RTO அலுவலகத்தில் வாகனம் ஓட்டாமல் ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி?

ஜூலை 01,2021 முதல் அரசு அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப்பள்ளியில் சான்றிதழ் பெற்ற ஒருவர் RTO அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமத்துக்காக விண்ணப்பிக்கும் போது ஓட்டிக்காட்டத் தேவை இல்லை என்ற விதி அமலுக்கு வந்துள்ளது. எப்படி இனிமேல் ஓட்டுநர் உரிமம் பெறுவது?

மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் ‘சாலைகளில் விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் புது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாகவே, திறன்வாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களை உருவாக்கும் முயற்சியாகவே இந்த புதிய நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சிப்பள்ளியில் சான்றிதழ் பெரும் ஒருவர் RTO அலுவகத்தில் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் போது அதிகாரியிடம் ஓட்டி காண்பிக்கத்தேவை இல்லை’ என தெரிவித்துள்ளது.

RTO அதிகாரியின் முன்பாக வாகனத்தை சரியாக ஓட்டிக்காட்டினால் தான் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்ற விதி இருக்கும் போதே பலர் அங்கே செல்லாமல் ஓட்டுநர் உரிமம் வாங்கிவிடுகிறார்கள், சாலையில் அதிக விபத்துக்களை ஏற்படுத்துகிறார்கள் என்ற குற்றசாட்டு எழுகிறது. இனி RTO அதிகாரியின் முன்பாக ஓட்டிக்காட்ட தேவை இல்லை என்ற அறிவிப்பு வெளியானவுடன் பலரும் இதற்கு எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகிறார்கள். இனிமேல் பணம் இருப்பவர்கள் கூட எளிதாக லைசென்ஸ் வாங்கிவிட முடியும் என சொல்லி வருகிறார்கள். உண்மையில், இனி லைசென்ஸ் பெறுவது அவ்வளவு எளிதானதா?

இதற்கான பதிலை அறிந்துகொள்வதற்கு முன்பாக சில விசயங்களை தெரிந்துகொள்வது அவசியம். 

எதற்காக புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது?

உலக அளவில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் தான் சாலை விபத்துகளில் அதிகம் பேர் இறந்து இருக்கிறார்கள். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை என்பது அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக, இளைஞர்கள் சாலை விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு மிக முக்கியகாரணமாக தெரிய வந்திருப்பது, சாலைகளில் வாகனங்களை இயக்கம் பெரும்பாலானோருக்கு ஓட்டுநருக்கு இருக்க வேண்டிய பயிற்சிகள் முறையாக கிடைக்காத காரணத்தினாலும், சாலை விதிகள் பற்றிய அறிவு அவர்களுக்கு இல்லாமையாலும் தான் ஏற்படுகிறது என கருதியது அமைச்சகம். இதற்குக் காரணம், தற்போதைய நடைமுறை தான் என்று கருதிய அமைச்சகம் புதிதாக ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி என்ற விசயத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி அங்கே முறையாக பயிற்சி பெரும் ஒருவர் RTO அதிகாரி முன்பாக வாகனத்தை ஓட்டிக்காட்ட தேவை இல்லை. 

ஓட்டுநர் பயிற்சிப்பள்ளிக்கான தகுதி என்ன?

இப்போது இருக்கும் ஓட்டுநர் பயிற்சி நிலையங்கள் அனைத்துமே ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் அல்ல. இதனை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

> இருசக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கான பயிற்சியை அளிக்கக்கூடிய பள்ளிக்கு குறைந்தது 1 ஏக்கர் சொந்த நிலம் இருக்க வேண்டும். அங்கே, பயிற்சி பெறுவதற்கான சாலைகள், இதர அமைப்புகள், தேவையான கார் உள்ளிட்ட வாகனங்கள், பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வேண்டும்.

> கனரக வாகனங்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சி பள்ளிகளுக்கு 2 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் .

> பயிற்சி அளிப்பவர் குறைந்தது 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் ஓட்டுநர் அனுபவம் உள்ளவராகவும் சாலை விதிகளை நன்கு அறிந்தவராகவும் இருக்க வேண்டும்.

> சாலை மற்றும் போக்குவரத்துறை அமைச்சகம் இதற்கான பாடத்திட்டத்தை வெளியிடும். கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு [LMV] விண்ணப்பிப்போர் 4 வாரங்களில் 29 மணி நேரம் வகுப்புகளில் பங்கேற்று இருக்க வேண்டும். பாடத்திட்டம் என்பது தியரி மற்றும் பிராக்டிகல் என இரண்டு விதத்திலும் இருக்கும். கனரக வாகனங்களுக்கு 6 வாரம் 38 மணி நேரம் வகுப்புகள் நடக்கும்.

> பல வெளிநாடுகளில் இதுபோன்ற ஓட்டுநர் பயிற்சிப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தத்திட்டம் முற்றிலும் சாலை விபத்துக்களை குறைக்கும் நோக்கத்திலேயே கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது அமைச்சகம்.

> இந்த பயிற்சிப்பள்ளிகளுக்கான லைசன்ஸ் 5 ஆண்டுகள் இருக்கும், பிறகு சோதனைக்கு பிறகு நீட்டிக்கப்படும்.

நமது உயிர் நமது அக்கறை

அமைப்புகளை வளைப்பது என்பது நமது ஆட்களுக்கு கை வந்த காரியம். இங்கே சட்டங்கள் இருக்கின்றன. பின்பற்றுவோர் தான் குறைவு. ஏற்கனவே இருந்த நடைமுறை சிக்கல்களை குறைக்கவே அரசு புதிய நடைமுறையை கையில் எடுத்துள்ளது. இங்கே முக்கியமான பங்கு ‘ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கு’ இருக்கிறது. அவர்கள் முறையான பயிற்சிக்கு பிறகு தான் சான்றிதழ் அளிப்போம் என்பதில் உறுதியாக இருந்தால் சிறந்த ஓட்டுனர்கள் கிடைப்பார்கள். சாலையில் பயிற்சியற்ற ஓட்டுநர்களால் இறப்பது அவர்கள் மட்டுமல்ல பிறரும் என்பதை அனைவரும் புரிந்துகொண்டால் யாருக்கும் பிரச்சனை இல்லை. 

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp

எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *