யார் இந்த பழனிவேல் தியாகராஜன்?

ஜிஎஸ்டி கட்டமைப்பையே மாற்றி அமைக்க வேண்டும், கொரோனா மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது மனித தன்மையற்ற செயல் என புள்ளி விவரங்களோடு பொருளாதாரத்தை பிரித்து மேய்வது, இன்னொரு பக்கம் ஜக்கி ஒரு பிசினஸ்மேன்’ கடவுள் பெயரை வைத்து பணம் சம்பாதிக்கும் மனிதர் என கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது, வெறி பிடித்த நாய் குறைப்பதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது என எச் ராஜா பற்றிய கேள்விக்கு பதில் தந்தது, நிறுத்துங்கள் நீங்கள் பிறவியிலேயே பொய்யரா அல்லது உங்களுக்கு பிறவியிலேயே IQ குறைவா என வானதி ஸ்ரீனிவாசனை விமர்சித்தது என தமிழக அரசியல் களத்தின் முழு கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் தமிழகத்தின் தற்போதைய நிதி அமைச்சர் திரு பி.டி.ஆர்.பி.தியாகராஜன்.

நெடிய திமுக பிரபலம் திரு துரைமுருகன் அவர்களுக்குத்தான் நிதியமைச்சர் பொறுப்பு கிடைக்குமென சொல்லப்பட்ட நிலையில் பி.டி.ஆர்.பி.தியாகராஜன் அப்பதவியில் அமர வைக்கப்பட்டபோதே அவர் மீதான கவனம் அதிகரித்தது. யார் இந்த பி.டி.ஆர்.பி.தியாகராஜன்? அரசியலுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? அவருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? என முக்கிய விசயங்களை அலசலாம் வாருங்கள். 

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தான் பழனிவேல் தியாகராஜன். ஜிஎஸ்டி உள்ளிட்ட முக்கியமான விசயங்களில் அவ்வப்போது கருத்துக்களை புள்ளி விவரங்களோடு தெரிவித்து வந்தார். ஆனால் அப்போதெல்லாம் இவர் பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் ஜக்கி வாசுதேவ் அவர்களின் ‘ கோயில் அடிமை நிறுத்து’ என்ற பிரச்சாரத்திற்கு எதிராக கடுமையான கருத்துக்களை முன்வைத்து இருந்தார் பழனிவேல் தியாகராஜன். அதை தொடர்ந்து எச் ராஜா குறித்த விமர்சனம் என தொடர்ந்ததை அடுத்து தமிழக அரசியலில் ஹாட் டாபிக் ஆனார் பழனிவேல் தியாகராஜன்.

பழனிவேல் தியாகராஜன் குடும்பமானது 100 ஆண்டுகால அரசியல் பாரம்பரியம் கொண்டது. சுதந்திரத்திற்கு முன்பிருந்த சென்னை மாகாண சட்டப்பேரவையில் இருந்தே இக்குடும்பத்தின் அரசியல் பாரம்பரியம் துவங்குகிறது. பழனிவேல் தியாகராஜன் அவர்களின் தாத்தா பி.டி.ராஜன் 1920 முதல் 1952 வரை நடைபெற்ற அனைத்து சட்டமன்ற தேர்தலிலும் வென்று சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.இதில் ஒரு ஆண்டு சென்னை மாகாண முதல்வராகவும் இருந்துள்ளார்.1957 இல் அவர் தோல்வி அடைந்த பின்பு அரசியலுக்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டார். 1967 இல் மீண்டும் இந்த குடும்பத்தின் அரசியல் பயணம் துவங்கியது. பழனிவேல் தியாகராஜனின் தந்தை பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் 1967 தேர்தலில் போட்டியிட்டு வென்றார். தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகராகவும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். தி.மு.க-வின் சொத்து பாதுகாப்புக் குழுத் தலைவராக பி.டி.ஆர் பழனிவேல் ராஜனை நியமிக்கும் அளவுக்கு, கருணாநிதி அவரிடம் நம்பிக்கை வைத்திருந்தார். 2006 இல் அறநிலையத்துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு ரயிலில் மதுரைக்கு சென்று கொண்டிருந்த இவர் திடீர் மாரடைப்பால் காலமானார்.

இவரது இறுதி சடங்கிற்கு வந்த போது தான் பழனிவேல் தியாகராஜன் என்பவரைப் பற்றி மதுரை வாசிகளுக்கு தெரிய வந்தது. அதுவரைக்கும் அவருக்கும் தமிழக அரசியலுக்கும் தொடர்பில்லாமல் இருந்தது. இறுதி சடங்கை முடித்த கையோடு அவர் சிங்கப்பூர் சென்றுவிட்டார். அடுத்த 10 ஆண்டுகள் பிடிஆர் குடும்பம் அரசியலில் பங்கேற்கவில்லை.

