யார் இந்த தலிபான்கள்? தலிபான்கள் வரலாறு என்ன?

ஆப்கானிஸ்தான் நாடு முழுமைக்கும் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்கு முழுமையாக வந்துவிட்டது. அங்கிருந்து வெளியேற துடிக்கும் மக்கள் வெள்ளம் போல விமான நிலையத்தில் ஓடிக்கொண்டிருக்கும் காட்சிகள் நம்மை பதற்றமடைய வைக்கின்றன. யார் இந்த தலிபான்கள்? தலிபான்கள் வரலாறு என்ன? 

ஒரு துப்பாக்கியின் விலையே சில பத்தாயிரங்கள் இருக்கும் சூழ்நிலையில் உயர்ரக துப்பாக்கிகள், கணக்கில் இல்லாத வெடிகுண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள், டேங்கிகள் என ஒரு ராணுவத்திடம் இருக்கும் அனைத்தும் ஒரு போராட்ட குழுவிடம் எப்படி இருக்க முடியும் என யோசித்துப்பாருங்கள். ஏதாவது ஒரு நாட்டில் இப்படி ஆயுதங்களோடு ஒரு போராட்டக்குழு செயல்பட முடியும் என்றால் அதற்கு ஏதோ ஒரு வல்லாதிக்க நாடு நிச்சயமாக உதவி செய்திருக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். இப்போது வாருங்கள், தலிபான்கள் வரலாறுக்கு போவோம்.

ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் யூனியனின் படைகள் திரும்ப பெறப்பட்ட பிறகு பாஷ்டோ மொழியில் மாணவர்கள் என்ற அர்த்தம் கொண்ட தலிபான்கள் அமைப்பு வடக்கு பாகிஸ்தான் பகுதியில் உருவானது. அப்படி தலிபான்கள் உருவானபோது அவர்களின் முக்கிய வாக்குறுதியாக இருந்தது என்னவெனில் ‘பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள பஷ்டூன் பகுதிகளில் அமைதியையும் பாதுகாப்பையும் மீட்டெடுப்பது மற்றும் அதிகாரத்திற்கு வந்தவுடன் ஷரியா அல்லது இஸ்லாமிய சட்டத்தின் கடுமையான நடைமுறைகளை அமல்படுத்துவது’ என்பது தான். ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் சவுதி அரேபியாவிடம் இருந்து அதிக நிதி உதவி இந்த அமைப்பிற்கு கிடைத்ததாக சொல்லப்படுகிறது.

தென்மேற்கு ஆப்கானிஸ்தானில் இருந்து, தலிபான்கள் விரைவாக தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்தினர். செப்டம்பர் 1995 இல் அவர்கள் ஈரானின் எல்லையான ஹெராத் மாகாணத்தைக் கைப்பற்றினர், சரியாக ஒரு வருடம் கழித்து ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலைக் கைப்பற்றினர், சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்த ஆப்கானிய முஜாஹிதீனின் நிறுவனர்களில் ஒருவரான ஜனாதிபதி புர்ஹானுதீன் ரப்பானியின் ஆட்சியை வீழ்த்தினர். 1998 வாக்கில், தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் கிட்டத்தட்ட 90% சதவிகித இடங்களை பிடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே முஜாஹிதீன் என்ற அமைப்பை குறிப்பிட்டோம் அல்லவா இந்த முஜாஹிதீன் அமைப்பை உருவாக்கியதே அமெரிக்கா தான். அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே நிலவிய பனிப்போர் காரணமாக ஆப்கனில் சோவியத் யூனியன் படைகளுக்கு எதிராக போராட அமெரிக்கா இந்த அமைப்பை உருவாக்கியது. 1990 களில் வெற்றிகரமாக ஆப்கனில் இருந்து சோவியத் படைகள் வெளியேறிய பின்பு அமெரிக்கா கொஞ்சம் விலகி இருக்க ஆரம்பித்தது. 

