வெளிநாட்டு வாழ்க்கை கவிதை
உனக்கென்னப்பா…
வெளிநாட்டில் நீயோ
அம்புட்டு சம்பாதிக்கிற
மகாராசா மாதிரி
சவுக்கியமான வாழ்க்கை
இந்த வார்த்தைகளை
உள்ளிருந்து சொன்னாரோ
புறமிருந்து சொன்னாரோ
அம்புட்டு ஒன்னும் சுகமில்லை
இந்த வெளிநாட்டு வாழ்க்கையிலே…
பக்கத்து ஊரு பழனியப்பன்
வெளிநாட்டுக்கு போயி
புது வீடு கட்டிட்டான்
புது நிலமும் வாங்கிட்டான்னு
கஞ்சி ஊத்தின காணி நிலத்த
கேட்ட விலைக்கு குடுத்து
என்னையும் தான் அனுப்பி வச்சா
எம்ம பெத்த மகராசி
எம்புள்ளையும் பொலச்சுக்கும்னு
அம்புட்டு ஆசையோட….
அம்மா ஆக்கிவச்ச
சோறையும் குழம்பையும்
நாக்குக்கு ருசிப்படலைன்னு
கோவமா தள்ளிவிட்ட
அதே பய தான் ….
காலைல சாப்பிடாம
காபி குடிச்சு
வேலைக்கு தினமும்
வெறும் வயிரோட
போறேன் கடன் தீர்க்க….
அம்மா பேசும்போது
கஷ்டமே இல்லம்மா
நான் வேலையெல்லாம் செய்யலம்மா
மேற்பார்வை மட்டும்தாம்மா என
ஆறுதலாய் பொய் சொன்னேன்….
இதே பொய்யைத்தான்
அத்தனை பேரும் சொன்னார்கள்
அம்மாக்கள் கொஞ்சமேனும்
ஆறுதலாய் தூங்கிடவே
உதவுகிறது இந்தப்பொய் என்று….
கழனி விற்று அனுப்பிய
தாயும் தான் இப்போதில்லை
சொத்திருந்தும் பணமிருந்தும்
அவள் கடைசி பயணத்தில்
வழியனுப்ப நானில்லை…..
அலைபேசியில் பேசுகின்ற
என்னவளின் தலைமுடியும்
நரைமுடியாய் மாறிப்போச்சு
பிறந்தபோது பார்த்த மகளோ
வயதுக்கும் வந்துபோச்சு….
பணமெல்லாம் இருக்கிறது
சொத்தெல்லாம் இருக்கிறது
வெளிநாட்டில் வயதை
தொலைத்துவிட்ட உண்மையை
வந்திறங்கிய வேளையில்
மனசும் உணர்கிறது….
தகதகன்னு மின்னும்
தங்கம் போல வாழ்க்கைதான்
வெளிநாட்டு வாழ்க்கையின்னு
எண்ணிக்கொண்டு இருப்போர்க்கு
ஓர் செய்தி…..
நகையாகும் முன்னர்தான்
நெருப்பிலே வெந்து தோய்ந்த
தங்கம் போலவே தான்
உடலாலும் உள்ளத்தாலும்
வெந்து தோய்ந்த வாழ்க்கை
வெளிநாட்டு வாழ்க்கை…
ஆனாலும்…
குடும்பத்தின் சிரிப்பிலே
குடும்பத்தின் நிம்மதியிலே
கஷ்டமெல்லாம் கரைந்திடவே
மீண்டும் விமானம் ஏறிடவே
தயாராவான் தலைமகன்!
ஶ்ரீ