“ஜெய்பீம்” என்பதற்கு பின்னால் இருக்கும் வரலாறு

ஒரு மாபெரும் சொல்லாடலான “ஜெய்பீம்” மீண்டும் அனைவராலும் உச்சரிக்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் “ஜெய்பீம்” திரைப்படம் தான் அதற்கு காரணம். ஆனால் “ஜெய்பீம்” என்ற சொல்லுக்கு பின்னால் ஒரு வீர வரலாறு இருக்கிறது என்பது பலருக்குத் தெரியாது. அதுவொரு அனைத்து மக்களின் சொல் என்பதும் பலருக்கும் புரியாது.

“ஜெய்பீம்” என்ற வார்த்தையை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் முஸ்லீம் சிறுபான்மையின மக்கள் தற்போது அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக இந்த வார்த்தை ஒருவித அடையாளத்தோடு பார்க்கப்படுகிறது. அதேபோல, அறிஞர் அம்பேத்கார் அவர்களை பின்பற்றுகிறவர்கள் தான் இந்த வார்த்தையை பயன்படுத்துவார்கள் என்ற மேம்போக்கான எண்ணமும் தற்போது இருக்கிறது. ஜெய் ஹிந்த் என்றால் எப்படி நமக்குள் ஓர் உணர்வு பிறக்கிறதோ அதனைப்போலவே “ஜெய்பீம்” என்றால் ஒரு ஆற்றல் பிறக்கும் என்கிறார்கள். நீங்கள் எந்த சாதியாக, மதமாக, இனமாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நீங்கள் அடிமைப்படுத்தப்படுவதாக உணர்ந்து அதனை எதிர்த்து போராட வேண்டும் என்ற எண்ணம் கொண்டால் உங்களுக்கு உணர்ச்சிப்பிழம்பை உண்டாக்கும் வல்லமை கொண்ட சொல்லாக “ஜெய்பீம்” இருக்கும்.

“ஜெய்பீம்” என்ற வார்தைக்குப் பின்னால் ஒரு வீரவரலாறு இருக்கிறது. அதனை தெரிந்துகொள்வது அனைவருக்கும் ஒரு புரிதலை ஏற்படுத்தும் என நினைக்கிறேன். அதோடு சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் “ஜெய்பீம்” திரைப்படம் மக்களிடையே மாபெரும் புரிதலை ஏற்படுத்தும் என நம்புகிறேன். திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

ஜெய்பீம் வீரவரலாறு

கல்வி, வேலைவாய்ப்பு, முன்னேற்றம், பணம்,சுதந்திரம்,சட்ட பாதுகாப்பு இவற்றை பெற்றுவிட்டதனால் ஓரளவிற்கு நிம்மதியாக இன்று மக்களால் இருக்க முடிகிறது. நான் தான் உயர்ந்த சாதி…இல்லை இல்லை நான் தான் உயர்ந்த சாதி என பேசிக்கொள்ளும் அனைவருமே சில நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரே குட்டையில் ஊறிய மட்டையாகத்தான் இருந்தோம் என்பதே வரலாறு. அந்தக் காலகட்டங்களில் வாழ்ந்த பார்ப்பனர்கள் அப்போதைய ஆட்சியாளர்களையும் மன்னர்களையும் தங்களது சாஸ்திர சம்பிரதாயங்களால் கட்டுக்குள் வைத்துக்கொண்டு உழைக்கும் மக்களை தாழ்த்தி நடத்தினார்கள். தாழ்த்தி என்றால் மிகச்சாதாரணமாக இல்லை….மிகக்கொடுமையாக என்பதே உண்மை.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழை எளிய மக்கள் உரிமைகள் ஏதும் இல்லாமல் புழுக்களை போல நடத்தப்பட்டார்கள். டீ கடைகளில் டீ அருந்த தனி தேங்காய் அரை மூடி, எச்சிலை கீழே துப்பிவிடாமல் இருக்க கழுத்தில் ஒரு மண் கலயம், நடந்து செல்லும்போது கால்தடம் மண்ணில் பட்டு அதனை பார்ப்பனர் மிதித்து அதனால் தீட்டு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இடுப்பில் பனை ஓலையை கட்டிக்கொண்டு நடத்தல், கல்வி வாய்ப்பு மறுத்தல் என அடக்குமுறைகளை சொல்லிக்கொண்டே போகலாம். [இது திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட மக்களின் மீது நடத்தப்பட்ட வன்முறை என்பதையும் இது பல நூற்றாண்டுகளாக தொடர்ந்தது என்பதையும் இதனாலேயே இவர்களுக்கு சில வாய்ப்புகள் தற்போது கொடுக்கப்படுகின்றன என்பதையும் இளம் தலைமுறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும்]

இந்த அடக்குமுறை இந்தியா முழுக்கவே இருந்தது. 1800 களின்போது பார்ப்பன பேஷ்வாக்கள் தான் மராட்டியத்தை ஆண்டுவந்தார்கள். அப்போது இந்தக் கொடுமைகள் அங்கே ஏராளமாக நிகழ்த்தப்பட்டன. இதனை சகித்துக்கொள்ள முடியாத தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அவர்களை எதிர்த்து ஆயுத போராட்டம் செய்திடும் முடிவுக்கு வந்தார்கள். போருக்கான இடம் குறிக்கப்பட்டது. அந்த இடம் தான் “பீமா” என்ற நதிக்கரை.

டிசம்பர் 31, 1817 அன்று இரவு போர் துவங்கியது. இரண்டாம் பாஜிராவ் என்ற மன்னனின் தளபதி கோகலே தலைமையில் 28,000 போர் வீரர்கள் எதிர்புறம் நிற்க 500 மகர் சமுதாய வீரர்களும், 100 இஸ்லாமிய சமுதாய வீரர்களும் இணைந்து மறுபுறம் நின்றார்கள். எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருந்தாலும் உழைக்கும் சமுதாயம், உரிமைக்காக போராடுகிற சமுதாயம் என்பதனால் இயல்பிலேயே இவர்கள் பக்கம் ஒரு வெறி இருந்தது. போர் துவங்கிய 12 மணி நேரத்தில் சுமார் 600 க்கும் மேற்பட்ட பார்ப்பன படை வீரர்கள் கொல்லப்பட்டார்கள். தளபதி கோகலே போர்க்களத்தில் கொல்லப்பட்டான். அரசன் கைது செய்யப்பட்டான். மீதமிருந்த படைகள் களைந்து ஓடின.

அடக்குமுறைக்கு எதிராக போர்க்களம் புகுந்து வெற்றி பெற்றதன் நினைவாக பீமா நதிக்கரையில் அப்போது ஒரு வெற்றிச்சின்னம் நிறுவப்பட்டது. அப்போதெல்லாம் ஜெய் பீம் என்ற சொல் உபயோகப்படுத்தப்படவில்லை. 1927 ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று அம்பேத்கார் இந்த நினைவிடத்திற்கு சென்றார். அன்று தான் பீமா நதிக்கரையின் வெற்றியை கொண்டாடும் ஒரு முழக்கமாக “ஜெய் பீம்” என்ற முழக்கம் வெடித்தது என்கிறார்கள். இதனை அடுத்து பெரிதாக இந்த சொல் பயன்பாட்டில் இல்லை.

1936 ஆகஸ்டு 15 அன்று அம்பேத்கார் அவர்கள் சுதந்திரத் தொழிலாளர் கட்சியைத் துவங்குகிறார். அதன் தலைமை செயலாளரும் அக்கட்சியின் சார்பில் காம்தி தொகுதியில் போட்டியிட்டு வென்றவருமான எல்.என்.பாபு ஹர்தாஸ் பிப்ரவரி 16, 1937 அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பீம்ராவ் அம்பேத்காருக்கே வெற்றி என்ற பொருளில் ஜெய் பீம் என்ற முழக்கத்தை மீண்டும் துவக்கி வைத்தார். அதன்பிறகு ஒடுக்கப்பட்ட மக்கள் சந்தித்துக்கொள்ளும் போது சொல்லிக்கொள்ளும் வார்த்தையாக ஜெய் பீம் மாறியது.

ஜெய் பீம் என்ற வார்த்தை யாரையும் எதிர்ப்பதற்கு உரிய சொல் அல்ல, அது உரிமைக்காக போராடுகிற ஏழை எளிய மக்களை ஒன்றுபடுத்தும் சொல் என்பதே எதார்த்தமான உண்மை என்கிறார்கள் உண்மை அறிந்தவர்கள்.

ஜெய் பீம் என்றால் என்ன என்ற கேள்விக்கு மராத்திய கவிஞர் சொன்ன விளக்கம் இது தான்.

ஜெய் பீம் என்றால் ஒளி,

ஜெய் பீம் என்றால் அன்பு,

ஜெய் பீம் என்றால் இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கிய பயணம்,

ஜெய் பீம் என்றால் பல கோடி மக்களின் கண்ணீர்த் துளி!

-விலாஸ் பி டிலாரெ (மராத்திய கவி)  






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *