இறந்தவர்களின் உடல்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவுமா? | Covid 19 from dead bodies

இறந்தவர்களின் உடல்களை எரியூட்டுவதற்கு சில இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதற்கு மிக முக்கியக்காரணம், அனுமதி அளித்தால் எங்கே தங்கள் பகுதியில் வைரஸ் பரவிவிடுமோ என்கிற அச்சம் தான். தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால்…..
doctor dead body waiting for burying

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவர் இறந்த பின்பு அவரது உடலை அடக்கம் செய்ய முயற்சி செய்தபோது பொதுமக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்காரணமாக  அடக்கம் செய்ய முடியாமல் திணறிய சுகாதாரத்துறையினரும் காவல்துறையினரும் பின்னர் ஒரு எரியூட்டும் இடத்தில் எரியூட்டினர். பொதுமக்கள் இப்படி நடந்துகொண்டமைக்கு பல்வேறு இடங்களில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. அதேசமயம் பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டுதான் இப்படி நடந்துகொள்கிறார்கள் ஆகையால் அவர்களை குற்றம் சொல்வது சரியல்ல என்ற கருத்தும் நிலவுகிறது.

பொதுமக்கள் இப்படி நடந்துகொள்வதற்கு காரணம் அவர்களிடத்தில் சரியான புரிதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்த தவறியமை தான் என்பதே சரியான காரணமாக இருக்க முடியும். இந்தப்பதிவில் இதுகுறித்து சில தகவல்களைத்தான் பார்க்க இருக்கிறோம்.

இறந்தவர்களின் உடல்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவுமா?

இறந்தவர்களின் உடல்களில் இருந்து வைரஸ் பிறருக்கு பரவ வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இறந்த உடலில் இருந்து எத்தனை மணி நேரம் வரை வைரஸ் பரவல் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான தெளிவான ஆய்வு முடிவு இன்னும் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் இறந்தவர் உடலை எரியூட்டியதற்கு பின்பாக அதிலிருந்து வெளியேறும் காற்றினாலோ அல்லது மாசினாலோ வைரஸ் பரவல் நடக்காது [இதை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும்]. இறந்தவர் உடலில் இருந்தும் வைரஸ் பரவல் நடக்க வாய்ப்பிருப்பதை அறிந்துதான் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தலின்படி இந்திய அரசு சில வழிமுறைகளை கொடுத்திருக்கிறது.

இறந்தவர் உடலை பாதுகாப்பு அறையில் இருந்து எப்படி வெளியே கொண்டு வர வேண்டும்?

doctor dead body waiting for burying

கோவிட் 19 அல்லது கொரோனா வைரஸ் பாதித்த ஒருவர் நிச்சயமாக பாதுகாக்கப்பட்ட தனி அறையில் தான் இருந்திருப்பார். ஆகவே இறந்தவர் உடலை வெளியே கொண்டு வர இருக்கும் ஊழியர்கள் நிச்சயமாக பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருப்பது கட்டாயம். அதன்படி, தண்ணீர் உடலில் படாத கவசம், கண்ணாடி, N95 முகமூடி, கையுறைகள் இவை அனைத்தையும் அணிந்திருக்க வேண்டும். இறந்தவரின் உடலில் பொருத்தப்பட்டிருந்த அனைத்து மருத்துவ சாதனங்களையும் அகற்ற வேண்டும். அப்படி அகற்றும் போது உடலில் ஏற்பட்டிருக்கும் துளைகளை சுத்தப்படுத்தி அடைக்க வேண்டும்.

தண்ணீர் வெளியேராத ஒரு பிளாஸ்டிக் பேக்கில் வைத்து உடலை அடைக்க வேண்டும். பிறகு உடல் எடுத்துச்செல்லப்பட்ட பின்பு அந்த அறைய 30 நிமிடம் பரிந்துரைக்கப்பட்ட கிருமி நாசினியால் சுத்தப்படுத்தி காய வைக்க  வேண்டும்.

இறந்தவர் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்படி செய்ய வேண்டும்?

இறுதி சடங்கில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதற்காக அதிகம் கூடாமல் பார்த்துக்கொள்ளப்பட வேண்டும். அதேபோல இறந்தவரின் உடலை உறவினர்கள் விரும்பினால் இறுதியாக ஒருமுறை பார்க்க கேட்கலாம். அப்படி கேட்டால் பாதுகாப்பு கவச உடை அணிந்துள்ள அதிகாரி ஜிப்பை திறந்து முகத்தை பார்த்துக்கொள்ள அனுமதிப்பார். ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும் இறந்தவர் உடலை யாரும் தொடவோ, முத்தம் கொடுக்கவோ, கட்டியணைத்து அழவோ அனுமதி கிடையாது.

 

அதேபோல சொந்தங்கள் விரும்பினால் மேற்கூறிய கட்டுப்பாடுகளுடன் இறுதி சடங்குகளை செய்துகொள்ளலாம். புனிதநீரை தெளிப்பது, புனித வாசகங்களை வாசிப்பது போன்றவற்றை செய்துகொள்ளலாம்.

அதேபோலவே தான், இறந்தவர்களின் உடலுக்கு எம்பாமிங் [Embalming] செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. தேவை இல்லாவிடில் உடற்கூறாய்வும் செய்யவேண்டியது இல்லை.

பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்?

வைரஸ் பரவலை தடுக்க அரசு பெரும் முயற்சி செய்துவருகிறது. அப்படி இருக்கும் போது இறந்தவர்களின் உடல்களில் இருந்து பொதுமக்களுக்கு வைரஸ் பரவுவதை அரசு எப்படி அனுமதிக்கும்? நிச்சயமாக அனுமதிக்காது. அந்த நம்பிக்கையை பொதுமக்களாகிய நாம் அரசின் மீது வைக்க வேண்டும். இறந்தவர்களை தகுந்த மரியாதையோடு அனுப்பி வைப்பதும் கூட நமது கடமைகளில் ஒன்று. அவர்களும் இந்த பூமிக்கு சொந்தமானவர்கள் தானே. இந்த சூழலில் தான் நாம் ஒற்றுமையோடு சிந்தித்து செயல்பட வேண்டும்.

 

ஆகவே பரிசோதனை நிலையங்கள் எங்கள் பகுதிகளில் அமைக்க வேண்டாம் என எதிர்ப்பதோ அல்லது நோயால் பாதித்தவர்களை எங்கள் பகுதிகளில் எரிக்க விடமாட்டோம் என்பதோ சரியல்ல. கரோனா வைரஸை வேண்டுமென்றே யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அது நமது ஒற்றுமையை சோதித்துப்பார்க்க நினைக்கிறது. ஒற்றுமையுடன் நாம் போராடினால் நிச்சயம் நாமே வெல்வோம்.

இதுபோன்ற பதிவுகளை உங்களது வாட்ஸ்ஆப்பில் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்து இணைந்திடுங்கள் –


Get updates via WhatsApp





எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *