தனியார் நிறுவனங்களில் அதிகரிக்கும் பாலியல் துன்புறுத்தல், பெண் பணியாளர்கள் என்ன செய்திட வேண்டும்?
ஊதிய உயர்வு துவங்கி பல்வேறு விசயங்களில் தனது மேலதிகாரியை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய சூழல் நிலவுவதனால் பல தனியார் அலுவலகங்களில் பெண் பணியாளர்களுக்கு எதிராக பாலியல் தொந்தரவு அதிகரித்து வருவதாக தெரியவருகிறது. பாலியல் தொந்தரவு புகாரை அலுவலகங்கள் முறையாக விசாரிக்கின்றனவா? பெண் பணியாளர்கள் என்ன செய்திட வேண்டும்? வாருங்கள் பேசுவோம்.
இந்தியாவின் தலைசிறந்த நிறுவனங்களில் ஒன்றான TCS நிறுவனத்தில் பணியாற்றும் பெண் பணியாளர் ஒருவர் காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வழக்கில், தன்னுடைய மேலதிகாரி மீது தான் கொடுத்த பாலியல் புகார் குறித்து நிறுவனத்தின் கமிட்டி முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை என்றும் பாலியல் புகார் கொடுத்த பின்பு பலமுறை திட்டமிட்டு வெவ்வேறு பணிகளில் அமர்த்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மீண்டும் தனது பாலியல் புகார் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது அவரது முக்கியக்கோரிக்கையாக உள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அக்டோபர் 03,2022 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தனியார் அலுவலகங்களில் பாலியல் தொந்தரவு கடுமையாக நடைபெற்று வருகிறது. குடும்ப சூழல், வேலை அவசியம் என்பது போன்ற காரணங்களால் பெண் பணியாளர்கள் பலர் தங்களுக்கு நடைபெறும் பாலியல் தொந்தரவு கொடுமைகளை சகித்துக்கொண்டு கடந்து செல்கின்றனர். ஆனால், ஒரு அலுவலகத்தில் பணியாற்றும் பெண் பணியாளர்கள் பாலியல் தொந்தரவு பிரச்சனைகளை சந்திக்கும் போது அவர்களை பாதுகாக்க சட்டப்பாதுகாப்பு வழங்கப்படுகிறது. The Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act, 2013 என்ற சட்டம் அதற்கான வழிமுறைகளை தெளிவாக வழங்குகிறது. அவை குறித்து ஒவ்வொரு பெண் பணியாளரும் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.
எவையெல்லாம் பாலியல் துன்புறுத்தல்?
பணி செய்திடும் இடங்களில் ஒரு ஆண் பணியாளர் பெண் பணியாளருக்கு பின்வரும் ஏதேனும் ஒன்றையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றையோ செய்தால் அது பாலியல் துன்புறுத்தல் என்று கருத்தில் கொள்ளப்படும்.
தவறான எண்ணத்தோடு அனுமதி இன்றி தொடுவது உள்ளிட்ட செயல்பாடுகள்
பாலியல் தேவைகளை நிறைவேற்றக் கோருவது
பாலியலைக் குறிக்கும் வார்த்தைகளைப் பேசுவது
ஆபாசப் படங்களைக் காட்டுவது
வேறு ஏதாவது வகையில், உடல் மூலமாகவோ, வார்த்தைகள் அல்லது சைகைகள் மூலமாகவோ பாலியல் தன்மை கொண்ட செய்கைகளில் ஈடுபடுவது.
அலுவலகங்களின் பணி என்ன?
பணியிடங்களில் பெண் பணியாளர்களின் பாதுகாப்பிற்காகவும் அவர்களுக்குப் பாலியல் துன்புறுத்தல்கள் நிகழாமல் தடுப்பதற்காகவும், நிர்வாகங்களின் கடமைகளையும் பொறுப்புகளையும் சட்டத்தில் பட்டியலிட்டிருக்கிறது.
• பணியிடத்தில் அலுவலகத்திற்குத் தொடர்பற்ற மூன்றாம் நபர் வருவதைத் தடுப்பது.
• பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்குவது
• பாலியல் துன்புறுத்தலுக்கான தன்டனைகளின் விவரங்களைப் பணியாளர் காணும் வகையில் சுவரொட்டிகளையோ விளம்பரப் பலகையோ அலுவலக வளாகங்களில் வைப்பது
• அலுவலகப் புகார்க் குழு பற்றியும் (புகார்க் குழு பற்றிய விவரங்கள் இந்தக் கட்டுரையின் பின்பகுதியில் அளிக்கப்பட்டிருக்கின்றன) நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய முறைகள் பற்றியும் அனைவரும் பார்க்கும்படி எழுதி வைக்க வேண்டும்
• சட்டத்தின் நோக்கம் பற்றிய விழிப்புணர்வு பணியாளர்களிடம் ஏற்படும் வகையில் அவ்வப்போது பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட வேண்டும்
• பாலியல் துன்புறுத்தல், பணிவிதிகளின் கீழ் ஒரு தவறான நடவடிக்கையாகக் கருதப்பட்டு அதற்கான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பாலியல் துன்புறுத்தல் புகார்க் குழு உருவாக்கம்
பத்துப் பணியாளர்களுக்கு மேல் பணிபுரியும் ஒவ்வொரு நிறுவனமும் தனது அலுவலகத்தில் “பாலியல் புகார்க் குழு” என்னும் பெயரில் ஒரு குழுவை உருவாக்க வேண்டும். அந்தக் குழுவில் தலைமை நிர்வாகியால் நியமிக்கப்பட்ட கீழ்க்கண்டவர்கள் உறுப்பினர்களாகச் செயல்படுவர்.
1. அலுவலகத்தில் பணி புரியும் அதிக அனுபவம் வாய்ந்த பெண் பணியாளர்
2. பெண்கள் முன்னேற்றத்தில் ஈடுபட்டவரோ அல்லது சமூகநலனில் அக்கறை கொண்டவரோ அல்லது சட்டவிவரங்களை அறிந்த இரு பெண் பணியாளர்கள்.
3. பெண் சமுதாய முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் அரசுசாரா அமைப்புகளிலிருந்தோ சங்கங்களிலிருந்தோ தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்லது பாலியல் கொடுமைகளைப் பற்றிய விவரங்களை நன்கறிந்த ஒருவர்.
மேற்கூறியபடி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் குறைந்தது ஜம்பது சதவிகிதமாவது பெண்களாக இருத்தல் கட்டாயம்.
பாலியல் தொல்லை பற்றி எப்படி புகார் அளிக்க வேண்டும்?
பணியிடத்தில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டு வேதனைக்குள்ளான பெண் அது குறித்த புகாரை நிர்வாகத்தின் புகார்க் குழுவிற்கு சம்பவம் நடந்த மூன்று மாதத்திற்குள் அனுப்ப வேண்டும்.
சமரசம் : புகார்க் குழு, முறையான விசாரணையைத் தொடங்குமுன், புகாரை அளித்த பெண் குற்றம்சாட்டப்பட்டவரோடு பேச்சுவார்த்தைகள் மூலம் சமரசமாகப் போக விருப்பம் தெரிவித்தால் அதற்கு நடவடிக்கை எடுக்கலாம். அவ்வாறு சமரசப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு கிடைக்குமாயின், புகாரக்குழு, தீர்வின் விவரங்களை விளக்கும் ஒரு ஒப்பந்த அறிக்கை தயாரித்து நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
நிர்வாகம் புகார்க் குழுவின் பரிந்துரையை ஏற்று அதன்படி புகாரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். புகார்க்குழு ஒப்பந்த அறிக்கையின் நகல்களைப் புகாரைப் பதிவுசெய்த பெண்ணிற்கும் குற்றம்சாட்டப்பட்ட ஆண் பணியாளருக்கும் அளித்திடல் அவசியம்.
மேற்கண்டவாறு தீர்வு ஏற்படுமாயின் புகார் முடிவுக்கு வந்ததாகக் கருதப்படும்.
புகார் வந்த பிறகு அக்குழுவானது முறையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும். புகாரில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் புகார் குறித்து தெரியப்படுத்த வேண்டும். குற்றம் சுமத்தப்பட்ட நபர் தனது தரப்பு நியாயத்தை தெரிவிக்க போதிய வாய்ப்பு வழங்க வேண்டும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் எடுக்கப்பட வேண்டிய நடவெடிக்கைகள் குறித்த பரிந்துரையை குழுவானது தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். அறிக்கை பெற்ற 60 நாட்களுக்குக்குள் அந்த அறிக்கையின் மீது முடிவை அலுவலகம் எடுக்க வேண்டும்.
ஒரு பெண் பணியாளர் தவறான குற்றசாட்டை ஒரு ஆண் பணியாளர் மீது சுமத்தினால் அவரை முறைப்படி தண்டிக்க தேவையான பரிந்துரைகளை குழு வழங்கும். அதன் அடிப்படையில் அவர் மீது நடவெடிக்கை மேற்கொள்ளப்படும்.
பெண் பணியாளர்களே!
காலம் மாறிவிட்டது, நீங்கள் தான் மாற வேண்டும். உங்களுக்கு பணி இடங்களில் பாலியல் தொந்தரவு நடந்தால் அது குறித்து தைரியமாக புகார் அளித்திடுங்கள். ஒரு பெண் பணியாளருக்கு பாலியல் தொந்தரவு நடந்தால் அவருக்கு ஆதரவாக சக பெண் பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். பல அலுவலங்களில் ஆண்கள் தான் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள். ஆகவே, பல நேரங்களில் புகார்கள் முறையாக விசாரிக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுகிறது. மேலும், இதுபோன்று பாலியல் துன்புறுத்தல் புகார்களை அளித்திடும் பெண் பணியாளர்களை தொடர்ந்து பணியில் நீட்டிக்க செய்திடவும் பல நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன. ஒருவேளை பெண் பணியாளர்கள் இது மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தால் நீதிமன்றத்தை நாடலாம்.
கல்வி மற்றும் அனுபவத்தில் சிறந்தவர்கள் தான் நிறுவனங்களை நடத்துகிறார்கள். ஆகவே, பெண்கள் பாதுகாப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அனைவரும் அறிந்தே வைத்திருப்பார்கள். ஆனால், நிறுவனத்தின் பெயர் பாதிக்கப்பட்டுவிடும் என்ற சூழலில் அவர்களே பல புகார்களை மறைக்க முயலுகிறார்கள். புகழ்பெற்ற TCS நிறுவனத்திலேயே புகார் முறையாக விசாரணை செய்யப்படவில்லை என்ற குற்றசாட்டு எழும்போது சாதாரண நிறுவனங்களின் நிலை மிகவும் மோசமாகவே இருக்கும் என்பதையும் மறுக்க முடியாது. ஆனால், இந்த நிலை மாற வேண்டும்.
ஒவ்வொரு நிறுவனத்திலும் விசாகா கமிட்டி முறையாக அமைக்கப்பட்டுள்ளதா, செயல்படுகிறதா என்பதை அரசு அவ்வப்போது உறுதிப்படுத்த வேண்டும். அரசு – நிறுவனம் – பெண் பணியாளர்கள் – ஆண் பணியாளர்கள் இணைத்து தான் பெண்கள் பணியாற்ற ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்க முடியும். இதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
“மாற்றத்தை விதைக்க கலந்துரையாடுவோம்”
— பாமரன் கருத்து