ஒரு சமூகத்தையே உயர்த்திய மில்லியனர் : ஹாரிஸ் ரோசன் | Harris Rosen

குறிப்பிட்ட அந்த பகுதியில் வசிப்பவர்கள் கல்வி அறிவு அற்றவர்களாகவும் போதைப் பொருள்களை விற்பவர்களாகவும் இருந்தனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு அங்கே குற்றங்கள் குறைந்திருந்தன. அங்கே பலர் பட்டங்களை பெற்றனர். நல்ல வேலைக்கு சென்றனர். வியத்தகு அரிய மாற்றத்தை செய்தவர் ஹாரிஸ் ரோசன்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருக்கிறது தாஞ்செலோ பார்க் [Tangelo Park]. தாஞ்செலோ பார்க் என்பது குறைந்த அளவு மக்கள்தொகை கொண்ட பகுதி. 1950 வாக்கில் ஆரஞ்சு பழம் பயிரிட அந்த இடம் பயன்படுத்தப்பட்டது. அதற்காக சிலர் அந்த பகுதியில் குடியேற பின்னாட்களில் அங்கேயே மக்கள் வாசிக்கத்துவங்கி விட்டார்கள். சுற்றுப்புறத்தில் உள்ள பகுதிகள் அனைத்தும் நல்ல நிலையில் இருக்க இந்த பகுதியோ போதைப்பொருள்கள், குற்றங்கள் நிறைந்த பகுதியாகவே இருந்து வந்தது. இந்தப்பகுதியை மேம்படுத்த பலர் முயன்றும் கூட அதில் பலன் கிட்டவில்லை. ஆனால் 1993 ஆம் ஆண்டு முதல் அந்தப்பகுதியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படத்துவங்கின. அதற்கு காரணம், ஆட்சியாளர்களோ கண்டிப்பான அதிகாரிகளோ இல்லை, ஹாரிஸ் ரோசன் எனும் ஹோட்டல் அதிபர் தான் அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தினார்.

தற்போது 81 வயதாகும் ஹாரிஸ் ரோசன் Rosen Hotels & Resorts என்ற நிறுவனத்தை 1974 இல் துவங்கி தற்போது பல ஹோட்டல்கள் ரிசார்ட்கள் என அந்தத்துறையில் கொடிகட்டிப்பறக்கிறார். இந்த தொழிலுக்கு வருவதற்கு முன்பு மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் தான் ரோஷன். ஆகையினால் அவருக்கு ஏழை மக்களின் பிரச்சனைகளை புரிந்துகொள்ளும் பக்குவம் இருந்தது.தன்னுடைய தொழிலில் நல்ல வளர்ச்சி கிடைத்தபோது அதில் சிறிய பகுதியை மக்களுக்கு உதவிட முன்வந்தார். அப்போதுதான் அவருடைய பார்வையில் தாஞ்செலோ பார்க் தென்பட்டது. அந்தப்பகுதியில் இருக்கும் சிறுவர்கள் பள்ளிக்கு போவதில்லை. வேலைக்கு செல்லவேண்டிய இளைஞர்களோ போதைப்பொருள், திருட்டு உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டுவந்தனர். அரசு எத்தகைய மீட்பு நடவெடிக்கைகளை மேற்கொண்டும் அது பலன் அளிக்கவில்லை. ஆகவே அந்தப்பகுதி அப்படியே இருந்தது.

இந்த சூழலில் தான் குறிப்பிட்ட அந்தப்பகுதியில் மாற்றத்தை ஏற்படுத்த முன்வந்தார் ஹாரிஸ் ரோஷன். மற்றவர்கள் போல அங்கே தவறு செய்பவர்களுக்கு பொருள் உதவியோ தண்டனையோ என பழைய பார்முலாக்களை பயன்படுத்தவில்லை. மாறாக, அங்கிருக்கும் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரைக்கும் அனைவரும் கல்வி கற்பதற்கான சூழலை ஏற்படுத்தி தந்தார். அங்கிருக்கும் பள்ளியில் இலவச கல்வி அளிப்பதோடு மட்டுமல்லாமல் அங்கே படித்து பின்னர் வேறு கல்லூரிகளுக்கு மேற்படிப்பு படிக்கச்செல்லும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம், இருப்பிட கட்டணம், உணவுக்கட்டணம் என அனைத்தையுமே அவரது அறக்கட்டளை மூலமாக வழங்கி வந்தார். இதனால் அங்கே உடனடி மாற்றம் ஏற்படவில்லை. ஆனால் மாற்றம் மெல்ல மெல்ல நடைபெற ஆரம்பித்தது. 

இவரது திட்டம் எப்படி வேலை செய்தது என்றால் ‘இவர்கள் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்த 25 ஆண்டுகளுக்கு பிறகு அங்கிருக்கும் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் முந்தைய காலகட்டங்களை விட 70% குறைந்திருந்தன. குறிப்பிட்ட அந்தப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பல கல்லூரிகளில் பட்டங்களை பெற்றார்கள். பெரும்பாலானவர்கள் நல்ல வேலைக்கும் செல்ல ஆரம்பித்து இருந்தார்கள்.

ஆமாம், 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சமூகத்தை திருத்த எடுத்துக்கொண்டது நீண்ட நெடிய கால அளவு கொண்ட வேலையாக இருந்திருக்கலாம். ஆனால் நன்றாக கவனித்துப்பார்த்தால் அதன் வீரியம் புரியும். இதுவரைக்கும் ஹாரிஸன் பல மில்லியன் டாலர்களை மாணவர்களின் கல்விக்காக செலவழித்து இருக்கிறார். அவர் நினைத்திருந்தால் மற்றவர்கள் போல ஆண்டுக்கு ஒருமுறை அந்தப்பகுதியில் இருப்போருக்கு பண உதவியோ அல்லது பொருள் உதவியோ செய்திருக்கலாம். ஆனால் அப்படி செய்திருந்தால் என்ன நடந்திருக்கும், மீண்டும் அடுத்த தலைமுறை உதவிக்காக நின்றிருக்கும்.

ஆனால் அவர் நீடித்த மாற்றத்தை நோக்கி தனது பணத்தை செலவழிக்க முன்வந்தார். ஆகையினால் சிறப்பான மாற்றம் அங்கே நடந்துவருகிறது. ஒரு சமூகத்தை திருத்தி நல்வழிப்படுத்த வேண்டுமெனில் அந்த சமூகத்திற்கு கல்வியை கொடுக்க வேண்டும். இந்தியாவில் இதனை போதித்தவர் அம்பேத்கார். அமெரிக்காவில் ஹாரிஸ் ரோஷன் எனலாம்.

உதவி செய்திட நினைப்பவர்கள் இதனை செய்திடலாம்.






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *