குல்சாரி லால் நந்தா – மறக்கப்பட்ட பிரதமர் – வாடகை கூட கொடுக்க முடியாத அவலத்தில் மறைந்த தலைவர்

அரசியலில் வார்டு கவுன்சிலர் பதவியில் இருந்தாலே பலர் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். ஆனால் இரண்டு முறை இடைக்கால இந்திய பிரதமராகவும் கேபினெட் அமைச்சராகவும் இருந்த குல்சாரி லால் நந்தா தனது இறுதிக்காலத்தில் வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் வீட்டை விட்டு வெளியே தள்ளப்பட்டார். அவரை யாரென்று வீட்டு உரிமையாளருக்கும் அங்கிருந்தவர்களுக்கும் தெரியவில்லை. அவர் மறக்கப்பட்ட இந்திய பிரதமர்.


வாடகை செலுத்தாத 94 வயது முதியவர் ஒருவரை , தனது வீட்டிலிருந்து வெளியேற்ற முடிவு செய்த அந்த வீட்டின் உரிமையாளர் , அந்த முதியவர் பயன் படுத்திய பழைய கட்டில், சில அலுமினிய பாத்திரங்கள், தட்டு குவளைகளை வீட்டிற்கு வெளியே போட்டு விட்டார். வாடகையைத் தர சிறிது கால அவகாசம் தருமாறு எவ்வளவோ கெஞ்சிப் பார்க்கிறார் முதியவர். 

 

வேடிக்கை பார்த்த சிலர் பரிதாபப் பட்டு சிறிது கால அவகாசம் தரச் சொல்ல – வேண்டா வெருப்பாக அந்த முதியவரின் சாமான்களை மீண்டும் அனுமதித்தார் உரிமையாளர். இதை பார்த்துக் கொண்டிருந்த , அவ்வழியே சைக்கிளில் சென்ற பத்திரிக்கையாளர் ஒருவர், அந்த காட்சிகளை படுமெடுத்து , தனது பத்திரிக்கையில் வெளியிட நினைத்து – ” கொடூர வீட்டு உரிமையாளர், பரிதாப நிலையில் முதியவர் ” என்றெல்லாம் தலைப்பு ரெடி செய்து, பத்திரிக்கை ஆசிரியரிடம் சென்று , நடந்தது குறித்து விளக்கமளித்து , படங்களை காட்டினார்.

 

படங்களை பார்த்த ஆசிரியர், அதிர்ந்து போனார். இவர் யாரென்று தெரியுமா ..? என செய்தியாளரை கேட்க – தனக்கு எதுவும் தெரியாது என்றார் செய்தியாளர். இந்தியாவில் இரண்டு முறை இடைக்கால பிரதமராக இருந்த குல்சாரிலால் நந்தா தான் அவர். நேரு இறந்த போதும், சாஸ்திரி இறந்த போதும், இவரைத்தான் பிரதமராக தேர்ந்தெடுத்தார்கள். பொருளாதாரம் படித்த சிறந்த தொழிற்சங்கவாதி என்று சொன்னார்.


HMSS தொழிற்சங்கத்தில் அகில இந்திய தலைவராக இருந்தவர். 1948 ல் இவரது தலைமையில் தான் கொல்கத்தாவில் INTUC திறப்பு விழா கண்டது. பல காலம் மத்திய அமைச்சராக இருந்தவர். அந்த பத்திரிகையின் ஆசிரியர் தலைப்பை மாற்றி “இந்தியாவின் முன்னாள் பிரதமர் குல்சாரிலால் நந்தா, அவல வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்” என்ற தலைப்பில் முன்பக்கத்தில் கட்டுரையை வெளியிட்டார். 

 

பத்திரிக்கையில் செய்தி வந்தது. முன்னாள் இந்திய பிரதமருக்கு இந்த நிலையா என விழித்துக்கொண்ட அப்போதைய பிரதமர் அவருக்கு உதவிட அமைச்சர்களுக்கு உத்தரவிட்டார். அவரது வீட்டின் முன்பு அரசு அதிகாரிகளும், VIP வாகனங்களும் வந்து குவிவதை கண்ட வீட்டு உரிமையாளர் மிரண்டு போனார்.

 

அவர்கள் சொல்லித்தான் தெரிந்தது, வீட்டை விட்டு வெளியே அனுப்ப நினைத்த முதியவர் இந்தியாவின் இருமுறை தற்காலிக பிரதமர் பதவி வகித்த மாபெரும் தலைவர் என்று. 

 

 காந்தியடிகள் ஆரம்பித்த ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு தனது ஆசிரியர் பணியை 21 வயதில் விட்டவர் தான் இந்த குல்சாரி லால் நந்தா. பிறகு சத்தியாகிரகம் உள்ளிட்ட போராட்டங்களில் கலந்துகொண்டு இரண்டு முறை சிறைக்கும் சென்றுள்ளார். 

 

வயதான காலத்தில் அவருக்கு இருந்த ஒரே வருமானமே சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அரசு வழங்கிவந்த 500 ரூபாய் உதவித்தொகை தான். அதையும் முதலில் இவர் வேண்டாமென்று கூறிவிட்டார். தான் இந்த பணத்திற்காக சுதந்திர போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று அவர் முதலில் நிராகரித்தார். பிறகு நண்பர்கள் வற்புறுத்தலின் பேரில் ஒப்புக்கொண்டார். 

 

இவர் இந்திராகாந்தியின் நெருக்கடி நிலையை அவர் எதிர்த்தார். இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதும் வழங்கப்பட்டுள்ளது. 

எப்பேர்ப்பட்ட உயரமான பதவிகளில் இருந்திருந்தாலும் அனைத்தையும் துறந்து எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர் தான் குல்சாரிலால் நந்தா. காமராஜர், கக்கன் போன்ற தூய்மையான எளிமையான அரசியல்வாதிகளை நாம் நினைவில் வைத்திருப்பது போல குல்சாரிலால் நந்தா அவர்களையும் நினைவில் வைத்திருக்க வேண்டும். 

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *