இலங்கை பிரச்சனைக்கு என்ன காரணம்? வாங்க பார்க்கலாம்

இலங்கை ஓர் ரம்மியமான நாடு. ஆனால், இப்போது அங்கே அமைதி இல்லை. திரும்பும் திசையெல்லாம் போராட்டம் வன்முறை என பற்றி எரிகிறது. விடுதலைப்புலிகள் உடனான போர் வெற்றிக்குப் பிறகு ஹீரோவாக சிங்கள மக்களால் கொண்டாடப்பட்ட ராஜபக்சே இன்று அதே மக்களால் விரட்டி அடிக்கப்படுகிறார். ராஜபக்சே குடும்பத்தினர் உட்பட அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தவர்களின் வீடுகள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. வாக்களித்த மக்களே அவர்களை தாக்கி வருகிறார்கள். இலங்கையில் இந்த அவலநிலை ஏற்பட என்ன காரணம் என்ற கேள்வி எதார்த்தமாக அனைவருக்கும் எழும். இங்கே அதற்கான காரணங்களை தேடலாம்.

இலங்கையில் நெருக்கடி எப்படி தொடங்கியது?

இலங்கையின் இந்த நெருக்கடி நிலைக்கு முக்கியக்காரணம் அதனிடம் அந்நிய செலாவணி கையிருப்பு மிகவும் குறைவாக இருப்பது தான். எரிபொருள் உள்ளிட்ட பெரும்பான்மையான பொருள்களை இறக்குமதி செய்திடவும், சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிடம் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வாங்கிய கடனுக்கான வட்டியை செலுத்தவும் கணிசமான அளவிற்கு பணம் இலங்கைக்கு தேவைப்படும். ஆனால், ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு எடுத்த மோசமான நடவெடிக்கை மற்றும் கொரோனா காரணமாக  சுற்றுலா துறையில் ஏற்பட்ட பின்னடைவு ஆகியவை காரணமாக இலங்கையின் பொருளாதார நிலை பெரிதும் பாதிப்பு அடைந்தது.

 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பல்வேறு வரிக் குறைப்புகளை ராஜபக்சே மேற்கொண்டார். இது வருவாயைக் குறைத்தது. இலங்கையின் முக்கிய வருவாய் சுற்றுலா மூலமாகவே கிடைக்கிறது. சுற்றுலா மூலமாக கணிசமான அளவில் அந்நிய செலாவணி கையிருப்பு கிடைத்தது. ஆனால், கொரோனா இதில் பெரிய வீழ்ச்சியை தந்தது. ஒட்டுமொத்த உலகமும் கொரோனா முடக்கத்தை சந்திக்க அது இலங்கையை பெரிதும் பாதித்தது. சுற்றுலா துறை முடங்கியதால் இலங்கை மக்கள் பலரும் வருமானம் இன்றி தவித்தார்கள். 

அந்நிய செலாவணி வருவாய் சரிந்த நிலையில், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக சீனாவிடமிருந்து பெற்ற கடன்கள் உள்ளிட்ட வெளிநாட்டு கடன்களால் இலங்கை சிக்கலை சந்தித்தது.  இந்தியா போன்ற அண்டை நாடுகளிடம் இருந்து இலங்கைக்கு கடன் கிடைத்தாலும், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு முறையாக பணம் செலுத்த இலங்கையால் முடியவில்லை. 

சூழல் இப்படி மோசமாக சென்று கொண்டு இருக்க ராஜபக்சே அரசு எடுத்த இன்னுமொரு முடிவு இலங்கை மக்களை மேலும் வதைத்தது. 2021 இல் இரசாயன உரங்களை இலங்கை முழுமைக்கும் தடை செய்து இயற்கை விவசாயத்திற்கு இலங்கை மக்கள் திரும்ப அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார் ராஜபக்சே. இது விவசாயிகளின் எதிர்ப்பைத் தூண்டியது மற்றும் முக்கியமாக தேயிலை மற்றும் நெல் உற்பத்தி பெரும் சரிவைக் கண்டது. இது நிலமையை மேலும் மோசமாக்கியது.

ஏன் ராஜபக்சே மக்களால் எதிர்க்கப்படுகிறார்?

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை வெற்றி பெற்றது. இந்தப் போரில் வெற்றி பெற்றதற்கு பின்னர் சிங்கள மக்களால் ஹீரோவாக பார்க்கப்பட்டவர் தான் ராஜபக்சே. இலங்கை அரசாங்கத்தின் முக்கிய அதிகார மையங்கள் அனைத்தையும் ராஜபக்சே குடும்பம் தான் ஆக்கிரமித்து இருந்தது. ஆகவே தான் இந்த அவல நிலைக்கு ராஜபக்சே குடும்பத்தினர் மீது அதே சிங்கள மக்கள் பெரும் தாக்குதலை நடத்தி வருகிறார்கள். ராஜபக்சே எடுத்த சில தவறான முடிவுகள் தான் இலங்கையை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது என்பதே பிரதான எதிர்ப்புக்கு காரணம்.

> அதிரடி வரி குறைப்பு செய்தது வருமானத்தை குறைத்தது.

> இந்த ஆண்டு மட்டும் 7 பில்லியன் டாலர் கடனை அடைக்க வேண்டிய சூழல் இருக்கும்போது முன்கூட்டியே சர்வதேச நிதி உதவியை பெற முயலாமல் போனது

> நிலமை மோசமாக இருக்கும்போது இரசாயன உரங்களை முற்றிலும் தடை செய்து மக்களை இயற்கை விவசாயத்திற்கு மாற உத்தரவு இட்டது உணவு பற்றாக்குறைக்கு வித்திட்டது.

> வருமானம் தராத கட்டமைப்புகளை உருவாக்க அதிக கடன்களை வெளிநாடுகளில் இருந்து வாங்கியது

இதுபோன்ற பல்வேறு பொருளாதார முடிவுகளை தவறாக எடுத்ததன் விளைவு தான் இந்நிலைக்கு காரணம். இதனை ராஜபக்சே இப்போது உணர்ந்து இருக்கிறார். ஆனால் மீள்வது கடினம்.  

புதிய அரசு இலங்கையை மீட்குமா?

அதிபர் கோத்தபய ராஜபக்சே இப்போது ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசை அமைக்க அனுமதி அளித்துள்ளார். இந்த இடைக்கால அரசு இலங்கையை மீட்டு நிலமையை சரி செய்யும் என பலரும் விரும்புகிறார்கள். வெளிநாடுகளின் ஆதரவு புதிய அரசுக்கு கிடைக்கும் பட்சத்தில் இலங்கை மீள வாய்ப்பு உண்டு.

இலங்கை ஓர் அற்புதமான ரம்மியமான நாடு. அங்கே வன்முறைகள் நடப்பது நிறுத்தப்பட வேண்டும். 

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *