மருத்துவர் சாந்தா : புற்றுநோயாளிகளுக்கு கரம் கொடுத்த கடவுள்| Dr V Shanta

தென்னிந்தியாவின் மிகப்பெரிய புற்றுநோய் மையமாக அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தை உருவாக்கியதில் பெரும்பங்காற்றியவர் மருத்துவர் சாந்தா [Dr V Shanta].தனது வாழ்க்கையையே புற்றுநோயாளிகளுக்காக அர்ப்பணித்த போற்றுதலுக்கு உரியவர் சாந்தா. அவரைப் படிப்பதில் பெருமை கொள்வோம்.

அடையாறு பகுதியில் வெற்றிகரமாக செயல்பட்டுவரும் கேன்சர் சிகிச்சை மையம் [Cancer Institute (WIA) Chennai, Adyar] தென்னிந்தியாவில் புற்றுநோய் சிகிச்சைக்காகவே சிறப்பாக செயல்பட்டு வரும் சிகிச்சை மையங்களில் முதன்மையானது. உலகின் மிகக்கொடிய நோய்களை வரிசைப்படுத்தினால் புற்றுநோய் அதில் முதலிடம் பிடிக்கிறது. கேன்சர் நோய் வந்துவிட்டால் நோயாளிகள் புறக்கணிக்கப்படுவதும் செலவு அதிகமான சிகிச்சை முறையும் தான் மிக முக்கியப்பிரச்சனை. இந்த இரண்டையும் சரி செய்திடும் இடமாகவே இருக்கிறது ‘அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையம்’. பலர் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தை ஒரு அரசு மருத்துவமனை என்றுதான் எண்ணிக்கொண்டு இருப்போம். உண்மையில் அது அரசு உள்ளிட்ட பல தன்னார்வலர்களின் உதவியில் பல பத்தாண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டுவரும் பொது நிறுவனம் தான். யார் வேண்டுமானாலும் கேன்சர் சிகிச்சை மையத்திற்கு தங்களால் ஆன உதவியை செய்திட முடியும். செய்யலாமே!

மார்ச் 11,1927 ஆம் நாள் இரண்டு நோபல் பரிசு பெற்றவர்களின் குடும்பத்தில் ஒருவராக பிறந்தார் சாந்தா. சர் சிவி ராமன் மற்றும் எஸ் சந்திரசேகர் ஆகிய இருவர் தான் அந்த நோபல் பரிசு வென்ற சாதனையாளர்கள். இளம் வயதில் சர் சிவி ராமன் அவர்களின் தாக்கம் சாந்தாவிடம் இருந்தது. நேஷனல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனது படிப்பை முடித்த பிறகு மருத்துவத்தை தெரிவு செய்தார் சாந்தா. 1940 இல் சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவ படிப்பை நிறைவு செய்தார்[DGO in 1952 and MD in Obstetrics and Gynecology in 1955]. 1940 களில் புற்றுநோய் சிகிச்சையில் சிறிய அளவிலான அறிவும் அனுபவமும் மட்டுமே இருப்பதையும் பெண்கள் பல்வேறு துறைகளில் தொழில் துவங்க தடை இருப்பதையும் பல்வேறு நேர்காணல்களில் எடுத்துரைத்தார்.

இதற்கிடையில், இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமைக்கு உரிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக ஒரு தனி மருத்துவமனை அமைப்பை உண்டாக்க வேண்டும் என விரும்பினார். வாழ்வில் தவறு செய்தவர்களுக்குத்தான் புற்றுநோய் வருமெனவும் கடவுள் தண்டிப்பது தான் புற்றுநோய் எனவும் புற்றுநோய் வந்தவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் எனவும் புற்றுநோய் வந்துவிட்டால் காப்பாற்றவே முடியாது எனவும் பல்வேறு வதந்திகள் மக்களிடம் இருந்த காலம் அது. இதனால் தான் புற்றுநோய்க்கு தனி அமைப்பை உண்டாக்க வேண்டும் என எண்ணினார். அவரது தங்கைக்கு புற்றுநோய் ஏற்பட்டு அதனால் அவர் அடைந்த துன்பமும் கூட புற்றுநோய் சிகிச்சை மையத்தை உருவாக்க அவரை உந்தியிருக்கலாம். அவரது எண்ணத்தை நனவாக்க கடுமையாக போராடியவர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் மகன் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி. இவர்களோடு இணைந்து இவ்வளவு பெரிய நிறுவனமாக கேன்சர் இன்ஸ்டிடியூட் வளர காரணமாக இருந்தவர் தான் மருத்துவர் சாந்தா.

இந்தியாவை அறிவியல் பாதையில் அழைத்துச்செல்ல விரும்பிய ஜவர்களால் நேரு தான் கேன்சர் மையத்தை முதல் முதலாக திறந்து வைத்துள்ளார். துவக்கத்தில் வெறும் 12 இருக்கைகளுடன் குடிசைகளில் தான் இந்த மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது விசாலமான மருத்துவமனையில் 450 க்கும் மேற்பட்ட இருக்கைகளுடன் மக்களுக்கு சேவையாற்றி வருகிறது அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையம். படிப்பு முடித்த பின்பு மருத்துவர் சாந்தா இந்த மையத்தில் இணைந்து சேவையாற்றினார். இதற்க்கு முக்கியகாரணம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் மகன் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் இவருக்கு இருந்த நட்பே காரணம். மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மறைவுக்கு பிறகு கேன்சர் மருத்துவமனையை தானே ஏற்றுநடத்த ஆரம்பித்தார் மருத்துவர் சாந்தா.

மருத்துவர் சாந்தா அவர்களின் சேவையைப் பற்றி குறிப்பிட விரும்புகிறவர்கள் இவ்வாறாக சொல்கிறார்கள் ‘மருத்துவர் சாந்தா மகப்பேறு மருத்துவதைத்தான் படித்தார். அப்போதே படித்த அவர் இந்நேரம் மகப்பேறு மருத்துவத்தை தேர்ந்தெடுத்து இருந்தால் மிகப்பெரிய கோடீஸ்வர மருத்துவர்களில் ஒருவராக அவர் வந்திருப்பார். ஆனால் மருத்துவம் என்பது மக்களுக்கானது, அதனை வணிகமாக்குதல் அறமல்ல என்பதை உணர்ந்தாலயே அவர் இத்தகைய சேவையை ஆற்றியுள்ளார்’ என்கிறார்கள். இவர்களின் சேவை மனப்பான்மையை உணர்ந்த இந்திய அணுசக்தி ஆய்வு நிறுவனம் 1956 ஆம் ஆண்டு பபுற்றுநோய் சிகிச்சைக்கான கருவியை இலவசமாக வழங்கியது ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. 

இதுதவிர மருத்துவர் சாந்தா அவர்களின் கடும் முயற்சியினால் – புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகளுக்கான வரி நீக்கம்; புற்றுநோய் நோயாளிகள் பேருந்து மற்றும் ரயில்களில் இலவச பயணம் பெற அனுமதி; ஏழைகளுக்கு இலவச மற்றும் குறைந்த கட்டணத்தோடு புற்றுநோய்க்கு சிகிச்சை என பல தாக்கங்களை புற்றுநோய் சிகிச்சையில் நிகழ்த்திக்காட்டியவர் மருத்துவர் சாந்தா. சுமார் 67 ஆண்டுகள் இந்த மருத்துவ மையத்தை வழிநடத்திய மருத்துவர் சாந்தா அவர்களுக்கு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றாக இருக்கும் பத்ம விபூஷண் வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 19,2021 அன்று அதிகாலை 3.55 மணி அளவில் மருத்துவமனையில் மூச்சு திணறல் பிரச்சனைக்காக அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் உயிர் துறந்தார்.

மருத்துவமனைகள் பல கட்டி கோடீஸ்வர மருத்துவர்களுக்கு கிடைக்காத அங்கீகாரம் சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவர் சாந்தா அவர்களுக்கு கிடைத்தது. ஆமாம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ‘உயர்தர புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான சிறந்த முயற்சிகளுக்காக டாக்டர் வி. சாந்தா நினைவுகூரப்படுவார். சென்னை அடையாரில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் சேவை செய்வதில் முன்னணியில் உள்ளது. 2018ஆம் ஆண்டு நான் அங்கு சென்றதை நினைவுகூர்கிறேன். மருத்துவர் வி. சாந்தாவின் மறைவை எண்ணி வருந்துகிறேன்’ என தெரிவித்தார்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சாந்தாவின் சகோதரி சுசீலா உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். மருத்துவர் சாந்தாவின் மரணம் மருத்துவ துறைக்கு பெரிய இழப்பு என கூறும் தமிழக சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன், ”அவர் மிகவும் எளிமையானவர். என்னுடைய தாய் போன்றவர். தனது இறுதி வரை ஏழை மக்களுக்காக உழைத்தவர்,” என்றார்.

இவரது சேவையை பாராட்டி இவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. தான் இறந்துபோனால் பெரிய அளவில் அந்த நிகழ்வை நடத்தக்கூடாது என விரும்பிய மருத்துவர் சாந்தா [Dr V Shanta] தன்னுடைய அஸ்தியையும் புற்றுநோய் மருத்துவமனையின் வளாகத்திலேயே தெளித்துவிடுமாறும் கூறியதாக நினைவு கூறுகிறார்கள் அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள். இறந்தாலும் கேன்சர் சிகிச்சை மையத்துடன் இருக்க வேண்டும் என அவர் விரும்பினார்.

மருத்துவர் சாந்தா [Dr V Shanta] போன்றவர்களால் தான் இங்கே மனிதம் உயிர்ப்போடு இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. அவர் வாழ்ந்த காலங்களில் நாமும் வாழ்ந்திருப்பதே பெரும் புண்ணியம். 

பெண்கள் வாக்குரிமைக்காக போராடி வென்ற பெண் : எம்லைன்
ஏன் நீங்கள் எப்போதும் பெரிதாக சிந்திக்க வேண்டும்?






Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *