ஓரின திருமணம் – உச்சநீதிமன்றத்தில் நடக்கும் அதிரடி வழக்கு

நாட்டின் உயரிய நீதி அமைப்பான உச்ச நீதிமன்றத்தில் ஓரின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கக்கோரும் மனுக்கள் மீதான விசாரணை நடந்து வருகிறது. LGBTQ+ பிரிவினரின் உரிமை சார்ந்த விசயங்களில் இந்த ஓரின திருமணம் சார்ந்த வழக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த வழக்கு அனைவரின் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. 

இந்த வழக்கு விசாரணையின் போது நடைபெறும் சூடான விவாதங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுத இருக்கிறேன்.

வழக்கின் சாராம்சம் என்ன?

தற்போது இந்தியாவில் உள்ள திருமண சட்டங்களின்படி, குறிப்பிட்ட வயதை எட்டிய ஆணும் பெண்ணும் இணைந்து செய்துகொள்ளும் திருமணத்திற்கு தான் அங்கீகாரம் உண்டு. அதுதான் சட்டப்படி சரியான திருமணம். ஒரு ஆண் இன்னொரு ஆணையோ அல்லது ஒரு பெண் இன்னொரு பெண்ணையோ திருமணம் செய்துகொள்ளும் ஓரின திருமணம் இந்தியாவில் அங்கீகரிக்கப்படவில்லை. ஆகவே, இப்போதைக்கு அப்படி செய்யப்படும் ஓரின திருமணங்கள் சட்டத்திற்கு எதிரானவை. 

உலகின் பல நாடுகளில் ஓரின திருமணம் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்த நாடுகளைப்போலவே இந்தியாவிலும் தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று கோரி தான் பலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால், இந்த வழக்குகள் மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட் மேற்கொள்வதை மத்திய அரசு ஆதரிக்கவில்லை.

வழக்கு விசாரணையை மத்திய அரசு எதிர்க்க காரணம் என்ன?

இந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் விசாரிக்க ஆரம்பித்ததில் இருந்து இந்த விசாரணையை நிறுத்த வலியுறுத்தி வருகிறது மத்திய அரசு. அதற்காக நீதிமன்றத்தில் முறையீடு செய்தும் உள்ளது. ஆனால், அனைத்தையும் தாண்டி வழக்கு விசாரணையை ஆரம்பித்து உள்ளது நீதிமன்றம்.

நாடாளுமன்றம் தான் சட்டம் இயற்ற வேண்டும், நீதிமன்றம் அல்ல

விசாரணை துவங்கும் முன்பு நீதிமன்றத்தில் அவசர கோரிக்கை மனு ஒன்றினை தாக்கல் செய்தது மத்திய அரசு. அதில், ஒருபாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கோரும் மனுக்கள் விசாரணைக்கு உகந்தவை தானா என்பதை நீதிமன்றம் முடிவு செய்த பின்னர் வழக்கு விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என கோரியது. 

மேலும் அதிலே, எது சட்டப்படி செல்லத்தகுந்த திருமணம் என்பதை முடிவு செய்திடும் சட்டத்தினை உருவாக்கும் உரிமை நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உண்டு. அப்படிப்பட்ட சூழலில் இந்த வழக்கினை விசாரிப்பது தேவையில்லை. நீதிமன்ற உத்தரவு மூலமாக உரிமைகள் வழங்கப்பட முடியாது எனவும் வாதிடப்பட்டது.

அரசுக்கு நேரம் தேவை 

ஒரு பாலின திருமணம் குறித்து அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க கால அவகாசம் தேவை என வாதாடினார் மத்திய அரசு வழக்கறிஞர். மேலும், மாநில அரசுகள் தங்களுக்கென திருமண விதிகளை வைத்துள்ளன. ஆகவே, அவற்றின் கருத்துக்களை கேட்பதும் அவசியம். ஆகவே நேரம் வேண்டும்.

நீதிமன்றம் எப்படி இந்த கோரிக்கைகளை எதிர்கொண்டது?

தன் பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் கோருவோர் அவர்களின் சார்பாக என்ன வாதங்களை எடுத்து வைக்கிறார்கள் என்பதை கேட்பது அவசியம். அதனை இந்த கோர்ட் பார்க்க விரும்புகிறது.

“சாரி சொலிசிட்டர். நாங்கள் தான் இங்கே முடிவெடுப்போம். எப்படி நீதிமன்றம் நடக்க வேண்டும் என்பதை நீங்கள் சொல்லக்கூடாது. இதனை எனது நீதிமன்றத்தில் அனுமதிக்க முடியாது” என தெரிவித்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்.

நீதிமன்ற விசாரணையில் பல காரசாரமான விசயங்கள் பேசபட்டுக்கொண்டுள்ளன. உதாரணத்திற்கு, பாலின சமத்துவம் பேசும் இங்கே “ஆண்களுக்கான திருமண வயது 21 என்றும் பெண்களுக்கான திருமண வயது 18 என்றும் ஏன் உள்ளது” என்பவை போன்ற பல விவாதங்கள் உள்ளன. இவை அனைத்தையும் இந்திய மக்கள் கவனிக்க வேண்டியது அவசியமானது.

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *