மவுனம் கலைப்போமா தோழர்களே
தவறுகள் நடக்கும்போது அதை தடுக்காமல் விடுவது மட்டுமே குற்றமாகாது. குறைந்தபட்சம் அது குறித்து பேசாமல் இருப்பதும் விமர்சனத்தை முன்வைக்காமல் இருப்பதும் கூட குற்றம் தான். மவுனம் கலைப்போமா தோழர்களே!
அப்படியென்ன குற்றம் நடக்கிறது நான் எனது மவுனத்தை கலைக்க வேண்டும் என சிலர் கேட்கலாம், நான் மவுனம் கலைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடவா போகிறது, நான் மவுனம் கலைத்து எனக்கு ஏதாவது நடந்துவிட்டால் என்னாவது என பல கேள்விகள் உங்களுக்குள் எழுவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
பாமரன் கருத்து இணையதளத்தில் அரசியல் குறித்து எழுதலாமா என நான் சிந்தித்தபோது எனக்குள்ளும் இதே கேள்விகள் எழுந்தன. ஆனால் அனைத்தையும் கடந்துதான் மவுனத்தை கலைத்து முடிந்தவரைக்கும் அரசியல் சார்ந்த கருத்துக்களை என்னளவில் நேர்மையாக எழுதி வருகிறேன். ஒருவேளை என்னுடைய எழுத்துக்கள் பெரிய அளவில் சென்றடையாததால் பெரிய அளவில் விமர்சனங்கள் எனக்கு வரவில்லை என்றாலும் கூட ‘வந்தாலும் பிரச்சனையில்லை’ என்ற முடிவின் அடிப்படையிலேயே மவுனம் கலைத்தேன்.
இது மிகப்பெரிய சாதனையெல்லாம் இல்லை. ஆனால் முதல்படியென கொள்ளலாம் அல்லவா. அதைத்தான் நாம் அனைவரும் செய்திடவேண்டுமென கூறுகிறேன்.
நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விசயத்திலும் ஒரேயொரு முக்கியமான விசயம் தலையீடு செய்கிறது. அதுதான் ‘அரசியல்’. நாம் பிறக்கும் மருத்துவமனையின் தரத்திற்கும் அரசியலுக்கும் சம்பந்தமுண்டு, வாழும் ஒவ்வொரு நொடிக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் உண்டு, இறந்தால் புதைக்கப்படும் இடுகாட்டிற்கும் அரசியலுக்கும் சம்பந்தமுண்டு.
ஆனால் நம்மில் பலர் அரசியலுக்கும் நமக்கும் தொடர்பற்றவர்கள் போல நடந்துகொள்கிறோம். இதனைத்தான் மாற்றிக்கொள்ளும்படி இந்தப்பதிவில் வலியுறுத்துகிறேன்.
பேசுவதால் என்னவாகிவிடப்போகிறது?
மிகப்பெரிய மாற்றங்களுக்கு
சிறு சிறு பேச்சுக்கள் தான் துவக்கம். சமூகவலைத்தளங்கள் பணம் மிக்கவர்களால் கட்டியாளப்படுகிறது. அவர்களுக்கு வசதியான கருத்துக்கள் அங்கே உலாவவிடப்படுகின்றன. பார்க்கும் சாமானியர்களுக்கோ அதுவே உண்மையான கருத்துக்களாக திணித்துவிடப்படுகின்றன.
இவர்களையும் தாண்டி உண்மையும் நேர்மையும் இந்த சமூகத்தில் நிலைபெற வேண்டுமெனில் சராசரி மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களது மவுனத்தை
கலைத்தாக வேண்டிய தேவை இருக்கிறது. நாம் அரசியல் பேச வேண்டும், சமூகத்தில் நடப்பவை குறித்து பேச வேண்டும், குற்றங்கள் குறித்து பேச வேண்டும், குறைகள் குறித்து பேச வேண்டும், வன்முறை குறித்து பேச வேண்டும். அப்படி நாம் ஒவ்வொருவரும் பேசத்துவங்கினால் நேர்மையற்ற கருத்துக்கள் அனாதையாக மாறிவிடும்.
எதார்த்த சூழல் எப்படி இருக்கிறது?
ஊழல் – அடுத்த தலைமுறை வந்தால் சரியாகிவிடும், சாதியா – அடுத்த தலைமுறை வந்தால் சரியாகிவிடும், கொலை கொள்ளைகளா – அடுத்த தலைமுறை வந்தால் சரியாகிவிடும், பாலியல் குற்றங்களா – அடுத்த தலைமுறை வந்தால் சரியாகிவிடும். இப்படி ஒவ்வொன்றுக்கும் அடுத்த தலைமுறை வந்தால் சரியாகிவிடும் என நம்பிக்கையோடு காட்டுகிறோம். ஆனால் தலைமுறை தலைமுறையாக இதை மட்டுமே செய்துவருகிறோம் என்பதை யாருமே நினைத்துப்பார்ப்பது இல்லை.
ஏன் தவறுகள் அனைத்தும் தொடர்கதையாகிக்கொண்டே இருக்கின்றன என எப்போதாவது கேள்வி எழுப்பியிருக்கிறோமா? இல்லையே . பழைய தலைமுறை போலவே புதிய தலைமுறையும் தன்வாழ்வு சார்ந்து சிந்திதனாலேயே மவுன விரதத்தை மேற்கொண்டதாலேயே மட்டுமே அதே இழிநிலை தொடர்கிறது.
இனி,
மவுனம் கலைப்போம்
அறம் பேசுவோம்
பிறருக்கும் கற்பிப்போம்
மாற்றத்தை விதைப்போம்
பாமரன் கருத்து