நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுவது சாத்தியமா? வாய்ப்புகள் சவால்கள்

இந்தியாவில் ஒருவர் மருத்துவர் ஆக வேண்டுமெனில் நீட் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றால் மட்டும் தான் சாத்தியம். சமூக நீதிக்கு எதிராகவும் அரசுப்பள்ளி மாணவர்களின் நலனுக்கு எதிராகவும் நீட் தேர்வு இருப்பதனால் அதனை நீக்க பல்வேறு முயற்சிகள் நடந்து வருகின்றன. நீட் தேர்வை நீக்க முடியுமா? அதிலே இருக்கும் சவால்கள் என்னென்ன? வாருங்கள் பேசலாம். 

இந்தியாவில் ஒருவர் மருத்துவர் ஆக வேண்டுமெனில் அவர் நீட் தேர்வில் பங்கேற்று தகுதி பெற்றால் தான் முடியும். இல்லையெனில் மருத்துவர் ஆக முடியாது. நீட் தேர்வு என்பது சமூக நீதிக்கு எதிராகவும் இருக்கிறது , அரசுப்பள்ளி மற்றும் ஏழை எளியவர்களின் பிள்ளைகள் நீட் தேர்வுக்கான பயிற்சியை பெற முடியாமல் அதிலே குறைவான மதிப்பெண்களை பெறுவதனால் அவர்களால் மருத்துவர் ஆக முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான குரல் என்பது வலுவாக இருக்கிறது. தொடர்ச்சியான மாணவர்களின் தற்கொலை முடிவுகளும் அரசாங்கங்களும் அரசியல் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை வலுவாக நடத்திட உந்துகின்றன.

நாடு முழுமைக்கும் மத்திய அரசால் நடத்தப்படுகிற ஒரு தேர்வு தான் நீட் தேர்வு. உச்சநீதிமன்றத்திலும் நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டுமென நடைபெற்ற வழக்குகள் தோல்வியை சந்தித்து அதன் ஆதரவையும் பெற்றுள்ளது. இந்த சூழ்நிலையில் சிலர் நீட் தேர்வை ரத்து செய்ய மாநில அரசால் முடியும் என்கிறார்கள். சிலரோ மாநில அரசால் நீட் தேர்வை ரத்து செய்திட முடியாது என்கிறார்கள். தற்போது திமுகவின் அரசு அமைத்திருக்கும் சூழலில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்கான மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி இருக்கிறார்கள்.

நீட் தேர்வை ரத்து செய்திட தமிழக அரசால் முடியுமா? இதில் இருக்கும் சவால்கள் என்ன? வாருங்கள் விரிவாக அலசலாம்.

மத்திய அரசின் சட்டத்தை மாநில அரசால் மாற்ற முடியுமா?

மத்திய அரசு ஒரு சட்டம் இயற்றுகிறது என்றால் அது நாடு முழுமைக்குமான சட்டமாகவே இருக்கும். அப்படி மத்திய அரசு நாடு முழுமைக்கும் இயற்றுகிற ஒரு சட்டத்தை மாநில அரசால் மாற்ற முடியுமா என்றால் “முடியும்” என்பது தான் அதற்கு சரியான பதிலாக இருக்க முடியும். ஆனால் அதற்கு சில விதிகள் உண்டு. அதன்படி, மாற்றப்படும் சட்டம் என்பது குறிப்பிட்ட மாநிலத்திற்கு மட்டுமே உரியதாக இருக்கும். அதோடு, மத்திய அரசின் சட்டத்தில் மாநில அரசு மாற்றம் கொண்டுவர வேண்டுமெனில் அதற்கு இந்திய குடியரசுத் தலைவரின் கையொப்பமும் அவசியம். அப்போது தான் அந்த சட்டம் அமலுக்கு வர முடியும்.

உதாரணத்திற்கு, ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழகத்தில் மாபெரும் போராட்டம் நடைபெற்றபோது காளைகளை பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் இருந்து அகற்ற தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பிறகு தான் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது.

ஆனால் ஜனாதிபதி என்பவர் மாநில அரசு செய்திடும் திருத்தத்திற்கு எல்லாம் உடனடியாக ஒப்புதலை தந்துவிட மாட்டார். மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தால் தான் ஜனாதிபதி கையெழுத்து இடுவார். ஆனால் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு நீட் தேர்வை நடத்துவதில் பெரும் உறுதியாக இருக்கிறது. ஆகவே நிச்சயமாக தமிழகம் கொண்டுவந்த சட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்க மாட்டார்கள்.

திமுகவின் எம்பி வில்சன் என்ன சொல்கிறார்?

திமுகவின் சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக இருக்கக்கூடியவரும் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலாகவும் இருந்தவரான வில்சன் அவர்கள் இந்த விசயத்தில் சற்று மாறுதலான விசயத்தை சொல்கிறார். அதன்படி, அப்போதைய முதல்வர் திரு மு கருணாநிதி அவர்கள் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்ணை வைத்து மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கையை நடத்தும் சட்ட விதிக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுவிட்டதாகவும் அந்த ஒப்புதலைக்கொண்டே நீட் தேர்வை எதிர்க்க முடியும் என்றும் கூறுகிறார். ஆனால் இந்த சட்டவிதி குறித்து அதிமுக அரசாங்கம் எந்தவித தகவலையும் உச்சநீதிமன்றத்தில் சொல்லி வாதாடவில்லை என்றும் உச்சநீதிமன்றமும் இதனை கவனிக்கத்தவறிவிட்டதாகவும் சொல்கிறார்.

ஆனால் இதில் சில கேள்விகளும் இருக்கவே செய்கின்றன. அப்படியொரு சட்டவிதி இருக்கிறதென்றால் ஏன் தற்போதைய தமிழக அரசு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்? நேரடியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கலாமே என்ற அடிப்படைக்கேள்வியும் எழுகிறது.

பாமரன் கருத்து

நீட் தேர்வு என்பது அகில இந்தியாவிற்கும் நடத்தப்படும் ஒரு தேர்வாக மாறி இருக்கிறது. மற்ற மாநிலங்கள் நீட் தேர்வுக்கு எதிராக பெரிய எதிர்ப்பை பதிவு செய்யவில்லை, ஆனால் தமிழகம் அதனை தொடர்ச்சியாக செய்துவருகிறது. இது தமிழகத்தின் கோரிக்கைக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கிறது. அதேபோல, குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெற வேண்டும் எனில் அதற்கு மத்திய அரசின் ஆதரவு நிச்சயமாக தேவைப்படும். பாஜக முழு ஆதரவோடு நீட் தேர்வை நடத்திவரும் சூழ்நிலையில் நிச்சயமாக அதற்கு எதிரான சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் தருவார்கள் என கனவிலும் நினைக்க முடியாது.

தமிழக அரசு நீட் தேர்வு விலக்கு பெறுவதற்கு சிறப்பாக செய்த ஒரே விசயம், நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்வதற்கு ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு அமைத்து அது சொல்லும் கருத்துக்களின் அடிப்படையில் சட்ட மசோதாவை நிறைவேற்றியது தான். இதனால் ஓரளவிற்கு தமிழக அரசின் வாதத்திற்கு ஆதரவு கிட்டலாம்.

நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவது அவ்வளவு சாத்தியம் இல்லாத சூழ்நிலையில் சில விசயங்களை செய்யவாவது தமிழக அரசு முயற்சி செய்யலாம். அதன்படி, ஏழை எளிய மாணவர்களும் கற்கும் தமிழக அரசின் பாடத்திட்டத்தில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யலாம். அதேபோல, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பான பயிற்சியாளர்களைக்கொண்டு நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடுகளை செய்யலாம்.

இதனை தமிழக அரசு தற்காலிக ஏற்பாடாக செய்யலாம். ஒருவேளை, திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தால் அப்போது திமுக முயற்சி செய்து நீட் தேர்வையே ரத்து செய்யவும் சாத்தியக்கூறு இருக்கிறது.

உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள்.






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *