சர்வதேச மகளிர் தினம் – ஏன் மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகிறது?
சர்வதேச மகளிர் தினம் (International Women’s Day) ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 08 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கவும் அனைத்து துறைகளிலும் அவர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் அவர்களை கொண்டாடவும் வலியுறுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரைக்கும் பெண்கள் அதிக அளவில் மேற்படிப்பு முடித்தவர்களாக இருந்தாலும் கூட திருமணத்திற்கு பிறகு குழந்தைகளை கவனித்துக்கொள்ள கணவனோ மனைவியோ வீட்டில் இருந்தாக வேண்டும் என்ற சூழல் ஏற்படும்போது அந்த பொறுப்பை பெரும்பாலும் பெண்களே ஏற்றுக்கொள்கிறார்கள். சில குடும்பங்களில் கணவனும் மனைவியும் கூட வேலைக்கு செல்வார்கள். சில குடும்பங்களில் பெண்கள் வேலைக்கு செல்வது நாகரிகம் இல்லை என கருதி வேலைக்கு அனுப்பாமல் இருக்கும் சூழலும் நிலவுகிறது.
ஆண் பெண் என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் ஒரு விசயத்தை நாம் கவனிக்க வேண்டும். இந்த சமூகத்தில் பொருள் யார் ஈட்டுகிறாரோ அவருக்குத் தான் முடிவெடுப்பதில் அதிக அதிகாரம் இருக்கும். வேலைக்கு செல்லாத பெண்கள் குடும்பங்களில் அதிகாரம் குறைந்தவர்களாக இருப்பதற்கு காரணம் அவர்கள் பொருள் ஈட்டுகிற நிலையில் இல்லை என்பதனால் தான் என்பதை நம்மால் மறுக்க முடியாது.
வீட்டு வேலை பார்ப்பதென்பது ஒரு வேலையாகவே பல ஆண்களால் அங்கீகரிக்கப்படாத சூழல் நிலவுகிறது. இதனால் பெண்கள் பல காலமாக அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். வரலாற்றின் பக்கங்களை நாம் புரட்டிப்பார்த்தால் பெண்கள் வாக்குரிமை அளிக்கும் உரிமை அற்றவர்களாகவும் கல்வி பயிலும் உரிமை அற்றவர்களாகவும் அடக்கி ஒடுக்கப்பட்டார்கள்.
சிறுக சிறுக ஆங்காங்கே ஏற்பட்ட புரட்சிகளும் போராட்டங்களும் தான் பெண்கள் ஓரளவேனும் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக அங்கீகாரம் பெற்று இருக்க காரணம். இன்றளவும் கூட சில பெண்கள் மட்டும் தான் இதனையெல்லாம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். நாமும் அவர்களை கொண்டாடிவிட்டு ஒட்டுமொத்த பெண்களும் அங்கீகாரம் பெற்றுவிட்டார்கள் என நம்பிக்கொண்டு இருக்கிறோம்.
மார்ச் 08 ஏன் சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது?
அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளில் பெண்களின் உரிமைக்காக நடைபெற்ற போராட்டங்கள் தான் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட காரணமாக அமைந்தது. அமெரிக்காவில் சோசலிஸ்ட் கட்சி 1909 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாட ஆரம்பித்தது.
1910 ஆம் ஆண்டில் கோபன்ஹேகனில் தொழிலாளர் பெண்கள் சர்வதேச மாநாட்டை நடத்த ஆர்வலர் கிளாரா ஜெட்கின் முன்மொழிந்தபோது இந்த கொண்டாட்டம் எல்லைகளைத் தாண்டியது. 17 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 பெண்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், மகளிர் தின கொண்டாட்டத்தை சர்வதேச தினமாக மாற்றுவதற்கான முடிவு நிறைவேற்றப்பட்டது.
சர்வதேச மகளிர் தினம் முதன்முதலில் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் 1911 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
1917 ஆம் ஆண்டு பெரும் போராட்டத்திற்கு பிறகு சோவியத் ரஷ்யாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. இந்தப்போராட்டம் மார்ச் 08 துவங்கியதை நினைவு கூறும் பொருட்டு மார்ச் 08 சர்வதேச மகளிர் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
துவக்கத்தில் கம்யூனிஸ்ட் நாடுகளில் தான் மார்ச் 08 மகளிர் தினமாக கொண்டாடப்பட்டது. சர்வதேச அளவில் பெண்களின் உரிமைக்காக குரல் எழுந்தபோது இந்த தினம் சர்வதேச முக்கியத்துவத்தை பெற்றது . ஐக்கிய நாடுகள் சபையும் 1977 முதல் மார்ச் 08 ஐ சர்வதேச மகளிர் தினமாக அங்கீகரித்தது.
ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய குறிக்கோள் வெளியிடப்படும். 2021 ஆம் ஆண்டு குறிக்கோளாக . அதாவது, “தலைமை பொறுப்பில் பெண்கள் : கொரோனா உலகில் சமத்துவமான எதிர்காலம்”.
உரிமைகள் கொடுக்கப்படுவது இல்லை, அது எடுக்கப்பட வேண்டியது. இது பெண்கள் தங்களது உரிமைகளை பெறுவதற்கும் பொருந்தும்.
பாமரன் கருத்து