லவ் ஜிஹாத் தடுப்பு சட்டம் : சரியா? தவறா?
இந்துப்பெண்களை ஏமாற்றி திருமணத்துக்காக மதம் மாற்றிடும் செயல்களை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ள ‘லவ் ஜிகாத் எதிர்ப்பு சட்டம்’ ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்றிருக்கிறது. யாரை திருமணம் செய்திட வேண்டும், எந்த மதத்தை பின்பற்றிட வேண்டும் என்பதெல்லாம் தனிமனித சுதந்திரத்திற்கு உட்பட்ட விசயமாக அரசியலைப்பு சட்டம் தெளிவாக விளக்கியிருக்கக்கூடிய சூழ்நிலையில் தான் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
திட்டமிட்ட மதமாற்றம்
திட்டமிட்டு மதத்தை பரப்பிடும் வேலை தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது. குறிப்பாக இந்து மதத்திலிருந்து மற்ற மதங்களான கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் மதத்திற்கு தான் மதமாற்றம் அதிகப்படியாக நடைபெறுகிறது.
மத சுதந்திரம் கொண்ட நாடாக அறியப்படுகிற இந்தியாவில் எந்தவொரு மதத்தையும் பரப்புரை செய்திட தடை எதுவும் இல்லை. ஆகவே தான் மதமாற்றம் செய்திட முயல்பவர்களை தடுக்க நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் நிலவுகிறது. ஒவ்வொருவருக்கும் தங்கள் மதத்தை பரப்பிட உரிமை இருக்கிறது என்பதற்காகவே மதமாற்றம் செய்பவர்களை அனுமதித்தாலும் எதிர்காலத்தில் பிரச்சனை நிகழ வாய்ப்பிருக்கிறது.
உண்மையாலுமே கடவுளின்பால் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு ஒருவர் மதம் மாறுவது அவரவர் உரிமை. அதனை தடுக்க எவருக்கும் உரிமை இல்லை. ஆனால் திட்டமிட்ட மதமாற்றம்?
லவ் ஜிஹாத்
பெண்களை மத மாற்றம் செய்திட வேண்டும் என்ற ஒற்றைக்காரணத்துக்காக அவர்களை ஏமாற்றி திருமண வலையில் விழ வைத்து மதமாற்றம் செய்திட கட்டாயப்படுத்துவது தான் ‘லவ் ஜிஹாத்’ என கூறப்படுகிறது.
உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் லவ் ஜிகாத் தடுப்பு சட்டத்தை கொண்டுவருவதில் தனி ஆர்வம் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இதன்படி, திட்டமிட்டு பெண்களை மதமாற்றம் செய்வதற்காக மட்டுமே திருமணம் செய்பவர்கள், திட்டமிட்டு மதமாற்றம் செய்திடும் வேலைகளில் ஈடுபடுவோர் மீது நடவெடிக்கைகளை எடுக்க முடியும்.
லவ் ஜிகாத் தடை சட்டம் சரியா?
உத்திரபிரதேசத்தில் பெண்களை திருமணம் செய்துகொள்ளும் முஸ்லீம் ஆண்கள் அவர்களை மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்துவதாக குற்றசாட்டு தொடர்ச்சியாக எழுந்து வந்தது.
ஆனால் இந்த சட்டம் சில சிக்கல்களையும் கொண்டிருக்கிறது. அதன்படி, ஒருவர் மத மாற்றம் செய்ய விரும்பினால் மாவட்ட மாஜிஸ்திரேட் முன்பாக இரண்டு மாதங்களுக்கு முன்பே விண்ணப்பம் செய்திட வேண்டும். தான் எந்தவித கட்டாயத்தின் பேரிலும் மதமாற்றம் செய்திடவில்லை என்பதை நிரூபிக்கவேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. நிரூபிக்க தவறினால் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரையிலும் சிறை தண்டனை மற்றும் குறைந்தது 10 ஆயிரம் அபராதம் விதிக்கவும் முடியும்.
இந்தியா அதன் பன்முகத்தன்மையினாலேயே விரும்பப்படுகிறது. இந்த சட்டம் சற்றே அந்த உரிமையை மழுங்கடிக்கிறது. இதனை மறுத்துவிட முடியாது. இந்தியா போன்றதொரு நாட்டில் சாதிய மத பாகுபாடுகளை ஊக்குவிக்கவே நடவெடிக்கைகளை அரசுகள் எடுக்க வேண்டும். அப்படி எடுக்கும்போது மட்டுமே ஏற்றத்தாழ்வுகளையும் ஒற்றுமையையும் பேணிக்காக்க முடியும்.
வேறொரு மதத்தை சேர்ந்தவரை காதலிப்பதற்கு பெற்றோர்களைக்கண்டே பிள்ளைகள் அஞ்சுவார்கள். ஆனால் இப்போது அரசியலமைப்பு சட்டத்திற்கும் பயப்பட்டு ஆகவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இன்னொரு மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டோரும் மதம் மாறாமல் இருப்பதை காண முடிகிறது.
வசதி படைத்தோரும் பிரபலமானவர்களும் பிற மதத்தவரை திருமணம் செய்துகொள்ளும்போது கொண்டாடுகிறது இந்த நாடு. ஆனால் சாமானியர்கள் அதனை செய்திடும் போது சந்தேகக் கண் கொண்டு பார்க்கபோகிறது.
லவ் ஜிகாத் இருக்கிறது உண்மைதான். அது தடுக்கப்பட வேண்டியதுதான். ஆனால் அதனை தடுக்க கொண்டுவந்துள்ளதாக சொல்லப்படுகிற சட்டம் ஏனையோரையும் அச்சுறுத்த போகிறது எனபதை மறுக்க முடியாது. வரும்காலத்தில் இந்த சட்டம் எப்படி நடைமுறை படுத்தப்படுகிறது என்பதை பொறுத்துதான் ஆதரவும் எதிர்ப்பும் இருக்கும்.
சட்டத்திற்கு பதிலாக இன்டெலிஜென்ஸ் துறைகளை முறையாக பயன்படுத்தி லவ் ஜிகாத் உள்ளிட்டவற்றை களைய நடவெடிக்கை எடுக்க முடியாதா என்கிற கேள்வியை முன்வைக்க நான் விரும்புகிறேன்.
பாமரன் கருத்து