கிரெடிட் கார்டை புத்திசாலித்தனமாக பயன்படுத்த 10 யோசனைகள்
கிரெடிட் கார்டு [Credit Card] வைத்துக்கொள்வது மிகவும் ஆபத்தானது. நம்மை அது கடனாளி ஆக்கிவிடும் என பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் பலர் கிரெடிட் கார்டை மிகவும் சரியாக, புத்திசாலித்தனமாக பயன்படுத்தி பல நன்மைகளையும் பெற்றுவருகிறார்கள் பலர். அவர்களைப்போல நீங்களும் கிரெடிட் கார்டை மிகச்சரியாக பயன்படுத்த தேவைப்படும் 10 யோசனைகள் உங்களுக்காக இங்கே.
1. தேவையிருந்தால் மட்டும் கிரெடிட் கார்டு வாங்குங்கள்
இன்றைய காலகட்டங்களில் ஒருவர் வங்கிக்கணக்கு துவங்கும்போதே அவருக்கு குறைந்தபட்ச அனுமதி தொகை [Minimum Balance] கொண்ட கிரெடிட் கார்டை பல வங்கிகள் வழங்குகின்றன. பலருக்கு கிரெடிட் கார்டு வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறி தினசரி பல்வேறு அழைப்புகளும் வருகின்றன. இதனால் இன்று கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை என்பது கணிசமாக உயர்ந்துள்ளது.
கிரெடிட் கார்டு உங்களுக்கு தேவைப்படுமா என்ற கேள்விக்கு பதில் தெரிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல் நீங்கள் கிரெடிட் கார்டு மூலமாக செலவு செய்த தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திருப்பி செலுத்தும் திறன் உங்களுக்கு உள்ளதா என்பதற்கும் பதில் தெரிந்துகொண்டு கிரெடிட் கார்டு வாங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு குடும்பத்தலைவர் எனில், மாத இறுதியில் பண கஷ்டம் ஏற்படும் சூழலில் கிரெடிட் கார்டு பயன்படுத்தி குடும்பத்திற்கு தேவையான பொருள்களை வாங்கிக்கொண்டு மாத சம்பளம் வந்த உடனேயே செலவு செய்த தொகையை திரும்ப கட்டிவிட முடியும் என்றால் நீங்கள் கிரெடிட் கார்டு வாங்கலாம். ஒருமுறை நீங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கிரெடிட் கார்டு பில்லை [Credit Card Bill] திருப்பி கட்டவில்லை என்றாலும் கூட நீங்கள் மிக அதிகமான வட்டித்தொகையை கட்ட வேண்டி இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது உங்களுக்கு தேவையில்லாத சுமையை கொடுத்துவிடும்.
2. அதிக கிரெடிட் லிமிட்டை கேட்டு வாங்குங்கள்
நீங்கள் ஏதேனும் ஒரு வங்கியில் லோன் [bank loan] வாங்க போகிறீர்கள் என்றால் அவர்கள் உங்களுடைய Credit Score அல்லது CIBIL Score ஐ பார்த்து தான் உங்களுக்கு லோன் வழங்குவார்கள். நீங்கள் உங்களுடைய வங்கிக்கணக்கில் எப்படி பரிமாற்றம் செய்கிறீர்கள், கிரெடிட் கார்டை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதையெல்லாம் பொறுத்துதான் CIBIL Score இருக்கும். நாம் அதிகமாக செலவு செய்துவிடுவோம் என்ற அச்சத்தில் குறைவான கிரெடிட் லிமிட்டை கேட்டு வாங்கினால் ஒருவேளை நீங்கள் சில மாதங்களில் அதனை தாண்டியும் செலவு செய்ய நேரலாம். ஆகவே அது உங்களது CIBIL Score ஐ பாதிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே நீங்கள் கிரெடிட் கார்டு [Credit Card] வாங்கும் போது அதிக கிரெடிட் லிமிட்டை கேட்டு வாங்குங்கள்.
செல்வமகள் சேமிப்பு திட்டம் | எப்படி துவங்குவது? விதிகள் என்னென்ன?
3. கிரெடிட் கார்டு ரிவார்ட்ஸ் ஐ சரியாக பயன்படுத்துங்கள்
நீங்கள் கிரெடிட் கார்டு வாங்குவதற்கு முன்னதாக அந்த கிரெடிட் கார்டு எந்தமாதிரியான ஆபர்களை வழங்குகிறது என்பதனை கவனியுங்கள். உதாரணத்திற்கு, ஒரு வங்கியானது பல்வேறு கிரெடிட் கார்டுகளை வழங்கும். சில கிரெடிட் கார்டுகள் வாகன எரிபொருள் போடும்போது ரிவார்டுகளை வழங்கும், சில கிரெடிட் கார்டுகள் திரைப்பட டிக்கெட் முன்பதிவு செய்தால் அதிலே ரிவார்டுகளை வழங்கும், சில கிரெடிட் கார்டுகள் உணவகங்களில் செலவு செய்திடும் போது அல்லது அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் ஸ்டோர்களில் செலவு செய்யும் போது ஆபர்களை தரும். ஆகவே, உங்களுக்கு தேவையான கிரெடிட் கார்டை வாங்கிக்கொள்ளுங்கள்.
4. சரியான நேரத்தில் பில்லை செலுத்திவிடுங்கள்
கிரெடிட் கார்டு என்பது நீங்கள் முன்னதாக செலவு செய்துவிட்டு பின்னர் குறிப்பிட்ட காலகெடுவுக்குள் பணத்தை வட்டியில்லாமல் கட்டும் ஒரு நடைமுறை தான். ஆனால் அதிலே ஒரு சூழ்ச்சியும் இருக்கிறது. ஒருவேளை நீங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணத்தை திருப்பி கட்டவில்லை எனில் நீங்கள் அதிகப்படியான வட்டித்தொகையை அந்த பணத்திற்கு சேர்த்து கட்டவேண்டி இருக்கும். பல இளைஞர்கள் இதிலே தான் சிக்கிக்கொண்டு தவிக்கிறார்கள். ஏதோ ஒரு அவசரத்தில் கிரெடிட் லிமிட் முழுவதையும் செலவு செய்துவிட்டு பின்னர் முழு பணத்தையும் கட்ட முடியாமல் அதிகப்படியான வட்டித்தொகையை கட்டிக்கொண்டு இருப்பார்கள். இதிலிருந்து மீளவே முடியாத பலரும் இருக்கவே செய்கிறார்கள்.
5. Minimum Payment போதுமென நினைக்காதீர்கள்
கிரெடிட் கார்டு பில்லை நீங்கள் திருப்பி செலுத்தும்போது உங்களுக்கு சில ஆப்ஷன்கள் வழங்கும். அதிலே ஒன்று தான் Minimum Payment. பலர் இதில் காண்பிக்கப்படும் குறைந்தபட்ச தொகையை மட்டும் கட்டிவிட்டால் போதும் மீதித்தொகையை அடுத்த மாதம் வட்டி இல்லாமல் கட்டிக்கொள்ளலாம் என நினைக்கிறார்கள். அது தவறு. Minimum Payment என்பது உங்களது கிரெடிட் கார்டை வங்கி முடக்கிவிடாமல் இருப்பதற்கு நீங்கள் கட்டவேண்டிய குறைந்தபட்ச பணமே. எப்போதும் நீங்கள் செலவு செய்த ஒட்டுமொத்த பணத்தையும் திருப்பி செலுத்திவிடுங்கள். அப்படி செலுத்தினால் நீங்கள் எந்தவித கட்டணமும் இல்லாமல் தப்பித்துக்கொள்ளலாம்.
6. ATM மையத்தில் கிரெடிட் கார்டை பயன்படுத்தாதீர்கள்
சிலர் கிரெடிட் கார்டை பணம் எடுக்க பயன்படுத்துகிறார்கள். சில வங்கிகள் இதற்கான வசதியையும் வழங்குகின்றன. ஆனால் நீங்கள் உங்களது கிரெடிட் கார்டை பயன்படுத்தி ATM மையத்தில் பணம் எடுத்தால் அதற்கு அதிகப்படியான கட்டணம் வாங்கப்படும் என்பதனை மறவாதீர்கள்.
7. கிரெடிட் கார்டு தகவலை பகிராதீர்கள்
கிரெடிட் கார்டு மட்டுமல்ல, உங்களது வங்கித்தகவல்களை பிறருக்கு தெரியாத விதத்தில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். தற்போது ஆன்லைன் திருடர்கள் வங்கித்தகவல்களை திருடி அதன்மூலமாக நமது பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள். ஆகவே எப்போதும் யாரிடமும் உங்களது கிரெடிட் கார்டு தகவல்களை பகிராதீர்கள்.
8. சேரும் கட்டணம் மற்றும் புதுப்பிப்பு கட்டணம்
நமக்கு கிரெடிட் கார்டு வழங்கும் போது வங்கிகள் எந்தவித கட்டணமும் இல்லாமல் தான் வழங்குவார்கள். அதேபோல நீங்கள் ஒரு ஆண்டுக்குள் இவ்வளவு தொகை செலவு செய்தால் எந்தவித புதுப்பிப்பு கட்டணம் [renewal fee] இல்லை என்பார்கள். ஆனால் நீங்கள் கிரெடிட் கார்டு வாங்கும் போது சேரும் கட்டணம் மற்றும் புதுப்பிப்பு கட்டணம் என்ற இரண்டும் இருக்கிறதா? எவ்வளவு? எப்போது கட்ட தேவை இல்லை என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்.
9. கிரெடிட் கார்டு பில்லை கவனியுங்கள்
இது பலரும் செய்யக்கூடிய தவறு. வங்கிகள் கணக்கில் தவறுகள் செய்திட மாட்டார்கள் என்ற எண்ணத்தில் நீங்கள் கிரெடிட் கார்டு பில்லை பார்க்காமல் அவர்கள் சொல்லுகிற தொகையை கட்டிவிடுவீர்கள். சில சமயங்களில் வங்கிகள் ஏதேனும் ஒரு கட்டணத்தை புதிதாய் சேர்த்திருக்கவும் வாய்ப்பு உண்டு. ஆகவே நீங்கள் உங்களுடைய பில்லை செலுத்துவதற்கு முன்னதாக ஒருமுறை பாருங்கள்.
10. மனதை கட்டுப்படுத்த பழகுங்கள்
ஒருகாலத்தில் நமது பாக்கெட்டில் பணம் இருந்தால் தான் நம்மால் ஒரு பொருளை வாங்க முடியும், சினிமாவிற்கு செல்ல முடியும், ஒரு உணவகத்திற்கு சென்று சாப்பிட முடியும். ஆனால் கிரெடிட் கார்டு இருந்தால் நீங்கள் பாக்கெட்டில் பணம் இல்லாமல் இருந்தால் கூட மேற்சொன்னவற்றை செய்ய முடியும். அப்போது எல்லாம் கொண்டாட்டமாகத்தான் இருக்கும். ஆனால் அடுத்த மாதம் பணத்தை திருப்பி செலுத்தும்போது தான் பிரச்சனையே உண்டாகும். பலர் இந்தத்தவறை திரும்பத்திரும்ப செய்கிறார்கள். இதில் இருந்து தப்பிக்க ஒரே வழி, தேவையில்லாமல் கிரெடிட் கார்டை பயன்படுத்தக்கூடாது என்ற கட்டுப்பாட்டை நீங்கள் உங்களுக்கே விதித்துக்கொள்வது தான்.
உங்களுடைய கருத்தை கமெண்டில் பதிவிடுங்கள்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!