தந்தையின் சொல்லுக்கு இணங்கி பழனிவேல் தியாகராஜன் பொறியியல் படிப்பை திருச்சி NIT யில் படித்தார். அமெரிக்காவின் State University of New York கல்லூரியில் Operations Research இல் முதுகலை பட்டம் பெற்றார்.தொடர்ந்து Applied computers இல் முனைவர் பட்டம் பெற்றார். இதைத் தொடர்ந்து எம்ஐடியில் உள்ள ஸ்லோன் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்டில் இருந்து எம்பிஏ ஃபைனான்ஸ் பட்டம் பெற்றார், அங்கு நோபல் பரிசு பெற்றவரும் புகழ்பெற்ற இத்தாலிய பொருளாதார நிபுணருமான பிராங்கோ மொடிகிலியானி அவரது ஆசிரியராக இருந்தார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது. எப்படி பழனிவேல் தியாகராஜன் பொருளாதாரத்தை பிரித்து மேய்கிறார் என்பதை நீங்கள் அவரது கல்வி தகுதியில் இருந்தே புரிந்து கொள்ள முடியும். அமெரிக்காவில் யாருக்கும் தன்னை தெரியாது என்பதனால் அங்கே சுதந்திர மனிதனாக இருந்தது தனக்கு பிடித்திருந்ததாக சொல்வார் பழனிவேல் தியாகராஜன்.

இந்த காலகட்டத்தில் மதுரை சுற்றுவட்டாரத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார் கலைஞரின் மகன் அழகிரி. பின்னர் நடந்த பிரச்சனையில் அழகிரியை கட்சியை விட்டே நீக்கினார் கலைஞர். ஆனாலும் மதுரை அழகிரியின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. மதுரையை மீட்டெடுக்க யார் சரியான ஆள் என தேடிய ஸ்டாலினுக்கு கிடைத்தவர் தான் இந்த பழனிவேல் தியாகராஜன் எனும் ஆளுமை. நல்ல அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பம், மெத்த படித்த அறிவாளி போன்றவை அவரை ஸ்டாலின் அவர்களின் குட்புக்கில் இடம்பெற வைத்தது. அதையடுத்து, சிங்கப்பூரில் ஸ்டாண்டர் சாட்டர்டு வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தமிழகம் திரும்பினார். மதுரையில் அரசியல் முக்கிய ஆளுமைகளாக வலம் வந்த தனது தாத்தா, அப்பாவின் செல்வாக்கை மீண்டும் பிடிக்க மதுரை அரசியலை மையமாக வைத்து, தி.மு.க-விற்குள் அடியெடுத்து வைத்தார் பழனிவேல் தியாகராஜன்.

திமுகவின் ஐடி விங் என்றால் பிரசாந்த் கிஷோரின் நிறுவனத்தை தான் பலருக்கும் தெரியும். ஆனால் பிரசாந்த் கிஷோர் நிறுவனம் என்பது தேர்தல் காலத்தில் மட்டுமே செயல்படக்கூடியது. அனைத்து நேரத்திலும் திமுகவிற்காக செயல்படும் ஐடிவிங்கை சிறப்பாக உருவாக்கியவர் இந்த பழனிவேல் தியாகராஜன் தான். 2016 இல் முக அழகிரியின் எதிர் அரசியலை வீழ்த்தி மதுரையில் வெற்றிக்கொடி நாட்டினார். இதனால் இவருக்கான முக்கியத்துவம் அதிகரித்தது. பின்னர் தமிழக அரசியல் பெரும் மாறுதல்களை சந்தித்துக்கொண்டு இருந்தது. இதில் அதிக கவனம் பெறாமல் தான் இருந்தார். 2021 இல் வெற்றி பெற்றபிறகு இவருக்கு நிதி அமைச்சர் எனும் பொறுப்பு கொடுக்கப்பட்ட போது தான் யார் இந்த பழனிவேல் தியாகராஜன் புதிய பெயராக இருக்கிறதே என ஆராய துவங்கினார்கள். அதற்கடுத்து இவர் பேசிய பேச்சுக்கள், தெரிவித்த கருத்துக்கள் அனைவரும் அறிந்ததே.

இவரது மனைவியின் பெயர் மார்கரெட் தியாகராஜன். இவருக்கு பழனிதேவன் ராஜன் மற்றும் வேல் தியாகராஜன் ஆகிய இரு மகன்களும் உள்ளனர். 






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *