பாரதியார் : அப்போது யாரும் கண்டுகொள்ளவில்லை ஆனால் இப்போது…

ஒரு சிறந்த சாதனையாளருக்கு சமூகம் செய்யக்கூடிய சிறந்த அங்கீகாரம் என்பது அவர் உயிரோடு இருக்கும் போதே அவரது சாதனைக்கான பாராட்டையும் அங்கீகாரத்தையும் வழங்குவது தான். ஆனால் நாமோ ஒருவர் இறந்த பின்பு நெடிய காலத்திற்குப் பின்பு தான் அவரது சாதனைகளை உணர்ந்து அவருக்கான அங்கீகாரத்தை அளித்து இருக்கிறோம். இந்தப் பட்டியலில் பலர் இருக்கிறார்கள், அதிலே பாரதியார் அவர்களும் இருக்கிறார். பாரதியார் அவர்கள் தனது கவிதைகள் உலகமெங்கும் மக்களுக்கு எளிய முறையில் கிடைக்கவேண்டும் என நினைத்தார். ஆனால் அப்போது அவருக்கு யாரும் உதவவில்லை. பாரதியார் காலத்தைக் கடந்து சிந்தித்தவர் ஆனால் அவரது சிந்தனையை இன்று உள்ள தலைமுறை ஏற்றுக்கொண்டதே தவிர அப்போதைய தலைமுறை கண்டுகொள்ளவில்லை.

பாரதியார் புத்தகங்களை வெளியிட யாரும் முன்வரவில்லை

தேடி சோறு நிதம் தின்று – பாரதி பிறந்தநாள் பகிர்வு

பாரதியார் கவிதைகள் இன்று பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது பாரதியார் இருந்து அவரது கவிதைகளையும் கருத்துகளையும் வெளியிட நினைத்து இருந்தால் பல பதிப்பகங்கள் முன்வந்து இருக்கும். ஆனால் அன்று பாரதியார் தனது புத்தகங்களையும் கவிதை படைப்புகளையும் வெளியிட உதவிகேட்டு பல நண்பர்களுக்கு கடிதம் எழுதினார். ஆனால் அதற்கு பதில் கூட அவர்களிடம் இருந்து கிடைக்கவில்லை. இதனால் அவர் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தார்.

தாகூர் நோபல் பரிசு வாங்கியபிறகு அவரது புகழ் வெளிநாடுகளில் பரவுவதைக்கண்டார் பாரதி. பல மொழிகள் கற்றவர் பாரதி ஆகவே அவரால் பிறரின் கவிதைகளை தனது கவிதைகளோடு ஒப்பிட முடிந்தது. தாகூருக்கு அவரது கவிதைகளுக்காக கிடைக்கும் பட்டங்கள் தனது கவிதைக்கு கிடைக்காததை எண்ணி கவலை அடைந்தார் பாரதி. அவர் பொறாமைப்படவில்லை, மாறாக ஆதங்கம் கொண்டார். காரணம், தாகூர் கவிதைகளைவிடவும் தனது கவிதை சிறந்தது என நினைத்தார் பாரதி. தனது கவிதைகளுக்கு போதிய அங்கீகாரம் கிடைக்காமல் போனதற்கு தமிழக மக்கள் தன்னை கண்டுகொள்ளாமல் போனது தான் என ஆதங்கம் கொண்டார் பாரதி.

பாரதியாரை தூற்றிய மக்கள்

இப்போது நாம் பேசும் பல பகுத்தறிவு கருத்துக்களை பாரதியார் அவர் வாழ்ந்த காலத்தில் பேசியவர். எத்தனை சங்கடங்கள் வந்தபோதும் அவர் கொள்கைகள் தவறாது வாழ்ந்து வந்தவர். காலம் கடந்து பாரதியார் சிந்தித்தார் என்றே கூற வேண்டும்.

பாரதியார் ஏறத்தாழ இரண்டு ஆண்டு காலம் கடையத்தில் வாழ்ந்தார். அங்கு இருந்தபடியே ‘சுதேசமித்திர’னுக்குக் கட்டுரைகள் எழுதி வந்தார்; ‘கலா நிலையம்’ என்ற ஓர் அமைப்பை நிறுவி, அதன் வாயிலாகத் தமிழ்ப்பணி புரிய விரும்பினார். தனி மனித சுதந்திரம் சாதி, சமய வேறுபாடற்ற சமுதாயம் ஆண், பெண் நிகர் கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகச் செய்தல் முதலான தம் சீரிய கனவுகளை முற்போக்கான சிந்தனைகளைச் செயற்படுத்த முற்பட்டார்; ஆயின், கடையம் மக்களோ அவரைச் சரிவரப் புரிந்து கொள்ளாமல் தூற்றினர். இதனால் சலிப்பும் சோர்வும் உற்றார் பாரதியார்.

இப்போதாவது புரிந்துகொண்டோமே

இப்போது பாரதியார் அவர்களுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்து வருகிறது. மகாகவி பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், சிறப்பு வாய்ந்த சுப்பிரமணிய பாரதியின் 100-வது நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்துவதாகவும், இந்த நினைவு தினத்தில் அவரது பெரும்புலமை, நாட்டுக்கு ஆற்றிய பன்முகப்பங்களிப்பை நினைவில் கொள்வோம், சமூக நீதி, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நினைவில் கொள்வோம் எனவும் கூறியிருந்தார்.

‘உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இன்று, சுப்பிரமணிய பாரதியின் 100 வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக காசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி அமர்வு நிறுவப்படும்’ என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

தமிழக மக்களும் தமிழக அரசும் கூட தற்போது பாரதியாருக்கு அங்கீகாரம் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *