இளையராஜாவும் எம்பி பதவியும் | விமர்சிப்போர் தவறாமல் படிக்க

இசைஞானி இளையராஜா அவர்கள் மாநிலங்களவையில் நியமன உறுப்பினராக (MP) குடியரசுத்தலைவர் அவர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இளையராஜா அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை அம்பேத்கர் அவர்களோடு ஒப்பிட்டு பேசியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் இந்த நியமன பதவி அவருக்கு வழங்கப்பட்டு இருப்பதும் சில விமர்சனங்களை பெற்று தந்துள்ளது. ஆனால், இது விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய விசயமா அல்லது கடந்து செல்ல வேண்டிய விசயமா என்பதை நாம் விரிவாக பேசலாம்.

இளையராஜா அவர்களுக்கு இப்போது வழங்கப்பட்டு இருப்பது மாநிலங்கள் அவையில் நியமன உறுப்பினர் பதவி தான். இந்த நியமன பதவிகளில் பல துறைகளில் சிறந்து விளங்குகிற ஆளுமைகளை குடியரசுத்தலைவர் நியமனம் செய்து வைப்பார். அவர்களின் தனித்திறமை இந்த தேசத்தின் வளர்ச்சிக்கு அவசியம் என்பதனால் இந்த நியமன பதவிகள் உள்ளன. இளையராஜா அவர்களோடு PT உஷா உட்பட நால்வர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். சிலர் இளையராஜா அவர்களுக்கு இந்த எம்பி பதவி கிடைத்ததை விமர்சிக்க முக்கியக்காரணம், அவரது மோடி – அம்பேத்கர் ஒப்பீட்டு பேச்சு தான். அவரது பாஜக ஆதரவு நிலைபாட்டுக்காகவே இந்தப்பதவி வழங்கப்பட்டு இருப்பதாக சிலர் கருதுகிறார்கள்.

ஆனால், அது சரியா? என்ற கேள்வியை முன்வைக்க வேண்டியது அவசியம். 

சாதாரண பின்புலத்தில் இருந்து வந்து இன்று இசை உலகின் மாமேதையாக வளம் வருகிறார் எனில் அவருடைய திறமை, உழைப்பு ஆகியவையே அதற்கு காரணம். யாருடைய தயவும் ஆதரவும் இல்லாமல் தான் இளையராஜா உருவானார். இளையராஜா அவர்களுக்கு எம்பி பதவி எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது தான் எதார்த்தம். அவர் இசை உலகின் மாமேதை. அவருக்கு எதை நாம் கொடுத்தாலும் அது ஈடாகாது என்பதே எதார்த்தம். அதோடு, நியமன உறுப்பினராக அவரை நியமனம் செய்திட தேவையான தகுதி அவருக்கு நிறைய உள்ளது. ஆகவே, அவர் தகுதி இல்லாமல் இந்தப்பதவியை பெற்றுள்ளது போல விமர்சிக்கக் கூடாது.

பாஜக ஆதரவு நிலைப்பாட்டால் தான் இந்தப்பதவி என விமர்சனம் சொல்கிறார்கள். நான் கேட்கிறேன், இளையராஜா இசை உலகின் மாமேதை என்பதை அனைவரும் அறிந்துள்ளோம். அவர் பாரத ரத்னா விருது பெற தகுதியானவர் என்பதையும் நாம் அறிவோம். அப்படி இருக்கும் போது அடித்தட்டு மக்களின் கட்சியாக தங்களை காட்டிக்கொள்ளும் இருபெரும் திராவிட கட்சிகள் ஏன் அதனை அவருக்கு பெற்றுத்தரவில்லை, குறைந்தது முயற்சி கூட செய்யவில்லை என்ற கேள்வியை நம்மால் எப்படி கடந்து போக முடியும். ஒருவேளை, அவருக்கு நாம் அதனை பெற்றுத் தந்திருந்தால் அவர் இந்த அற்ப பதவிகளை எல்லாம் வேண்டாம் என மறுத்திருப்பார்.

ஒருவேளை, தற்போது தமிழகத்தில் தங்களை வளர்க்க நினைக்கும் பாஜக மக்களிடம் நல்ல எண்ணத்தை விதைக்க அவருக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி அதைப் பெற்று  கொடுத்தால் அதையும் நாம் விமர்சிக்க மட்டுமே செய்வோமா?  அப்படி நாம் செய்வோமாயின் நாம் எண்ணக்குறைபாடு கொண்டவர்கள் என்றே கருத முடியும். 

நாம் ஆதரிக்கும் கட்சிகளை ஆதரிக்கும் திறமையாளர்கள் விருது, பதவி பெரும்போது அதனை விமர்சனம் செய்யாமல் கொண்டாடும் சிலர், இன்னொருஇன்னொரு திறமையாளர் மற்றொரு கட்சி ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருந்தால் அவருக்கு விருது, பதவி கிடைத்தால் அவை அனைத்தும் கட்சியால் தான் கிடைத்தது என விமர்சனம் செய்வார்கள். இது எவ்வளவு பெரிய அபத்தம்.

அதைத்தான் நாம் இளையராஜா அவர்களுக்கு செய்துகொண்டு இருக்கிறோம். நாமும் தர மாட்டோம், பெற்றுத்தரவும் முயற்சிக்க மாட்டோம் ஆனால் இன்னொருவர் கொடுத்தால் விமர்சிப்போம் என்றால் நாம் நமது எண்ணத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றே சொல்ல வேண்டும்.

அரசியல் நிலைப்பாடு என்பது அவரவர் சுய விருப்பம். நமக்கு எப்படி அந்த சுதந்திரம் உள்ளதோ அதைபோலவே அவருக்கும் உள்ளது. தகுதி இல்லாமல் ஒருவர் பதவியோ ஆதாயமோ பெறுகிறார் எனில் நாம் விமர்சிப்பது சரியானதாக இருக்கும்.

இளையராஜா அவர்களுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட வேண்டியது அவசியம். அதனை அவருக்கு பெற்றுத்தர தமிழர்களாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து வலியுறுத்தி பெற்றுத்தர வேண்டும். அதனை நோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்பது தான் சரியான ஒன்றாக இருக்க முடியும். 

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *