பண மதிப்பிழப்பு (Demonetization) சாதகமா பாதகமா ? நடந்தது என்ன ?

ஊழலை (corruption) ஒழிக்கும் நடவெடிக்கையில் உதவிகரமாக இருந்ததா அல்லது இந்திய பொருளாதார வளர்ச்சியை (economic growth) ஒருபடி பின்னோக்கி கொண்டு சென்றதா? 

பண மதிப்பிழப்பு அறிவிப்பு : 

சென்ற வருடம் (நவம்பர் 08,2016) அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தது டிரம்ப் வெற்றிபெறுவாரா அல்லது முதல் முறையாக ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்று அமெரிக்கா அரியாசனத்தில் அமர்ந்த முதல் பெண் என்கிற பெயரை பெறுவாரா என்பதே. ஆனால் நம் பிரதமரின் அறிவிப்பு நாட்டுமக்களையே அதிர வைத்தது.

இந்திய நேரப்படி சரியாக நவம்பர் 08,2016 இரவு 8 மணி அளவில் தொலைக்காட்சியில் தோன்றிய நமது பிரதமர் மோடி அவர்கள் இந்திய பொருளாதாரத்தில் 86% பங்காற்றிய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என அறிவித்தார் (சில இடங்களில் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது ).

மேலும் அவர் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளின் வாயிலாகவும் போஸ்ட் ஆபீஸ் வழியாகவும் புதிய நோட்டாக (500 மற்றும் 2000) பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். இதன் மூலமாக அனைத்து பண பரிமாற்றங்களும் வங்கிகளில் சேகரிக்கப்படும்.

ஊழலை குறைக்கவும் கருப்பு  பணத்தை ஒழிக்கவும் தீவரவாத செயல்களுக்கு கருப்பு பணம் பயன்படுவதை ஒழித்து தீவிரவாத செயல்களை குறைக்கவும் பொதுமக்கள் பண மதிப்பிழப்பால் வரும் இடையூறுகளையும் தொந்தரவுகளையும் பொருத்தருளுமாறு கேட்டுக்கொண்டார்.

கஷ்டமும் அப்போதைய ஆதரவும்  : 

பண மதிப்பிழப்பில் பாதிக்கப்பட்டது பெரும் வணிகர்கள், பணக்காரர்கள் மட்டுமல்ல, சாதாரண மக்களும் கூட பாதிக்கப்பட்டனர். வங்கிகளுக்கு போதிய பணத்தினை ரிசெர்வ் வங்கி அனுப்பாததும் புதிய நோட்டுகளின் வடிவங்களுக்கு ஏற்ப ATM இயந்திரங்கள் மேம்படுத்தப்படாததும் பொது மக்களுக்கு புதிய நோட்டுகள் கிடைப்பதில் தடையை ஏற்படுத்தின.

எத்தனை தொந்தரவுகள் இருந்தாலும் பண கஷ்டம் இருந்தாலும் கருப்பு பணம் ஒழியும் ஊழல் குறையும் என எண்ணி பிரபலங்களில் ஆரம்பித்து சாதாரண மக்கள் வரையிலும் சொந்த கட்சியில் ஆரம்பித்து எதிர்க்கட்சி வரையிலும் பண மதிப்பிழப்பை ஆதரித்தனர்.

பண மதிப்பிழப்பை நாம் ஆதரிக்கும் முன்போ அல்லது எதிர்க்கும் முன்போ அதனால் நடந்தவற்றை பார்க்கலாம்.

ஆதரிப்போருக்கு ….

>> வருமான வரி கட்டாத புழக்கத்தில் இல்லாமல் இருந்த பணம் வெளியில் வந்தது

ஆம் இந்திய அரசு வங்கிகளின் மூலமாக கண்காணிப்பதாக சொல்லியும் பல பெரும் பண முதலைகள் பிறரை பயன்படுத்தியோ அல்லது நிறுவனங்களின் உதவியுடனோ தங்களிடம் பதுக்கப்பட்டு இருந்த வரி கட்டாத கருப்பு பணத்தை வங்கியில் செலுத்தி புதிய நோட்டுகளை மாற்றிக்கொண்டனர். இதனால் இதுவரை பயன்படாமல் கிடந்த கருப்பு பணம் கணக்கில் வந்துள்ளது.

வங்கியில் பணத்தினை செலுத்தி மாற்றப்படும் பணத்தின் அளவு ரூ 2,50,000 க்கும் அதிகமாக இருந்தால் அவர்களிடம் வருமான விளக்கம் கேட்கப்பட்டு , கணக்கு இல்லாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இந்த நடவெடிக்கைகளின் மூலமாக கருப்பு பண புழக்கம் 40% இல் இருந்து 20% ஆக குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் முறையான பண புழக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது .

>> மின் பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும்

இந்தியாவின் கிராம புறங்களிலும் புறநகர் பகுதிகளும் ஏன் நகரங்களில் கூட பெரும்பாலானவை பண பரிமாற்றமே . இதன் காரணமாக ஊழல்வாதிகள் எளிமையாக பணத்தை கணக்குக்கு உட்படுத்தாமல் வரிகட்டாமல் பதுக்க வழி ஏற்படுகிறது. ஆகவே அரசின் மின் பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் முயற்சியும் இதன்முலமாக செய்யப்பட்டது. அவ்வாறு நடக்கும்பட்சத்தில் நடக்கும் பண பரிமாற்றங்கள் அனைத்தும் அரசின் பார்வைக்கு வரும்.

>> தீவிரவாத செயல்பாட்டை ஒடுக்குதல் மற்றும் கள்ளப்பணத்தை தடுத்தல் 

பெரும்பாலான தீவிரவாத குழுக்கள் கள்ள நோட்டுகளை அச்சடித்து பொருளாத இழப்புகளை ஏற்படுத்தியும் தங்களது தீவிரவாத செயல்களுக்கு அந்த பணத்தை பயன்படுத்தியும் வந்தன. பாதுகாப்பு ஏற்பாடுகள் பழைய நோட்டுகளில் போதிய அளவில் இல்லாமல் போனதனால் ( பல ஆண்டுகள் ஆயிற்றே ) தீவிரவாத குழுக்கள் எளிமையாக அச்சடிக்க தொடங்கிவிட்டிருந்தன.

புதிய நோட்டுகள் திடீரென அறிமுகப்படுத்தப்பட்டு இருந்ததால் தீவிரவாத குழுக்களிடம் உள்ள கள்ளப்பணம் அனைத்தும் வீணாகி அவர்களுக்கு இழப்பை ஏற்படுத்தும் . மேலும் புதிய நோட்டுகள் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை கொண்டிருப்பதால் அதனை அவர்களால் அச்சடிக்க முடியாது ( ஆனாலும் சில புதிய நோட்டுகளை கள்ளத்தனமாக அச்சடிக்கப்பட்டதாக செய்திகள் வந்தன )

எதிர்ப்போருக்கு …

பண பற்றாக்குறை : 

பண மதிப்பிழப்பில் பாதிக்கப்பட்டது பெரும் வணிகர்கள், பணக்காரர்கள் மட்டுமல்ல, சாதாரண மக்களும் கூட பாதிக்கப்பட்டனர். வங்கிகளுக்கு போதிய பணத்தினை ரிசெர்வ் வங்கி அனுப்பாததும் புதிய நோட்டுகளின் வடிவங்களுக்கு ஏற்ப ATM இயந்திரங்கள் மேம்படுத்தப்படாததும் பொது மக்களுக்கு புதிய நோட்டுகள் கிடைப்பதில் தடையை ஏற்படுத்தின.இதனால் வங்கிகளின் முன்னாலும் ATM இயந்திரங்களின் முன்பாகவும் பொதுமக்கள் வரிசைகளில் நிற்கவேண்டியதாகிவிட்டது.

நகரங்களைவிட கிராமப்புறங்களில் உள்ள வங்கிகளுக்கு போதிய அளவிற்கு புதிய பணம் வங்கிகளுக்கு அனுப்பப்படாமல் இருந்ததும் பெரும் துன்பத்தை மக்களுக்கு கொடுத்தது.

எதிர்பார்ப்புக்கு எதிராக குறைந்த ஜிடிபி : 

இந்தியா வெகுவாக முன்னேறிக்கொண்டிருக்கும் நாடாக இருந்தாலும் 56% பொருளாதார சுழற்சி நேரடி பண பரிமாற்றம் மூலமாகவே நடந்து வந்தன. உடனடியாக புதிய நோட்டுகளை கொடுத்துவிட்டால் பொருளாதார முன்னேற்றத்தில் பாதிப்பு ஏற்படாது என நினைத்த அரசுக்கு 2% அளவுக்கு ஜிடிபி குறைந்தது பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது. வாங்கும் திறன் குறைந்ததால் நடந்தது இந்நிகழ்வு.

குறிப்பாக வேளாண்மை, மீன்பிடி தொழில் மற்றும் வரைமுறை படுத்தப்படாத சிறுதொழிகளில்  பண புழக்க குறைவினால் மந்தமடைந்தன. இதனால் இன்றுவரை பொருளாதார வளர்ச்சி குறைந்துகொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகரித்த வேலையில்லா திண்டாட்டம் : 

பண மதிப்பிழப்பால் குறைந்தபட்சம் 4 லட்சம் பேருக்கு வேலை பறிபோகியுள்ளது. குறிப்பாக ஜவுளிக்கடைகள் , தங்கநகை விற்பனை நிலையங்கள் பெருத்த பின்னடைவை சந்தித்தன. புதிய வேலைவாய்ப்புகள் இன்னும் சிறப்பாக உருவாகவில்லை.

கோடி கோடியாக கருப்பு பணத்தை மாற்றிய முதலைகள் : 

என்னதான் அரசாங்கம் அனைத்து பண பரிமாற்றமும் வங்கிகளின் மூலமாகவோ அல்லது போஸ்ட் ஆபீஸ் மூலமாகவோ மட்டுமே நடைபெற வேண்டும் என அறிவுறுத்தியிருந்தாலும் பல பண பரிமாற்றங்கள் அவ்வாறு நடக்கவில்லை.

உதாரணத்திற்கு சேகர் ரெட்டியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 30 கோடிக்கும் அதிகமான 2000 ரூபாய் நோட்டுகள் எவ்வாறு கிடைத்தன என்பதை சிபிஐ கண்டுபிடிக்க திணறி வருகிறது. அவரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட நோட்டுகளின் எண்ணோடு ஒப்பிட்டு பார்க்கலாம் என்றால் ரிசர்வ் வங்கி தங்களிடம் இருந்து சென்ற பண கட்டுகளின் எண்ணை குறித்துவைக்கவில்லை என கூறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

முடிவு : நல்ல நோக்கங்களுக்காக இந்த முயற்சி நடைபெற்று இருந்தாலும் போதிய முன்னேற்பாடுகள் இல்லாத காரணத்தாலும் நிர்வாக குறைபாடுகளாலும் எதிர்பார்த்த அளவுக்கு எதுவும் நடைபெறவில்லை.

முன்னால் பிரதமர் மன்மோகன் சிங், முன்னால் நிதியமைச்சர் ப சிதம்பரம் , நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் ரிச்சர்ட் தாளர் போன்றவர்கள் பண மதிப்பிழப்பிற்கு எதிராகவே கருத்து தெரிவித்து உள்ளனர்.

இதில் உள்ள கருத்துக்களை கொண்டு நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் பண மதிப்பிழப்பு வெற்றியா தோல்வியா என்பதை.

நன்றி
பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *