இஸ்ரேல் – பாலஸ்தீனம் மோதலுக்கு இதுதான் காரணம்
மத்தியதரைக் கடலுக்கு கிழக்கே அமைந்துள்ள உலகின் ஒரே யூத நாடு இஸ்ரேல் தான். இங்கே வாழ்கிறவர்கள் யூதர்கள். இஸ்ரேல் கட்டுப்படுத்தி இருக்கும் பகுதியில் வாழ்ந்துகொண்டிருக்கும் அரபு மக்கள் தான் பாலத்தீனியர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் இஸ்ரேலின் சில பகுதிகளை பிரித்து பாலஸ்தீனம் என்ற தங்களுக்கான நாட்டை உருவாக்க போராடிவருகிறார்கள். இதற்கு இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதான் இஸ்ரேல் பாலஸ்தீனம் இரண்டுக்கும் இடையேயான மோதலுக்கு காரணம்.
ஆரம்பத்தில் பாலஸ்தீனம் என்ற பகுதியை ஓட்டோமான் என்பவர் ஆண்டு வந்தார். முதலாம் உலகப்போரில் ஓட்டோமான் வீழ்ந்த பிறகு அந்தப்பகுதி பிரிட்டனின் கட்டுப்பாட்டில் வந்தது. குறிப்பிட்ட அந்தப்பகுதியில் யூதர்களும் அரபு முஸ்லீம்களும் குடிபுகுந்தனர். யூதர்களுக்கு தனி நிலப்பகுதி ஒன்றை ஒதுக்கி அவர்களுக்கு தனி நாடு ஒன்றினை உருவாக்க உலக நாடுகள் பிரிட்டனை அறிவுறுத்தின. ஆனால் அந்த நிலப்பகுதியில் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த அரபு மக்கள் அந்த நிலப்பகுதியை தங்களுக்கு உரியதாக கருதினார்கள். இதில் தான் இரண்டு இன குழுக்களுக்கும் இடையே மோதல் ஆரம்பித்தது.
யூதர்களை பொறுத்தவரைக்கும் இஸ்ரேல் அவர்களது பூர்வீகம். ஆனால் பாலஸ்தீனிய அரபு மக்களும் குறிப்பிட்ட பகுதிக்கு சொந்தம் கொண்டாடியதால் இஸ்ரேல் என்ற யூதர்களுக்கான நாடு உருவாவதை அவர்கள் எதிர்த்தனர். 1920 ஆம் ஆண்டு வாக்கில் தாயகம் வேண்டி உலகின் பல பகுதிகளில் இருந்த யூதர்களும் இங்கே வர ஆரம்பித்தனர். குறிப்பாக இவர்கள், ஐரோப்பாவில் ஒடுக்குமுறைகளில் இருந்து தப்பியவர்கள், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியில் நடந்த ஹாலோகாஸ்ட் படுகொலைகளில் இருந்தும் தப்பியவர்கள்.
யூத மக்களுக்கும் அரபு மக்களுக்கும் இடையேயான மோதல்கள் தொடர்ச்சியாக அதிகரித்தவண்ணம் இருந்தது. 1947 ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தை இரண்டாக பிரித்து யூதர்களுக்கு ஒரு பகுதியும் அரபு மக்களுக்கு ஒரு பகுதியும் கொடுக்கலாம் என்ற திட்டத்திற்கு ஐநா ஒப்புதல் அளித்தது. ஜெருசலேம் சர்வதேச நகரமானது. யூதர்கள் இதனை அந்த சமயத்தில் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அரபு மக்கள் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டபடியால் இன்றளவும் இரண்டு நாடு என்ற திட்டம் கிடப்பில் இருக்கிறது.
முயன்று பார்த்த பிரிட்டன் இது தனக்கு தலைவலியான விசயமாக இருப்பதால் அங்கிருந்து 1948 இல் வெளியேறியது. அவர்கள் வெளியேறிய உடனே இஸ்ரேல் என்ற தனி நாடு உருவானதாக யூத தலைவர்கள் அறிவித்தனர். பெரும் பதற்றம் நாடு முழுவதும் உண்டானது. பாலஸ்தீனத்தில் உள்ள அரபு மக்கள் வெகுண்டு எதிர்த்தார்கள். சுற்றிலும் உள்ள பல நாடுகளும் போர் தொடுத்து வர ஆரம்பித்தன. அப்போது நடைபெற்ற பாதிப்புகள் பேரழிவு என அவர்களால் அழைக்கப்படுகிறது. இந்த சம்பவங்கள் நடைபெற்ற ஓராண்டுக்கு பின்னர் பெரும் பகுதியை இஸ்ரேல் படைகள் பிடித்திருந்தன. ஜோர்டான் மேற்கு கரை என்னும் இடத்தை ஆக்கிரமித்தது. எகிப்து காசாவை ஆக்கிரமித்தது.
அடுத்த பிரச்சனை `1967 இல் நடந்தது. அதில் கிழக்கு ஜெருசலேம், மேற்கு கரையையும், சிரிய கோலன் ஹைட்சின் பெரும்பான்மை பகுதியையும், காசா மற்றும் எகிப்திய சினாய் தீபகற்பத்தையும் இஸ்ரேல் ஆக்கிரமித்தது. பெரும்பாலான பாலத்தீனிய அகதிகள், அவர்களின் சந்ததியினர் காசா மற்றும் மேற்கு கரையிலும், அண்டை நாடுகளான ஜோர்டான், சிரியா மற்றும் லெபனானிலும் வசிக்கின்றனர். இஸ்ரேல் நாடு, ஜெருசலேம் தான் தனது தலைநகர் என்று கூறுகிறது. ஆனால் பாலஸ்தீன மக்களோ எதிர்காலத்தில் தங்களுக்காக அமைக்கப்படும் நாட்டின் தலைநகராக கிழக்கு ஜெருசலேம் இருக்கும் என கூறுகிறார்கள். ஜெருசலேம் இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமானது என்பதை அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் மட்டும் அங்கீகரித்துள்ளது.
அடிக்கடி போர் மேகம் சூழும் காஸா பகுதி ஹமாஸ் என்ற இயக்கத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இவர்கள் பலமுறை இஸ்ரேலுடன் போரில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றாலும் கூட இருவருக்கும் இடையே தீர்க்கவேண்டிய பிரச்சனைகள் பல இருக்கின்றன. ஏற்கனவே பாலஸ்தீனிய மக்களிடம் இருந்து கைப்பற்றப்பகுதிகளில் நிறுவப்பட்ட யூத மக்களின் குடியிருப்புகளை வேண்டும், அகற்றப்பட்ட அரபு மக்களை மீண்டும் குடியமர்த்த வேண்டும், பாலஸ்தீனம் என்ற நகரம் உருவாக்கப்பட வேண்டும் என பல விசயங்கள் இதில் இருக்கின்றன. உலக நாடுகளோ ஐநாவோ ஒரு திட்டத்தோடு இவர்களின் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முயன்றால் இரு தரப்பும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர மறுத்து வருகின்றன. முன்னால் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டுவந்த திட்டத்தை இஸ்ரேல் ஆதரித்தது ஆனால் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்த திட்டம் இருப்பதால் பாலஸ்தீனியர்கள் எதிர்ப்பு தெரிவித்துவிட்டார்கள்.
இஸ்ரேல் பாலஸ்தீனியர்களுக்கு இடையிலான மோதல் எப்போது முடியுமென யாராலும் கூற முடியாது. அதுவரைக்கும் அங்கே மோதல்களும் வன்முறைகளும் நடந்துகொண்டே இருக்கும். அங்கிருக்கும் அப்பாவி மக்களின் அமைதிக்கான தேடல் நீண்டு கொண்டே இருக்கும்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!