அக்னிபாத் திட்டம் என்றால் என்ன? ஏன் கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது?

இராணுவத்தின் முப்படைகளுக்கும் ஆண்டுக்கு 46,000 வீரர்களை 4 ஆண்டு ஒப்பந்தத்தில் சேர்க்கும் திட்டம் தான் அக்னிபாத் திட்டம். இதன்மூலமாக, இராணுவத்தின் செலவுகளை குறைக்க முடியும் என இந்திய ராணுவம் நம்புகிறது. இதன் குறைபாடுகளை சுட்டிக்காட்டி இந்தியாவின் பல நகரங்களில் இளைஞர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் செய்து வருகிறார்கள்.

அக்னிபாத் திட்டம் ஏன் கொண்டுவரப்படுகிறது?

அக்னிபாத் திட்டம் குறித்து அறிந்துகொள்வதற்கு முன்னதாக இந்திய இராணுவத்தின் செலவினங்களையும் நோக்கங்களையும் அறிந்துகொள்வது அவசியம்.

பட்ஜெட்டில் இந்திய இராணுவத்திற்கு என்று ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கப்படுகிறது. அப்படி ஒதுக்கப்படும் நிதியில் கணிசமான தொகை ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்திற்காக ஒதுக்கப்படுகிறது. பிறகு, உள்ள நிதியில் சம்பளம், பராமரிப்பு செலவு அனைத்தும் செய்யப்படுகிறது. இந்த இரண்டும் போக மீதம் உள்ள நிதியில் இருந்து தான் இராணுவத்திற்கு தேவையான தளவாடங்கள் வாங்க வேண்டிய சூழல் உள்ளது.



உதாரணத்திற்கு, 2022-2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ 5,25,166 லட்சம் கோடி ரூபாய் இந்திய ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலே, 1,19,696 லட்சம் கோடி ரூபாய் ஓய்வூதியம் வழங்குவதற்காக மட்டும் செலவு செய்யப்படுகிறது. இராணுவ வீரர்களின் பராமரிப்பு செலவு மற்றும் ஊதியம் ஆகியவற்றுக்காக 2,33,000 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது.
நீங்கள் இந்த கணக்கீடுகளை பார்த்தால் சுமார் மூன்று மடங்கு தொகையை இதற்காகவே ராணுவம் செலவு செய்கிறது. இதில் போக மிச்சம் இருக்கும் தொகையை கொண்டு தான் ராணுவம் தளவாடங்கள் வாங்க வேண்டும், ஆராய்ச்சிகளை செய்திட வேண்டும், ராணுவத்தை மேம்படுத்த வேலைகளை செய்ய வேண்டும். இது இராணுவத்திற்கு சிக்கலாக உள்ளது. ஆகவே தான், ஓய்வூதியம், ஊதியம் ஆகியவற்றுக்கு ஆகும் செலவுகளை குறைக்க ராணுவம் முயற்சி செய்கிறது. அதன் ஒருபடி தான், அக்னிபாத் திட்டம்.

அக்னிபாத் திட்டம் முக்கிய அம்சங்கள் என்ன?

தற்காலிகமாக ராணுவத்தில் பணியாற்றும் பணி வாய்ப்பை இளைஞர்களுக்கு வழங்குவதற்கான திட்டத்தை இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. Tour Of Duty என்று அழைக்கப்படும் புதிய வேலைவாய்ப்பு முறைக்கு அக்னிபத் திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. 

அதன்படி, 17.5 வயது முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்கள் (ஆண்கள் பெண்கள்) இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் தேர்வு செய்யப்படுவார்கள். கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு சேர்ப்புக்கு மட்டும் உயர்ந்தபட்ச வயது 23 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆயுதபடைக்கு என்னென்ன நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுமோ அவை அனைத்தும் அக்னிபத் திட்டத்தில் சேரவும் பின்பற்றப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் 46,000 பேர் வேலைக்கு சேர்க்கப்படுவார்கள். ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். முதல் 6 மாதம் பயிற்சி, அதற்கு அடுத்து இராணுவ பணி செய்திட வேண்டும். முதலாம் ஆண்டு ரூ.30,000, இரண்டாம் ஆண்டு ரூ.33,000, மூன்றாம் ஆண்டு ரூ.36,500, நான்காம் ஆண்டு ரூ.40,000 என மாதாந்திர ஊதியம் வழங்கப்படும். இதனுடன் சேர்த்து இதர படிகளும் வழங்கப்படும். 

ஊதியத்தில் 30 சதவீதம் பங்களிப்பு தொகையாக பிடிக்கப்படும். மீதமுள்ள 70 சதவீதம் மட்டும் வழங்கப்படும். வீரர்களிடம் பிடித்தம் செய்யப்படும் அதே அளவிலான பங்களிப்பு தொகையை மத்திய அரசு தனது பங்களிப்பாக செலுத்தும். 4 ஆண்டுகளுக்குப் பின்னா் தொகுப்பு நிதியில் செலுத்தப்பட்ட ரூ.5.02 லட்சம் மற்றும் அரசு அளிக்கும் அதே தொகை சோ்த்து வட்டியுடன் சேவா நிதியாக ரூ.11.71 லட்சம் பணப்பலன் வீரா்களுக்கு வழங்கப்படும். இதற்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.

4 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பாக பணியாற்றும் 25% அக்னிபாத் வீரர்களுக்கு மட்டும் நிரந்தரமாக ராணுவத்தில் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படும். மீதமுள்ள 75% வீரர்கள் ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். அதேபோல, அக்னிபாத் வீரர்களுக்கு இப்போது ராணுவத்தில் இருக்கும் பணி நிலைகள் எதிலும் பொறுப்புகள் வழங்கப்பட மாட்டாது. பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்படும் விருதுகள் இவர்களுக்கும் வழங்கப்படும். 

அக்னிபாத் வீரர்களுக்கு குறிப்பிட்ட அந்த 4 ஆண்டுகளும் 48 லட்சத்துக்கான ஆயுள் காப்பீடு உண்டு. ஒருவேளை உயிரிழப்பு ஏற்பட்டால் இன்சூரன்ஸ் தொகை மற்றும் மத்திய அரசின் பங்களிப்பாக கூடுதலாக 44 லட்சம் வழங்கப்படும். பணியின்போது காயமடைந்து 100 சதவீத மாற்றுத் திறனாளியானால் ரூ.44 லட்சம், 75 சதவீதத்துக்கு ரூ.25 லட்சம், 50 சதவீதத்துக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். 

அக்னிபாத் திட்டத்தை எதிர்க்க என்ன காரணம்?

அக்னிபாத் திட்ட அறிவிப்பு வெளியானவுடன் இளைஞர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அதிக அளவில் தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக, வட இந்தியாவில் போராட்டங்கள் வன்முறையாக மாறும் அளவிற்கு கடுமையாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்தை எதிர்ப்பதற்கு சொல்லப்படும் காரணங்களை பார்க்கலாம்.

நிரந்தர பணி இல்லை : ஆண்டுக்கு சுமார் 46,000 பேர் அக்னிபாத் திட்டத்தில் வேலைக்கு எடுக்கப்பட இருக்கிறார்கள். இதில் சேருவோரில் 75% பேர் 4 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்படுவார்கள். ராணுவத்தில் சேர்வதை தங்களது வாழ்க்கையின் லட்சியமாக கருதும் இளைஞர்களுக்கு தற்காலிக பணி என்பது பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இப்போது வரைக்கும் நேரடியாக இராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முறை இருக்கிறது என்றாலும் கூட நாளடைவில் அது குறைக்கபடலாம் அல்லது நீக்கப்படலாம் என்பதும் எதிர்ப்புக்கு முக்கியக்கராணம்.

ஓய்வுக்கு பிறகான வேலை : 17.5 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்கள் இந்த திட்டத்தில் வேலைக்கு எடுக்கப்பட இருக்கிறார்கள். 12 ஆம் வகுப்பு முடித்த உடனேயே இந்த வேலைக்கு எடுக்கப்பட இருப்பதால் அவர்களால் மேல் படிப்புகளை படிக்க முடியாத சூழல் உண்டாகும். ஒருவேளை 4 ஆண்டுகளுக்கு பிறகு நிரந்தர வேலை கிடைக்காமல் போனால் 22 வயதுக்கு பிறகு வெளியே வந்து மேற்படிப்பை தொடர்வது மற்றும் வேறு வேலைகளுக்கு செல்வது சிரமமான காரியமாக மாறிவிடும். ( இந்த நான்கு வருடங்களில் பல பயிற்சிகளை வீரர்களுக்கு கொடுக்க இருப்பதாகவும் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மொத்தமாக வழங்கப்படும் 11.71 லட்சத்தைக் கொண்டு வெளியே வருகிறவர்களால் சுயமாக தொழில் துவங்க முடியும் என்று மத்திய அரசு சொல்கிறது)

தேசத்தின் பாதுகாப்பு : நல்ல இராணுவ வீரராக மாறுவதற்கு 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகலாம் என்ற சூழலில் பலர் அடுத்த ஒரு ஆண்டிலேயே விடுவிக்கப்படுவார்கள். திடீரென போர் சூழல் உருவானால் மூன்று மடங்கு போதிய பயிற்சி அற்ற இராணுவ வீரர்களுடன் ராணுவம் சற்று பலம் குறைந்ததாக இருக்கும் என பலர் கருதுகிறார்கள்.

பாதை மாறும் வாய்ப்பு : இராணுவ பயிற்சி என்பது தீவிரமானது. ஆயுதங்கள் அனைத்தையும் கையாள அவர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கப்படும். அப்படி பயிற்சி பெற்றவர்களில் 75% பேரை பணி இல்லை என்று கூறி மீண்டும் சமூகத்திற்குள் திருப்பி அனுப்பும் போது ஏற்படும் அழுத்தத்தால் தவறாக செயல்பட வாய்ப்பு உள்ளது. அவர்களை தீவிரவாத இயக்கங்கள் மூளை சலவை செய்து தங்களுக்கு சாதகமான பணிகளில் அமர்த்திக்கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

உங்களது கருத்தை கமெண்டில் பதிவிடுங்கள்.

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *