்கின்றனர் , நியாபகத்தில் வைத்துக்கொள்கின்றனர் . ஆனால் அன்றாட வாழ்விற்கு அடிப்படை தேவையான அரசமைப்பு சட்டம் குறித்தோ ஒன்றுமே அறியாதவர்களாக இருக்கின்றனர் . இது மிகப்பெரிய அநியாயம் . இது தெரிந்து செய்யப்படுகிறதா என தெரியவில்லை. ஆனால் இனி அது நடக்க கூடாது.
எப்படி திருக்குறள் ஒவ்வொரு வருடத்திலும் கட்டாயமாக இருக்கின்றதோ அதனைபோலவே அடிப்படையான சட்டங்களும் பாடப்புத்தகத்தில் இருக்கவேண்டும் . தனிப்பாடமாக கூட கொண்டுவரப்படவேண்டும் . தேர்வுகளில் கேள்விகள் கேட்கப்பட வேண்டும்.
அடுத்த தலைமுறையை அரசியல் சட்டம் தெரிந்த தலைமுறையாக உருவாக்க வேண்டும்