இப்போது ஆப்கனில் நாம் காணும் காட்சிகளுக்கும் 1990 களில் கண்ட காட்சிகளுக்கும் வேறுபாடு உண்டு. அப்போது, ஆப்கானியர்கள் தலிபான்களின் வருகையை கொண்டாடினார்கள். சோவியத் யூனியன் படை, முஜாஹிதீன் இவர்களுக்கு இடையிலான சண்டையில் சோர்வடைந்து கிடந்தவர்களுக்கு தலிபான்கள் அமைதியை தருவோம் என சொன்னது ஆறுதலாக இருந்தது, ஆகவே வரவேற்றார்கள். தலிபான்கள் ஆக்கிரமித்த பகுதிகளில் லஞ்சம் ஒழிக்கப்பட்டதாகவும், தொழில்வளம் செழித்து வளர்ந்ததாகவும், மக்கள் நிம்மதியாக வாழ்ந்ததாகவும் சொல்கிறார்கள்.

ஆனால் தலிபான்களிடம் இருந்த மிகப்பெரிய பிரச்சனையே கடுமையான சட்டங்கள் தான். ஆமாம், விபச்சாரம் செய்தால் பொதுவெளியில் அடித்தே கொல்லுவது, திருட்டில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு வெட்டு, பெண்கள் கண்டிப்பாக முழு உடலையும் மறைக்கும் புர்கா அணிய வேண்டும், ஆண்கள் தாடி அணிய வேண்டும் போன்றவை கட்டாயமாக அமல்படுத்தப்பட்டது.

தலிபான்கள் தொலைக்காட்சி, இசை மற்றும் சினிமாவையும் தடைசெய்தனர், மேலும் 10 வயது மற்றும் அதற்கு மேல் பெண்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. அவர்கள் மீது மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றசாட்டுகள் எழுந்துகொண்டே இருந்தன. சர்வதேச கண்டனங்கள் இருந்தபோதிலும், 2001 ல் மத்திய ஆப்கானிஸ்தானில் புகழ்பெற்ற பாமியன் புத்தர் சிலைகளை தாலிபான்கள் அழித்தார்கள். இது அவர்களுக்கு சர்வதேச அரங்கில் பெரிய எதிர்ப்பு அலையை உண்டாக்கியது.

தலிபான்கள் ஆட்சி இன்று ஆப்கனில் உருவான போது அதனை அங்கீகரித்த முதன்மையான நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் உள்ளது. தலிபான்கள் அமைப்பை உருவாக்கிய வடிமைப்பாளர் பாகிஸ்தான் தான் என்ற கருத்து பொதுவாக இருந்தாலும் அதனை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனால் ஆரம்பத்தில் தலிபான்கள் இயக்கத்தில் பெரும்பான்மையாக சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் மத பள்ளிகளில் படித்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.

தலிபான்களை அப்போதைய காலகட்டங்களில் மூன்று நாடுகள் தான் அங்கீகரித்தன. சவுதி, ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் ஆகியவை தான் அவை. ஒருகட்டத்தில் பாகிஸ்தான் நாட்டையே தாக்குவோம் என தலிபான்கள் முரண்பட்டபோது தலிபான்களுடன் உறவை முறித்துக்கொண்டது பாகிஸ்தான்.

நாமெல்லாம் அறிந்த பாகிஸ்தானைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற மலாலா மீது துப்பாக்கிக்குண்டுகள் பாய்ந்து அவர் கடுமையாக தாக்கப்பட்டார் அல்லவா அந்த தாக்குதலை அரங்கேற்றியவர்கள் தலிபான்கள் தான். இது சர்வதேச கண்டனத்தை தலிபான்களுக்கு பெற்றுத்தந்தது. அதேபோல பாகிஸ்தான் நாட்டில் அதற்கடுத்த நடந்த சில தாக்குதல்களையும் தலிபான்கள் நடத்தியிருந்தார்கள். இதனை அடுத்து அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் தலிபான்கள் அமைப்பை சேர்ந்த மூன்று முக்கிய தலைமைகள் கொல்லப்பட்டார்கள்.

11 செப்டம்பர் 2001 அமெரிக்காவில் வர்த்தக மைய கட்டிடம் விமானம் கொண்டு தகர்க்கப்பட்ட பிறகு தான் தலிபான்கள் அமெரிக்காவின் முழுமையான எதிர்ப்பை சம்பாதிக்க.நேர்ந்தது. அந்த கொடூர தாக்குதலை ஒசாமா பின்லேடன் தான் நடத்தியிருந்தான் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், ஒசாமா பின்லேடன் மற்றும் அல்கொய்தா இயக்கத்திற்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்தது தான் பிரச்சனைக்கு காரணமே. அக்டோபர் 7, 2001 அன்று துவங்கி அமெரிக்க கூட்டுப்படைகள் தலிபான்கள் வசம் இருந்த ஆப்கன் மீது கடுமையான தாக்குதலை நடத்தினார்கள். அந்த டிசம்பர் மாதமே தலிபான்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்கள்.

