அதிமுக வலுவாக இருப்பது அவசியம்!
ஜனநாயக அமைப்பாக இருந்தாலும் அங்கே வலுவான எதிர்க்கட்சி ஒன்று இல்லை என்றால் அங்கேயும் ஒரு சர்வாதிகார ஆட்சி தான் நடக்கும். எதிர்க்கட்சி என்பது தேர்தலில் தோற்றதொரு கட்சியாக மட்டுமே இருக்க வேண்டும். மாறாக, வலுவிழந்த கட்சியாகவோ அல்லது சுய பிரச்னைகளுக்குள்ளே சிக்கிக்கொண்டு தவிக்கும் கட்சியாகவோ இருந்தால் அது அந்த கட்சிக்கும் நல்லதல்ல மக்களுக்கும் நல்லதல்ல. அந்த வகையில் அதிமுக வலுவாக இருப்பது அவசியம்.
அதிமுக வலுவாக இருக்கிறதா?
முன்னால் முதல்வரும் அதிமுகவின் பொதுசெயலாளருமான ஜெயலலிதா அவர்கள் அடிக்கடி அதிமுகவின் பலம் குறித்து பேசும் போது 2 கோடி தொண்டர்களை கொண்ட இயக்கம் என குறிப்பிட்டு பேசுவார். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் ஏற்படுத்திய தாக்கம் என்பது அதற்கு முக்கியமான காரணம். ஜெயலலிதா அவர்களின் திடீர் மறைவுக்கு பிறகு தொடர்ச்சியாக அதிமுக கட்சியானது சில உட்கட்சி முரண்பாடுகளை சந்தித்தது உண்மை தான். ஒரு தலைவரின் மறைவுக்குப்பின்னர் இப்படி நடைபெறாமல் இருந்தால் தான் அது ஆச்சர்யம்.
ஜெயலலிதா அவர்களின் திடீர் மறைவு கட்சிக்கும் ஆட்சிக்கும் அடுத்து தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டியவர்களை அவர் அடையாளம் காட்டிவிடாமல் போய்விட்டது. ஒருவேளை அவர் யாரையேனும் அடையாளம் காட்டியிருந்தால் குறிப்பிட்ட நபர் எளிதாக கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்தி சென்றிருக்க முடியும். இது மாபெரும் சிக்கலை அதிமுகவில் இன்றளவும் ஏற்படுத்தி வருகிறது.
எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பிறகான ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தாலும் இப்போது ஓபிஎஸ் – இபிஎஸ் என்ற இரட்டை தலைமையின் கீழ் கட்சி வழிநடத்தப்படுவதாக தெரிந்தாலும் அதிமுக முன்பு போல வலுவான நிலையில் இல்லை என்பதே எதார்த்தம். ஒரு சாரதியின் வழிகாட்டலுக்கு உட்பட்டு ஓடும் இரண்டு குதிரைகள் பூட்டிய வண்டி வெற்றி பெறும். ஆனால் இரண்டு குதிரைகளும் சாரதியின் நிலைக்கு வந்து தாங்களே ஓடும் திசை பற்றிய முடிவெடுக்க முயற்சித்தால் எங்ஙனம் ஓடுவது?
ஒற்றைத் தலைமை நோக்கி அதிமுக நகர்வது அவசியம்
ஆளுமைகள் பிறப்பது கிடையாது. அதேபோல ஆளுமைகள் திரைப்பிரபலமாக இருக்க வேண்டும் என்கிற அவசியமும் கிடையாது. தொண்டர்களின் மனதை எந்தத் ஒருவரால் வெல்ல முடிகிறதோ அவர் ஆளுமையாக உருவெடுக்கிறார். ஆளுமைகள் இல்லாத கட்சியெல்லாம் அதிமுக இல்லை. அங்கே பலர் அந்தத்தகுதியுடன் தான் இருக்கிறார்கள். ஆனால், பிறருக்கு ஒருவர் தலைமை பொறுப்பேற்பதில் விருப்பம் இல்லை. அதுதான் அங்கே பிரச்சனை.
தேர்தலை நடத்தும் சமயத்திலாவது யார் இனி அதிமுகவிற்கு தலைமை பொறுப்பேற்க வேண்டும் என்ற முடிவுக்கு அதிமுக வருமா என்றால் மீண்டும் இரட்டை தலைமை நோக்கியே அவர்கள் நகர்ந்து இருக்கிறார்கள். அதுவும், இனிவரும் காலங்களிலும் அதிமுகவில் இரட்டை தலைமையே இருக்கும் என்பது போல விதிகளையும் திருத்தி வைத்துள்ளார்கள். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல இந்த முடிவு தவறான தாக்கத்தை இப்போதும் எதிர்காலத்திலும் ஏற்படுத்தப்போகிற ஒரு முடிவாகவே நான் பார்க்கிறேன்.
தேர்தலில் இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் தலைவர் பதவிக்கு வர விரும்பும் சக நபர்கள் தேர்தலிலே சுயமாக போட்டியிட அனுமதித்து தொண்டர்கள் யாரை தேர்ந்தெடுக்க விரும்புகிறார்களோ அவர்களுக்கு தலைமை பொறுப்பை கொடுத்து மற்றவர்கள் தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பது என்ற மாபெரும் முடிவை தற்போது அதிகாரத்தில் உள்ள இருவரும் எடுத்திருந்தால் நிச்சமாக நல்ல மாற்றம் அதிமுகவில் ஏற்பட்டு இருக்கும். தெரிவு செய்யப்பட்டவர்கள் அவர்கள் செயலைப்பொறுத்து ஆளுமையாக மாற்றம் கண்டிருப்பார்கள்.
அதிமுக வலுவாக இருப்பது அவசியம்
தமிழகம் இத்தனை ஆண்டுகாலம் ஒரு வெற்றிகரமான மாநிலமாக பயணித்ததில் திமுக – அதிமுக என்ற மாபெரும் கட்சிகளின் பங்கு அதிகம். ஒருவேளை இவற்றில் ஒன்று இல்லாமல் போய் வேறொரு கட்சி இவற்றில் ஒன்றின் இடத்தை பிடித்தாலும் அது தமிழகத்திற்கு சிக்கலே. அதற்காகவே அதிமுக என்ற இயக்கம் ஒரு வலுவான இயக்கமாக தமிழகத்தில் நிலைத்திருப்பது அவசியம் என நினைக்கிறேன்.
இங்கே எழுதப்பட்டிருக்கும் கருத்துக்கள் என்னுடைய சொந்த கருத்துக்கள். உங்களுடைய கருத்துக்களை கமெண்டில் பதிவிடுங்கள்.
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்