குடியரசுதின அலங்கார ஊர்தியை எப்படி தேர்வு செய்கிறார்கள்? அரசியலா? எதார்த்த நிகழ்வா?

குடியரசு தின அணிவகுப்பில் அணிவகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகளில் தமிழகத்தின் சார்பில் அனுப்பப்பட்ட ஊர்தி நிராகரிக்கப்பட்டது பெரிய அளவில் தமிழகத்தில் பேசுபொருளாக ஆனது.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களின் ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டதால் பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஊர்திகள் நிராகரிக்கப்பட்டதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டது.மத்திய அரசு நிராகரித்த ஊர்தி தமிழகத்தில் நடக்கும் குடியரசு தின விழாவில் காட்சிப்படுத்தப்படும் எனவும் பின்னர் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும் அவ்வாகனம் செல்லும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மத்திய அரசு, தமிழக பாஜக தலைவர் ஆகியோர் நிராகரிப்பில் உள்நோக்கம் எதுவும் இல்லை. 3 ஆம் கட்ட தேர்வில் தோல்வி அடைந்துவிட்டதால் அனுமதிக்கவில்லை என விளக்கம்.

இந்திய குடியரசு தினமான ஜனவரி 26 அன்று டெல்லி கோட்டையில் மாபெரும் அணிவகுப்பு நடைபெறும். அந்த அணிவகுப்பின் போது இந்திய ராணுவம் தனது பல படைப்பிரிவுகளின் தனித்திறன்களை வரிசைப்படுத்தும். அதேபோல மாநிலங்களில் இருந்து அனுப்பப்படும் அலங்கார அணிவகுப்பு வாகனங்களும்  ஊர்வலத்தில் இடம்பெறும். இது 1950 ஆம் ஆண்டு முதல் வருடாந்திர பாரம்பரியமாக இருந்து வருகிறது.

 

கடந்த காலங்களில் பலரைப் போலவே இந்த ஆண்டும், மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே  மோதல் வெடித்துள்ளது. இம்முறை மேற்கு வங்கம், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் அலங்கார வாகனங்களை மத்திய அரசு நிராகரித்தது. இது மூன்று மாநிலங்களையும் எரிச்சலடையச் செய்துள்ளது, அந்தந்த மாநில அரசாங்கங்களின் தலைவர்கள் தங்கள் மாநில வாகனங்கள் விலக்கப்பட்டதைக் கண்டித்து, பிரதமர் நரேந்திர மோடிஅவர்கள் இதில் தலையிட்டு சரி செய்திட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

 

மாநில அரசுகளால் அனுப்பப்படும் அலங்கார ஊர்திகளை தெரிவு செய்திட ஒரு அமைப்பு இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் நிராகரிப்புகள் நடக்கும் போதும் இது பேசுபொருளாகவே இருந்துவருகிறது. 

குடியரசு தின அணிவகுப்புக்கான அலங்கார ஊர்தியை யார் தேர்ந்தெடுப்பது? தேர்வு செயல்முறை என்ன உள்ளடக்கியது? இந்த ஆண்டுக்கான வழிகாட்டுதல்கள் என்ன? என்ன சர்ச்சை? வாருங்கள் அலசலாம்.

அலங்கார ஊர்தியை தேர்ந்தெடுப்பதற்கு யார் பொறுப்பு?

குடியரசுதின ஊர்தி

குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்துகொள்ளும் அலங்கார ஊர்தியை தெரிவு செய்திட ஒரு நிபுணர் குழுவை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் நியமித்து உள்ளது. இக்குழுவில் கலை, கலாச்சாரம், ஓவியம், சிற்பம், இசை, கட்டிடக்கலை, நடனம் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற நிபுணர்கள் உள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிடும் கருப்பொருள், கருத்து, வடிவமைப்பு மற்றும் காட்சி அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய அமைச்சகங்கள் மற்றும் மத்திய துறைகளில் இருந்து அனுப்பப்படும் அலங்கார ஊர்தியினை இந்த நிபுணர் குழுவின் கூட்டத் தொடரில் மதிப்பீடு செய்கிறார்கள். ஒவ்வொரு கட்டமாக கடந்து இறுதிக்கட்டத்தை அடையும் அலங்கார ஊர்திகள் தான் குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொள்ளும். கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக அரசின் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

தேர்வு செய்யப்படும் முறை

ஒரு அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்படுவதற்கு முன்னதாக பல்வேறு நிலைகளை கடந்து செல்ல வேண்டி இருக்கும். உதாரணத்திற்கு, பாதுகாப்பு அமைச்சகம் இந்த ஆண்டிற்கான கருப்பொருள் உள்ளிட்ட விசயங்களை தெரிவிக்கும். மாநில அரசு, யூனியன் பிரதேசங்கள் மற்றும் சில அமைச்சகங்கள் தங்களது சார்பில் தங்களது வடிவமைப்பினை ஒரு வரைபடமாக தாக்கல் செய்வார்கள். 

 

கமிட்டி அதிலே ஏதேனும் குறைபாடு இருந்தால் அதனை சரி செய்யச் சொல்லி ஒப்புதல் வழங்குவார்கள். இது இறுதி ஒப்புதல் அல்ல என கவனத்தில் கொள்ள வேண்டும். 

அடுத்தகட்டமாக, முப்பரிமாண வடிவில் தங்களது அலங்கார ஊர்தியை தயார் செய்து கமிட்டியிடம் காட்ட வேண்டும். இது பல கட்டங்களாக இப்படி நீண்டுகொண்டே போகும். சில ஆண்டுகளில் 7 கட்டங்கள் கூட இருந்துள்ளதாம். 

தேர்வு செய்யப்படும் போது கவனிக்கப்படும் விசயங்கள் என்ன?

தோற்றம், வெகுஜனங்களின் மீதான தாக்கம், யோசனை, கருப்பொருள், இசை மற்றும் அலங்கார ஊர்தியில் இருக்கும் உள்ளார்ந்த விசயங்களின் அளவு உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக வைத்தே இறுதி செய்யப்படுகின்றன.

 

நேர கட்டுப்பாடு காரணமாக அனைத்து அலங்கார ஊர்திகளையும் அணிவகுப்பில் பங்குபெற செய்திட முடியாது என்ற காரணத்தால் தான் சிறந்த அலங்கார ஊர்திகளை தெரிவு செய்து அவற்றை மட்டும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள அனுமதி தரப்படுகிறது. 

இதுதவிர ஒரு அலங்கார ஊர்தி குடியரசு தின அணிவகுப்பில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பல்வேறு விதிமுறைகள் பாதுகாப்பு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.

2022 குடியரசு தின அணிவகுப்புக்கான வழிகாட்டுதல்கள் என்ன?

பாதுகாப்பு அமைச்சகம் செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி இதற்கான அறிவிப்புகளை மாநில அரசு, யூனியன் அரசு என அனைத்திற்கும் அனுப்பியுள்ளது. அதிலே குறிப்பிடப்பட்டு இருந்த கருப்பொருள் “India@75 – Freedom Struggle, Ideas @ 75, Actions @ 75, and Resolve @ 75” இதுதான். இந்தியா சுதந்திரம் அடைந்த 75 ஆம் ஆண்டினை கொண்டாடும் வகையில் அலங்கார ஊர்திகள் இருக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம். 

 

இதிலே தமிழக அரசின் அலங்கார ஊர்தி மூன்றாம் கட்டத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப்போலவே கேரளா, மேற்குவங்க ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *