திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் இதை செய்யக்கூடாது
1. எதிர்க்கட்சிகளை அறவே அழிக்க வேண்டும் என எண்ணுதல் கூடாது
2. ஊழலை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது
தேர்தலுக்கு முந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுக தான் வெல்லும் என சொல்லியிருக்கின்றன. அப்படி என்றால் திமுகவின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தான் அடுத்த முதலமைச்சராக பொறுப்பேற்பார். தாங்கள் ஆட்சி அமைத்தால் நிறைவேற்றுவதாக சுமார் 500 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை ஏற்கனவே வழங்கியிருக்கிறது திமுக. அப்படி இருக்கும் பட்சத்தில் திமுக ஒருவேளை ஆட்சி அமைத்தால் ‘செய்யக்கூடாத’ ஒரு விசயத்தை சுட்டிக்காட்ட நான் ஆசைப்படுகிறேன்.
1. எதிர்க்கட்சிகளை அறவே அழிக்க வேண்டும் என எண்ணுதல் கூடாது
2. ஊழலை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது
எதிர்க்கட்சிகளை அறவே அழிக்க வேண்டும் என எண்ணுதல் கூடாது
பெரும்பான்மையான தமிழக மக்களின் எண்ணமாக இருப்பது ‘பாரதிய ஜனதா கட்சி’ போன்ற மதவாத கட்சி தமிழகத்திற்குள் வலுவாக கால்பதித்துவிடக்கூடாது என்பது தான். ஆனால் மத்தியில் ஆட்சி செய்கின்ற அந்தக்கட்சி நினைத்தால் எந்த இடத்தில் வேண்டுமானாலும் கால்பதிக்க அதீத முயற்சிகளை மேற்கொள்ள முடியும். காரணம், மாற்றுக்கொள்கையில் நம்பிக்கை உடையவர்கள் எங்கும் இருக்கலாம். தமிழகத்திலும் கூட இருக்கலாம், இருக்கிறார்கள். அவர்கள் அந்த வழிமுறையை பயன்படுத்தி தங்களுக்கான இடத்தை பிடிக்க முயற்சி செய்தால் அதனை முழுமையாக வரவேற்கலாம். ஆனால் அவர்களின் கடந்த கால செயல்பாடுகள் அப்படிப்பட்டதாக இல்லை.
ஊழலை வெறுக்கிற ஒரு கட்சியாகவே பாஜக தன்னை முன்னிலைப்படுத்துகிறது. அந்தக்கட்சியின் மீதும் இதுவரைக்கும் கூட வெளிப்படையாக எந்த ஊழல் குற்றச்சாட்டும் எழவில்லை. ஆனால் அவர்கள் தங்களுக்கு தேவைப்பட்டவர்கள் ஊழல் செய்திருந்தால் அது தனக்கு தெரிந்திருந்தால் அதனை பயன்படுத்தி அவர்களை தண்டிப்பதற்கு பதிலாக குற்றமிழைத்தவர்களை தங்களுக்கு ஏதுவாக செயல்பட வைப்பதற்கு கயிறு போலவே குற்றசாட்டுகளை பயன்படுத்துகிறார்கள். அதுதான் பிரச்சனையாக இருக்கிறது. அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்க பாமக, எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக ஆகியவை ஆளுநரிடம் கொடுத்த ஊழல் பட்டியல்கள் மவுன விரதத்தில் இருப்பதே இதற்கு பெரும் சான்று.
அடுத்ததாக திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுகவில் ஊழல் செய்தவர்கள் மீது கடும் நடவெடிக்கையை மேற்கொள்ளும் எனத் தெரிகிறது. நிச்சயமாக அது தேவை தான். ஆனால் திமுக ஒரு விசயத்தை மனதிலே நிலை நிறுத்திக்கொண்டு அதிமுகவை அணுக வேண்டும். பாஜகவின் முழக்கமே ‘கழகங்கள் இல்லாத தமிழகம்’ என்பது தான். இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகம் சிறந்து விளங்குவதற்குக் காரணம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த திராவிட கட்சிகள் தான். ஆனால் திராவிட கட்சிகள் புனிதவான்கள் என்று நாம் சொல்லவில்லை. அவர்கள் ஊழல் செய்திருக்கிறார்கள், செய்திட அனுமதிக்கிறார்கள். ஆனால் மத்தியில் ஆட்சி செய்கிற பாஜக அரசு தயவு தாட்சண்யமின்றி ஊழல் எவர் செய்தாலும் தண்டிப்போம் என்று செயல்பட்டிருந்தால் நாமும் அதனுடைய முயற்சியை பாராட்டியிருப்போம்.
ஆனால் பாஜகவின் கொள்கை முழக்கமோ ‘கழகங்கள் இல்லாத தமிழகம்’. ஆகவே இந்த சட்டப்பேரவை தேர்தலில் யார் தோற்றாலும் அவர்களை காணாமல் போகச்செய்திட பாஜக ஆளும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் அல்லது அதுவே அனைத்து முயற்சிகளையும் செய்யும். இது என்னுடைய அனுமானம். அதிமுக வென்றால் அதோடு சேர்ந்துகொண்டு பாஜக திமுகவை அழித்தொழிக்கும் வேலையில் ஈடுபடும். திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி ஊழலுக்கு எதிராக செயற்படுவதாக கூறிக்கொண்டு அதிமுகவை அழித்தொழிக்கும் வேலையில் ஈடுபடும்.
ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்தால் ஊழலுக்கு எதிராக நடவெடிக்கையை மேற்கொள்ளுங்கள். ஆனால் எந்த சூழ்நிலையிலும் அதிமுகவை அழித்தொழிக்கும் வேலைக்கு அரசு எந்திரத்தை பயன்படுத்தாதீர்கள். முடிந்த அளவு எதிர்க்கட்சி சிதைவுறாமல் இருப்பதற்கு உங்களால் ஆன மறைமுக முயற்சிகளைக்கூட மேற்கொள்ளுங்கள், தவறில்லை. காரணம், தமிழகம் இந்த அளவிற்கு முன்னேறி இருப்பதற்கு காரணம் ‘கழகங்கள்’ தான். அப்படி இருக்கும் போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தில் இருக்க வேண்டியவையும் அவையே. ஆகவே அந்த எண்ணவோட்டத்தில் ஆட்சியில் அமரபோகிறவர்கள் செயல்பட வேண்டும். பாஜகவிற்கு ஒரே ஒரு அறிவுரை தான். நீங்கள் உங்கள் கொள்கையை மட்டுமே பின்பற்றி, கட்சிகளை சிதைத்தல், அரசுகளை கவிழ்த்தல், மதவாதத்தை திணித்தல் போன்ற வேலைகளில் ஈடுபடாமல் இருந்தால் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் எந்தவொரு மூலையில் உள்ளவர்களும் உங்களை கவனிப்பார்கள், விரும்புவார்கள்.
ஊழலை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது
இந்தத் தலைமுறை உன்னிப்பாக அரசியலை கவனித்து வருகிறது. போன தலைமுறை போல எது செய்தாலும் திமுக அல்லது அதிமுகவிற்கு வாக்களிக்கும் தலைமுறை அல்ல இந்தத்தலைமுறை. தங்களுக்கு ஒவ்வாத செயல்களை திமுக அதிமுக ஆகியவை செய்தால் அவற்றை தூக்கி வீசிவிடும் தலைமுறை இது. அதனுடைய வெளிப்பாடு தான் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட புதிய கட்சிகளுக்கான ஆதரவு என்பது.
திமுகவின் பலவீனமே ‘ஊழல்’ என்பது தான். கலைஞர் கருணாநிதி அவர்கள் இறக்கும் தருவாயில் ஒரு வீட்டை மட்டுமே கொண்டிருந்தார். ஆனால் அவரது கட்சிக்காரர்களும் மற்ற அமைச்சர்களும் அதே போன்று இருக்கிறார்களா என கேட்டால் பதில் இல்லை. தலைவர் நல்லவராக இருந்து தொண்டர்கள் தவறு செய்வதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதும் தவறுதானே.
ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்தால் அது அவர்களுக்கு மக்கள் கொடுக்கும் இறுதி வாய்ப்பென நினைத்து செயல்பட வேண்டும். ஸ்டாலின் அவர்கள் அதனை செய்தால் தான் ஒரு தலைவராக மக்கள் மனதில் நிலை கொள்ள முடியும். ஊழல் என்பது மக்கள் வெறுக்கும் விசயமாக மாறிவிட்டது. ஆகவே அதனை உணர்ந்து திமுக செயல்பட வேண்டும்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!