பிழைத்துக்கொள்ளுங்கள், கொரோனா இரண்டாவது அலை மிகவும் அபாயகரமானது – ஏன்?
நாம் அனுபவமற்றவர்களாக கொரோனாவை எதிர்கொண்டபோது ஏற்பட்ட இழப்புகளைக்காட்டிலும் மோசமான இழப்புகளை அனுபவத்தோடும் கொரோனா தடுப்பூசியோடும் இருந்த போதிலும் நாம் சந்தித்துக்கொண்டு இருக்கிறோம். நாம் சொல்வது ஒன்றே ஒன்று தான். முடிந்தால் பிழைத்துக்கொள்ளுங்கள், கொரோனா இரண்டாவது அலை மிகவும் அபாயகரமானது.
கொரோனா முதல் அலையை விடவும் கொரோனா இரண்டாவது அலை மிகவும் அபாயகரமானது என்பதற்கு சில சான்றுகளை உங்கள் முன்பாக சமர்ப்பிக்க விரும்புகிறோம். இது உங்களை அச்சுறுத்துவதற்காக அல்ல, நீங்கள் பாதுகாப்போடு இருப்பதற்காகவே. படியுங்கள், சரியென பட்டால் பகிருங்கள்.
சாட்சி 1 : டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. இதனை தவிர்க்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் உத்தரவு பிறப்பிக்கும் போது நீதிபதிகள் வருத்தத்தோடு குறிப்பிட்ட வரிகள் இவை ‘ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நீங்கள் சமாளிப்பதற்குள் எண்ணற்ற உயிர்களின் நிலை கேள்விக்குரியாகலாம். எதையாவதுசெய்யுங்கள். அதை உடனடியாக செய்யுங்கள். ஆக்சிஜன் கையிருப்பில் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் கேளுங்கள், பிச்சை எடுங்கள், கெஞ்சிக் கேளுங்கள், திருடுங்கள், என்னவெல்லாம் முடியுமோ அதை உடனே செய்யுங்கள்’
கொரோனா முதல் அலை ஏற்பட்ட போது நம்மிடம் அனுபவமில்லை. அதற்கான வெண்டிலேட்டர் உள்ளிட்ட கட்டமைப்புகள் இல்லை. ஆனாலும் அப்போது ஆக்ஸிஜன் இல்லை என எந்தவொரு மருத்துவமனையோ அல்லது மாநில அரசோ கூறியதே இல்லை. ஆனால் இப்போது தமிழகம் உட்பட ஒவ்வொரு மாநிலமும் ஆக்சிஜன் இருப்பை உறுதிசெய்துகொள்ள போராடுகின்றன. பிச்சை எடுங்கள் அல்லது திருடியாவது மருத்துவமனைக்கு ஆக்சிஜனை கொண்டு சேருங்கள் என நீதிமன்றம் பதிவு செய்ததும் இதுவே முதல்முறை.
சாட்சி 2 : மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக்கில் ஜாகிர் ஹுசேன் மருத்துவமனையில் 131 நோயாளிகள் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்கள். அவர்களுக்கு நேரடியாக டேங்கரில் இருந்து ஆக்சிஜன் அனுப்பப்பட்டு வந்தது. அந்த இணைப்பில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டது. அதனை சரி செய்வதற்காக 30 நிமிடங்கள் ஆக்சிஜன் நிறுத்தப்பட்டது. இதில் 22 பேர் மூச்சுத்திணறி உயிர் இழந்தார்கள்.
கொரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்படுகிறவர்களுக்கு நுரையீரலின் இருபுறமும் பாதிக்கப்படுவதனால் அவர்களுக்கு ஆக்சிஜன் கண்டிப்பாக தேவைப்படுவதாக சொல்லப்படுகிறது. இதனாலேயே ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது.
சாட்சி 3 : கடந்த ஆண்டுகளில் அதிகபட்சமான தினசரி பாதிப்பு என்பது 1 லட்சத்துக்கும் குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது 3 லட்சத்திற்கு அருகில் பாதிப்பு எண்ணிக்கை இருக்கிறது. நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய உரையின் போது ‘கொரோனா இரண்டாவது அலை நம்மை புயல் போல தாக்குகிறது’ என அவர் குறிப்பிட்ட வார்த்தைகளே கொரோனா இரண்டாவது அலை எவ்வளவு மோசமானது என்பதற்கு சான்று
தமிழகத்திலும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அறியப்பட்டு வருகிறது. மீண்டும் புதிதாக பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்துக்கொண்டே போகிறது. தினசரி பாதிப்பு 13 ஆயிரத்தை நெருங்குகிறது. இறப்பும் 50 என்ற எண்ணிக்கையை அடைகிறது. இது மிகவும் மோசமானது.
பொருளாதாரத்தை காரணம் காட்டி முழு ஊரடங்கு என்பதை மத்திய அரசு தவிர்த்து வருகிறது. ஆனாலும் சில மாநிலங்கள் வேறு வழியின்றி முழு ஊரடங்கை கடைபிடித்து வருகின்றன. மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நிலவுவது போன்ற அசாதாரணமான சூழல் தமிழகத்தில் இல்லை என்றாலும் கூட கொரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் தமிழகத்தின் நிலைமையும் மோசமாக மாற வாய்ப்பு உள்ளது.
ஏழை எளிய மக்களால் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெற முடியும். அப்படி இருக்கையில் இதுபோன்ற அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டால் நாம் மிகவும் பாதிப்படைவோம். ஆகவே எளிய நடைமுறைகளான – மாஸ்க் அணிவது, தனித்து இருப்பது போன்றவற்றை கடைபிடித்தாலே நம்மால் கொரோனா எனும் கொடும் நோய் பரவலில் இருந்து தப்பிக்க முடியும்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!