ஆனாலும், ஒசாமா பின்லேடன், பல முக்கிய தலிபான் தலைவர்கள் தலைமறைவு ஆனார்கள். இதற்குப் பிறகும் தலிபான்கள் அவ்வப்போது தாக்குதல்களை நடத்திக்கொண்டு தான் இருந்தார்கள். ஆனால் அமெரிக்காவிற்கு எதிராக பெரிய வெற்றியை அவர்களால் பெறவே முடியவில்லை. அவ்வப்போது அமைதிக்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. ஆனாலும் அவை பெரிய அளவில் மாற்றத்தை உண்டாக்கவில்லை. வழக்கம் போல தாக்குதல் நடைபெற்றன.

பிப்ரவரி 2020 அப்போது அமெரிக்கா – தலிபான் அமைதி ஒப்பந்தத்திற்கு பிறகு தலிபான்கள் தங்களது தாக்குதல் நடவெடிக்கைகளில் மாற்றத்தை கொண்டுவந்தார்கள். அவர்கள் நகரங்கள் மற்றும் இராணுவ புறக்காவல் நிலையங்கள் உள்ளிட்டவற்றில் சிக்கலான தாக்குதல்களை நடத்துவதை விட்டுவிட்டு தங்களது விதிகளுக்கு புறம்பாக செய்லடுகிற ஆப்கான் மக்களை குறிவைத்தார்கள்.

அவர்களது குறியில் ஊடகவியலாளர்கள், நீதிபதிகள், அமைதி ஆர்வலர்கள், அதிகாரப் பதவிகளில் உள்ள பெண்கள் இருந்தனர். இவற்றை கண்டபோது தலிபான்கள் ஒரு சிறந்த மனித உரிமைகள் மதிக்கப்படுகிற தேசத்தை உருவாக்க முயல மாட்டார்கள் என சர்வதேச அரங்கில் கருத்துக்கள் நிலவின. ஆனாலும் புதிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், ஏப்ரல் 2021 இல் அனைத்து அமெரிக்க படைகளும் செப்டம்பர் 11 க்குள் ஆப்கன் நாட்டை விட்டு வெளியேறும் என அறிவித்தார். இதற்கு மிக முக்கியக்காரணம், தலிபான்களுக்கு எதிரான போரில் அமெரிக்காவும் இந்த இருபது ஆண்டுகளில் பெரிய வெற்றியை பெற முடியவில்லை என்பது தான். காரணம், ஆப்கன் நாட்டில் புவியியல் அமைப்பு தலிபான்களுக்கு ஏற்றதாக இருந்ததாக சொல்கிறார்கள்.

அமெரிக்கா வெளியேற வெளியேற தலிபான்கள் ஒவ்வொரு இடமாக மீண்டும் ஆக்கிரமிக்க ஆரம்பித்தார்கள். இது அமெரிக்காவுக்கு தெரிந்தாலும் அது தனது படைகளை திரும்ப பெற்றுக்கொண்டே இருந்தது. முக்கிய நகரங்களை கைப்பற்றிய தலிபான்கள் காபூல் நகரையும் கைப்பற்றினார்கள். இறுதிக்கட்டத்தில் பெரிய அளவிலான போர் எதுவும் நடைபெறாமல் தலிபான்கள் வசம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டதாக தெரியவருகிறது. தற்போது ஆப்கன் தலிபான்கள் வசம் முழுமையாக சென்றுள்ளது.

இந்தியா அண்மையில் மிகப்பெரிய முதலீடுகளை ஆப்கானிஸ்தானில் செய்தது குறிப்பிடத்தக்கது. ஆப்கன் தலிபான்கள் வசம் போனதை இந்தியா எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

[பிழைகள் இருந்தால் கமெண்டில் சுட்டிக்காட்டவும்]

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *