கொரோனா பாசிட்டிவ் வந்த ஒருவர் அரசால் எப்படி கையாளப்படுகிறார்?

கொரோனா தாக்குதலுக்கான அறிகுறிகள் தெளிவாக தெரிந்த பின்பும் கூட மருத்துவமனைக்கு பலர் செல்லத் தயங்குகிறார்கள். அவர்கள் காணும் சில காட்சிகள் அவர்களை மருத்துவமனைக்கு செல்ல அச்சமூட்டுகின்றன. உண்மையிலேயே ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்தால் அவர் அதற்குப்பிறகு அரசால் எப்படி கையாளப்படுகிறார் என்பதை இங்கே பார்க்கலாம். நேரடி அனுபவம் பெற்றவரின் கருத்தின்படி எழுதப்பட்ட கட்டுரை

கொரோனா பாசிட்டிவ் வந்தால்?

 

கொரோனா அறிகுறி ஒருவருக்கு ஏற்பட்டால் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அங்கே ஸ்வாப் டெஸ்ட் என சொல்லுவார்கள், அதாவது மூக்கிற்குள் விட்டு மாதிரியை சேகரித்து சோதனைக்கு அனுப்பும் முறைதான் அது. அதற்கு நீங்கள் ஆதார் உள்ளிட்ட எந்த அடையாள அட்டையையும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சரியான முகவரி மற்றும் மொபைல் எண்ணை கொடுத்தால் போதுமானது. மாதிரியை கொடுத்த பிறகு நீங்கள் உங்கள் வீட்டிற்கு செல்லலாம். மாதிரி சேகரிக்கப்பட்டவுடன் நீங்கள் கொடுத்துள்ள மொபைல் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும். அதில் நீங்கள் மாதிரியை கொடுத்த விவரமும் SRF ID என்ற எண்ணும் அதிலே இருக்கும். இந்த எண்ணை வைத்துக்கொண்டு அரசு மருத்துவமனையின் இணையதளத்தில் சென்று டெஸ்ட் க்கான முடிவை நீங்களாகவே பார்த்துக்கொள்ளலாம்.

டெஸ்ட்க்கு வருகிறவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கின்றபட்சத்தில் அன்று இரவு அல்லது அடுத்தநாள் அதிகாலையிலேயே முடிவு தெரிந்துவிடும். இல்லையேல் சில சமயங்களில் நீங்கள் டெஸ்ட் கொடுத்த நாளுக்கு அடுத்த நாள் மதியம் கூட முடிவு தெரிய நேரம் ஆகலாம். உங்களுக்கு நெகடிவ் என வந்துவிட்டால் யாரும் உங்களுக்கு தகவல் தெரிவிக்க மாட்டார்கள். நீங்களாகவே இணையதளத்திற்கு சென்று பார்த்துக்கொள்ளலாம். பாசிட்டிவ் என வந்துவிட்டால் உங்களைப்பற்றிய தகவல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், உங்களது ஊர் இருக்கும் ஊராட்சியில் பணிபுரியும் ஹெல்த் ஒர்க்கர் ஆகியோருக்கு அனுப்பப்படும்.

அவர்கள் உங்களை அழைத்து எந்த மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், அடுத்ததாக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுரையை வழங்குவார்கள். போன வருடத்தில் ஒருவருக்கு பாசிட்டிவ் என வந்துவிட்டால் அவரது வீட்டுக்கே ஆம்புலன்ஸ் அனுப்பி மருத்துவமனைக்கு அழைத்து போய்விடுவார்கள். ஆனால் இப்போது அப்படியல்ல, நீங்களே மருத்துவமனைக்கு சென்று சேரலாம்.  

வீட்டிலேயே சிகிச்சை பெறலாமா?

 

கொரோனா டெஸ்ட் எடுத்து உங்களுக்கு பாசிட்டிவ் என வந்துவிட்டால் அந்தத்தகவல் அரசுக்கு சென்றுவிடும். ஆகவே அவர்கள் உங்களை பின்தொடர ஆரம்பித்துவிடுவார்கள். தனியார் மருத்துவமனைகளில் சிடி ஸ்கேன் என்ற ஒன்றை எடுக்கிறார்கள் என சொல்கிறார்கள். அதிலேயும் கொரோனா அறிகுறியை கண்டறிய முடியுமாம். அப்படி கண்டறிய முடிந்தால் உங்களுக்கு லேசான பாதிப்பு மட்டும் உறுதியானால் நீங்கள் வீட்டிலேயே சிகிச்சை பெறலாம்.

அதேபோல, மூக்கில் ஸ்வாப் டெஸ்ட் எடுத்து பாசிட்டிவ் வந்து அந்த தகவல் அரசுக்கு சென்றாலும் உங்களால் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற முடியும். அதற்கு சில வழிமுறைகள் உண்டு. உங்கள் பகுதியில் இருக்கும் சுகாதாரப் பணியாளர் அவர்களிடம் உங்கள் வீட்டில் தனியே இருந்து சிகிச்சை பெறுவதற்கான வசதிகள் இருக்கின்றன என்ற சான்றிதழை பெற்றுக்கொண்டு நீங்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். நீங்கள் மருத்துவமனைக்கு சென்ற பிறகு அங்கே உங்களுக்கு ஆரம்பகட்ட உடல் சோதனைகள் நடக்கும். நீங்கள் வீட்டிலேயே சிகிச்சை பெறும் அளவுக்கு உடல் தகுதியை கொண்டிருந்தால் மருத்துவர் ஒரு சான்றிதழை கொடுத்து உங்களை வீட்டில் இருந்துகொண்டு சிகிச்சை பெற அனுமதிப்பார்கள்.

அதோடு உங்களை அரசு விட்டுவிடுவது இல்லை. ஒவ்வொரு நாளும் ஆட்சியர் அலுவலகம், அருகே சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையின் மனநல மருத்துவர்கள் என ஒவ்வொருவரும் உங்களை தொடர்பு கொண்டு விசாரிப்பார்கள். ஆலோசனை வழங்குவார்கள்.

 

மருத்துவனையில் சேர்ந்தால் என்ன நடக்கும்?

உங்களுக்கு தெரியுமா? 

வயதானவர்கள் கொரோனா சிகிச்சைக்கு சேர்ந்தால் அவர்களுக்கு உதவியாக ஒருவரும் கூடவே இருக்கலாம். ஆனால் பாதிக்கப்பட்டவர் குணமாகி வெளியே வரும்போது தான் உதவிக்கு இருப்போரும் வெளியே வர வேண்டும். 

நீங்கள் நோய் தொற்று ஏற்பட்டு இருப்பவர்களுக்கு உணவு, தேவையான பொருள்கள் என அனைத்தையும் தினசரி வாங்கி கொடுக்கலாம்.

நீங்கள் மருத்துவமனையில் அட்மிசன் போடும்போதே உங்களுக்கு சில உடல் சோதனைகள் நடைபெறும். உங்களுக்கு ஸ்கேன் எடுப்பார்கள், ரத்த மாதிரி எடுப்பார்கள், ஆக்சிஜன் எவ்வளவு இருக்கிறது, ரத்த அழுத்தம் எப்படி இருக்கிறது என பார்ப்பார்கள். நீங்கள் ஆபத்தான கட்டத்தில் இல்லை என்று தெரிந்தால் முக்கிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மாட்டீர்கள். வேறொரு இடத்தில் உங்களைப்போன்ற ஆபத்து குறைவாக உள்ளவர்கள் வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு, மாத்திரை உள்ளிட்டவை கொடுக்கப்பட்டு மருத்துவர்கள் தினமும் சோதனை செய்வார்கள்.

உங்களுக்கு உடல்நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு ஆக்சிஜன் அளவு 95 அல்லது அதற்கு மேல் இருந்தால் சுமார் 5 நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கே தனிமையை கடைபிடித்து சிகிச்சை பெற அறிவுறுத்துவார்கள்.

இந்த 5 நாட்களில் உங்களுக்கு உடல்நலக்குறைவு, ஆக்சிஜன் குறைவு பிரச்சனை ஏற்பட்டால் நீங்கள் மீண்டும் முதன்மை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கே மேல் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.உங்களுக்கு ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டால் ஆக்சிஜன் வழங்குவார்கள். நிலைமை மோசமானால் ஐசியுவில் அனுமதிக்கப்படுவீர்கள்.

உங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டால் உங்களுக்கு மீண்டும் கொரோனா ஸ்வாப் டெஸ்ட், ஸ்கேன் உள்ளிட்டவற்றை மீண்டும் எடுப்பார்கள். அதோடு உங்களுக்கு 5 ஊசியை ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக போடுவார்கள். இதன் மூலமாக உங்களுக்கு நல்ல எதிர்ப்பு சக்தி உண்டாகும். கொரோனா டெஸ்டில் நெகடிவ் என வந்து, ஸ்கேனில் பாதிப்பு இல்லை என வந்தால் உங்களை வீட்டிற்கு செல்ல அனுமதிப்பார்கள்.

மருத்துவமனைக்கு சென்றால் பிழைக்க முடியாதா?

மருத்துவமனைக்கு போனால் எதையாவது போட்டு நம்மை கொன்றுவிடுவார்கள் என வாய்க்கு வந்ததை சிலர் பேசி மக்களை அச்சமூட்டுவார்கள். மருத்துவமனைக்கு சென்றுவந்தவர்களிடம் அந்த அனுபவம் குறித்து கேட்டபோது, மருத்துவமனையில் தினமும் சிலர் இறக்கிறார்கள் தான். ஆனால் அவர்களில் பலர் வயதானவர்கள், மிகவும் தாமதமாக நோய் தொற்று அதிகமான பிறகு மருத்துவமனைக்கு வந்தவர்கள் என்கிறார்கள். மற்றபடி சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறுகிறார்கள்.

சாதாரண அறிகுறிகள் ஏற்பட்டாலே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. மூச்சுப்பிரச்சனை, அதிக இருமல், காய்ச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டால் கொரோனா டெஸ்ட் செய்வதே சிறந்தது.

இந்தப்பதிவு உங்களுக்கு ஓர் அறிமுகத்தை தந்திருக்கும் என நம்புகிறேன். ஒருவேளை இந்த நடைமுறைகள் சில மருத்துவமனைகளில் மாறுபடலாம். ஆனால் பெருவாரியாக ஒரே முறைதான் கடைபிடிக்கப்படும்.

இதனை பிறருக்கும் பகிருங்கள் . அவர்களுக்கும் ஓர் அனுபவமாக இருக்கட்டுமே.

 





எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *