போராளி பிரபாகரன் இறந்த கதை

ஒரு மனிதன் இவ்வுலகை விட்டு பிரிந்துவிட்ட செய்தி கேட்ட பின்பு ‘அப்படி நடந்திருக்க முடியாது’ என இறுதிவரை வாதாடும் மக்கள் செல்வத்தை யார் பெற்றிருக்கிறாரோ அவரே ‘தலைவன்’ ஆகிறார். அதே சமயம், நம்பிக்கையின்மை என்பது வதந்திகளின் துவக்கப்புள்ளியாகவும் இருந்துவிடக்கூடாது.

 

பிரபாகரன் குறித்த தேடல்கள், வாசிப்புகள் தொடர்ச்சியாக அதிகரித்தவண்ணம் இருக்கின்றன. அகிம்சையை போற்றிடும் ஒரு குடும்பத்தில் பிறந்த பிரபாகரன் எனும் சிறுவனுக்குள் ஆயுதமேந்தும் எண்ணம் எப்படி முளைத்தது என்பதனை கடந்த கட்டுரையில் பார்த்தோம். இந்தக்கட்டுரையில் பிரபாகரன் அவர்கள் போரில் வீரமரணம் அடைந்த பிறகும் கூட ‘அவர் இப்படித்தான் இறந்தார்’ ‘அவர் தப்பிவிட்டார்’ ‘அவர் வெளிநாட்டில் இருக்கிறார்’ ‘இது அவரது உடலே அல்ல’ என்பது போன்ற பல கருத்துக்கள் உலாவின. இவை அனைத்தின் அடிப்படையும் தாங்கள் விரும்பும் தலைவர் எப்படியேனும் இருந்துவிட மாட்டாரா என்ற மக்களின் ஏக்கமாக இருக்கலாம். இந்தக்கட்டுரையில் ‘பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறாரா? வட்டமிட்ட வதந்திகள்’ என்னென்ன என்பதனைப்பார்ப்போம்.

உலகில் எந்தவொரு போராளி இயக்கமும் இவ்வளவு திட்டமிட்டு கப்பல் படை, தரைப்படை, வான்படை என பல படைகளை நிறுவி, ஆயுத பலத்துடன் இருந்ததாக தெரியவில்லை என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள். அப்படி திட்டமிட்டு பல விசயங்களை செய்தாலும் கூட பிரபாகரன் அவர்கள் எடுத்த சில முடிவுகள், இந்திய அரசின் அணுகுமுறை, இலங்கையின் நடவெடிக்கை, உலக நாடுகளின் ஆதரவு என பல விசயங்கள் பிரபாகரன் அவர்களின் இயக்கம் வீழ்ந்துபோக காரணமாக அமைந்துவிட்டன.

பிரபாகரன்: வாழ்வும் மரணமும் என்ற புத்தகத்தில் ஆசிரியர் பா ராகவன் பல விசயங்களை அருமையாக ஆராய்ந்து தொகுத்து வழங்கியிருக்கிறார். பிரபாகரன் இளமைக்காலம் முதல் இறுதிக்காலம் வரையிலான பல்வேறு விசயங்களை சுருக்கமாகவும் சரியாகவும் படிக்க வேண்டுமெனில் இந்த புத்தகத்தை வாசிக்கலாம். இதன் விலை 199 ரூபாய். நீங்கள் Kindle Unlimited கணக்கு வைத்திருந்தால் இலவசமாகவும் தரவிறக்கி படிக்கலாம். இங்கே பிரபாகரன் இறந்த கதை எனும் தலைப்பில் ஆசிரியர் அளித்திருக்கும் விசயங்களை பார்ப்போம்.

 

* பிரபாகரன் இறக்கவில்லை. நிச்சயமாக அவர் உயிருடன் இருக்கிறார். தமிழர்களின் தன்னம்பிக்கையைக் குலைப்பதற்காக இலங்கை அரசு திட்டமிட்டுக் கிளப்பிவிட்ட பொய்ச் செய்தி இது.

*செல்வராஜா பத்மநாதன் சொல்லிவிட்டார். பாதுகாப்புக் காரணங்களால் அவர் எங்கே இருக்கிறார் என்று இப்போது சொல்ல முடியாது.

*தனது செய்தியின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்காகவே போலியாக ஒரு பிரபாகரன் பொம்மையைச் செய்து போட்டோ பிடித்துக் காட்டியிருக்கிறார்கள். அது பிரபாகரனே இல்லை. உருவ ஒற்றுமை லேசாக இருக்கிறதே தவிர, உற்றுப்பார்த்தால் புருவம், மூக்கு, முகவாய், காது எல்லாமே வேறு மாதிரி இருப்பது புலப்படும்.

* பிரபாகரன் கடந்த சில காலமாக மீசையே வைத்துக் கொள்ளவில்லை. அப்படியே வைத்திருந்தாலும் இப்படி தொங்கு மீசை வைத்துக்கொள்வது அவரது வழக்கமல்ல.

*பிரபாகரனின் மகன் சார்ல்ஸ் ஆண்டனி என்று காட்டப்படும் உடல் கூட ஆண்டனியுடையது அல்ல. அது கடற்படையில் பணியாற்றிக் கொண்டிருந்த சார்ல்ஸ் என்னும் வேறு போராளியுடையது. பிரபாகரன் மகனுக்கு 24 வயதுதான் ஆகிறது. இவர்கள் காட்டும் படத்தில் இருப்பவருக்கு எப்படியும் நாற்பது, நாற்பத்தைந்து வயது இருக்கும்.

*இலங்கை அரசு வெளியிடும் செய்திகளே முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது. நந்திக்கடல் ஏரியிலிருந்து உடல் எடுக்கப்பட்டது என்கிறார்கள். நீரில் மூழ்கிய உடல் இப்படியா இருக்கும்?

*தப்பிச் செல்லும்போது சுட்டதாகச் சொன்னது பொய். தப்பிக்கும் தறுவாயில் ஒருவர் இருந்தால் சுத்தமாக முகச்சவரம் செய்துகொண்டு, ராணுவ உடை உடுத்திக்கொண்டு புறப்பட வாய்ப்பில்லை. அதுவும் மறக்காமல் அடையாள அட்டையை எடுத்து வைத்துக்கொண்டு புறப்படுவார் என்று எண்ணமுடியவில்லை.

*மரபணு சோதனை செய்யப்பட்டுவிட்டதாகச் சொல்வது பொய். பிரபாகரனைக் கொன்றது உண்மை என்றே வைத்துக்கொண்டாலும் அவரது மரபணுவை வேறு யாருடைய உடலிலிருந்து எடுத்த திசுக்களுடன் ஒப்பிட்டு சோதித்திருப்பார்கள்? பிரபாகரனின் குடும்பத்தார் அத்தனை பேரும் வெளிநாடுகளுக்குச் சென்று பலகாலம் ஆகிவிட்டது. அவரது சகோதரி ஒருவர் சென்னையில் இருக்கிறார். இன்னொரு சகோதரி கனடாவிலும் மூத்த சகோதரர் டென்மார்க்கிலும் இருக்கிறார்கள். இவர்கள் யாருடைய உதவியும் இல்லாமல் எப்படி மரபணுச் சோதனை சாத்தியம்? இவர்கள் கண்டெடுத்ததாகச் சொன்ன சார்ல்ஸ் ஆண்டனி உடலும், பிரபாகரனின் மகன் உடல் அல்ல.

*மரபணு சோதனை செய்ய இலங்கையில் எவ்வித வசதியும் கிடையாது. இதனை அதிகாரிகளே ஒப்புக்கொள்வார்கள். அப்படியிருக்க, உடல் மீட்கப்பட்ட ஒரு சில மணி நேரத்துக்குள் மரபணு சோதனை முடிந்தது எப்படி? வல்லுனர்கள் அதற்குக் குறைந்தது நான்கு முதல் ஆறு தினங்கள் பிடிக்கும் என்கிறார்களே?

*பிரபாகரன் தமிழகத்தில் சிறைப்பட்டிருந்தபோது அவரது ரத்த மாதிரி, கைரேகை, பிற அங்க அடையாளங்களை அங்கே காவல் துறை பதிவு செய்து வைத்திருக்கும். உடலைத் தமிழ் நாட்டுக்கு அனுப்பி சோதனை செய்யத் தயாரா? இந்திய அரசு கேட்கட்டும்.

இலங்கை வெளியிட்ட தகவல்களுக்கு பதிலாகத் தமிழகமும் உலகத் தமிழர்களும் இவ்வாறாக எதிர்வினை ஆற்றிக்கொண்டிருந்த சமயத்தில் அடுத்து வந்த புதன்கிழமை பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரின் உடல் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை ராணுவம் தெரிவித்தது. சுட்டுக்கொன்றார்களா, தற்கொலை செய்துகொண்டார்களா என்று கூறாமல், வெறுமனே ‘உடல் கண்டெடுக்கப்பட்டது’ என்று மட்டும் சொல்லப்பட்டது. அவர்களுக்கும் தலையில் மட்டுமே குண்டு பாய்ந்திருந்தது! பிரபாகரனுடனேயே நந்திக்கடல் ஏரிப் பகுதியில் தப்பிச் செல்ல முயன்றபோது சுடப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்பட்டது.

‘சந்தேகமே இல்லை. இது பிரபாகரனின் உடல்தான். கண்டெடுக்கப்பட்டவை, அவருடைய பொருள்கள்தான். மதிவதனி, பாலச்சந்திரன், துவாரகா உடல்களும் இவையே. மதிவதனி எனக்கு அக்கா மாதிரி. குழந்தைகள் எத்தனையோ சமயம் என் வீட்டில் விளையாடியிருக்கின்றன. இப்படியாகி இருக்கவேண்டாம். பிரபாகரன் அவர்களையும் பலி கொடுத்துவிட்டார். ஆனால் ராணுவத்தைக் குறை சொல்ல முடியாது. யுத்தக் களத்தில் அவர்களைத் தங்கவைத்திருந்ததுதான் பிழை. பிரபாகரன் நிறையப் பிழை செய்துவிட்டார். அதிபர் ராஜபக்ஷே கண்டிப்பாக பிரபா குடும்பத்தாருக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் அளித்திருப்பார். எனக்கு வருத்தமாக இருக்கிறது…’ என்று கருணா சொன்னார். யாரும் நம்பவில்லை. அல்லது நம்ப விரும்பவில்லை. புலிகள் இயக்கத்தின் ஆயுதக் கொள்முதல் பிரிவின் தலைவரும் சர்வதேசத்துறை பொறுப்பாளருமான குமரன் பத்மநாதன் என்கிற செல்வராஜா பத்மநாதன் விடுத்த அறிக்கையை மட்டுமே நம்ப விரும்பினார்கள். பிரபாகரன் இறக்கவில்லை. நலமாக இருக்கிறார்.

ஆனால், பிரபாகரன் அந்தப் பதினேழாம் தேதி ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னதாகவே தப்பிச் சென்றுவிட்டார் என்று பரவிய தகவலை யுத்தக்கள நிலவரம் குறித்து நன்கு அறிந்த ஈழத் தமிழர்கள் சிலர் மட்டும் மறுத்தார்கள். கடைசிக் கணம் வரை யுத்தம் நடந்த இடத்தில்தான் அவர் இருந்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஞாயிறு அன்று வெலிஓயா என்னும் காட்டுப்பகுதியில் ரமேஷ் என்னும் தளபதி காத்திருக்க, யுத்தப் பகுதியிலிருந்து இறுதியாகத் தப்பி வெளியேறலாம் என்று தீர்மானம் செய்யப்பட்டது உண்மை என்று அவர்கள் சொன்னார்கள்.

பிரபாகரன் உள்பட மிச்சமிருந்த முக்கியத் தளபதிகள் அத்தனை பேரும் பதிமூன்று படகுகளில் நந்திக்கடல் நீர்வழி ஊடாக மணலாற்றைக் கடந்து வெலிஓயா காட்டுக்குச் சென்றுவிடத் தீர்மானித்திருக் கிறார்கள். அன்று நள்ளிரவுக்குப் பிறகு இம்முயற்சி மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. ஆனால் அப்படித் தப்ப முயன்றபோது ஆறு படகுகள் இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்பட்டிருக்கின்றன. மிச்சம் உள்ள ஏழு படகுகளும் தப்பித்துச் சென்றுவிட, தாக்கப்பட்ட படகுகளில் ஒன்றில் பிரபாகரனும் பொட்டு அம்மான், சூசை போன்ற இருந்திருக்கிறார்கள். ‘பிரபாகரனின் உடலை வேறு எங்கேயாவது கண்டெடுத்ததாக ராணுவம் சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டோம்.

ஆனால் மிகமிகச் சிலருக்கு மட்டுமே அவர் நந்திக்கடல் வழியே தப்பிக்கச் செய்த முயற்சி தெரியும். ராணுவம் சரியாக, நந்திக்கடல் படுகையில் அவரது உடலைக் கண்டெடுத்ததாகக் காட்டியபோதுதான் அதிர்ச்சியாக இருந்தது. இதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. நம்பவும் விருப்பமில்லை’ என்று இயக்கத்துடன் தொடர்புள்ள சில புலம்பெயர் ஈழத் தமிழர்கள் சொன்னார்கள். இதுவல்ல, எதுவுமே உண்மையல்ல… நடந்தது திட்டமிட்ட சதி. உள்ளே இருந்தபடியே போட்டுக்கொடுத்து கொலை செய்திருக்கிறார்கள், புலிகள் இயக்கத்துக்குள் துரோகிகள் இருப்பது ஒன்றும் புதிதில்லையே? இப்படியும் பேசப்பட்டது. இறுதி யுத்தத்தின் இறுதி தினத்தில், புலிகள் இயக்கத்தின் அரசியல் மற்றும் அமைதிக்குழு உறுப்பினர்களான நடேசன், புலித்தேவன் இறந்த விதம் பற்றி செல்வராஜா பத்மநாதன் ஓர் அறிக்கை விடுத்திருந்தார்.

சமாதானப் பேச்சுக்கு வரவழைத்து, நயவஞ்சகமாக வழியில் அவர்கள் கொல்லப்பட்டதாகப் பத்மநாதன் புலி ஆதரவு இணையத்தளமான தமிழ்நெட்டில் சொல்லியிருந்தார். கிட்டத்தட்ட அதே விதமான நடவடிக்கைதான் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தார் விஷயத்திலும் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்பது இன்னொரு வாதம். பிரபாகரன், சார்ல்ஸ் ஆண்டனி, மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் என்று ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை உறுப்பினர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். யுத்தக் களத்தில் இத்தனை பேரைச் சரியாகத் தலையில் குறிபார்த்துச் சுட்டுக் கொல்வது என்பது எப்படிச் சாத்தியம்? ஆம்புலன்ஸில் பிரபாகரன் தப்பிக்க முயற்சி செய்ததும் ராக்கெட் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு கொல்லப்பட்டதும் உண்மையானால், உடலில் வேறு காயமே இருக்காதா? ஒரு ராக்கெட் தாக்குதலில் தூக்கியெறியப்பட்ட வண்டியிலிருந்து மீட்கப்பட்டது உண்மையானால் இப்படியா இருக்கும் உடல்? அந்த ஆம்புலன்ஸின் கதிதான் என்ன? ஒரு போட்டோகூடக் கிடையாதே. சரி, ஆம்புலன்ஸ் வேண்டாம். படகில் தப்பிச் செல்லும்போது சுட்டுக்கொல்லப்பட்டதாகவே வைத்துக்கொண்டாலும், இரவுப் பொழுதில் ஒரு குடும்பத்தையே சரியாகத் தலையில் குறிபார்த்துச் சுட்டு வீழ்த்த முடியுமா? எனவே யாரோ நம்பிக்கை துரோகி, தப்பிக்க வைப்பதாகச் சொல்லி அழைத்துச் சென்று பிடித்துக்கொடுத்து, சுட்டுக்கொன்றிருக்கிறார்கள் என்பதே உண்மை என்று விவரமறிந்தவர்கள் சொன்னார்கள். என்ன நடந்திருக்கக்கூடும்? யோசிக்கலாம். பிரபாகரன் மரணத்தைப் பொருத்தவரை முழு உண்மை என்ற ஒன்று இல்லவே இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் இருளில் உறுப்பு தடவித்தேடி யானையைச் சமைக்கவேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. பதினேழாம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷே தனது ஜோர்டன் சுற்றுப்பயணத்தை அவசரமாக முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பினார். என்றுமில்லாத பரவசத்தையும் வெற்றி பெற்றுவிட்ட மகிழ்ச்சியையும் அவர் விமானத்திலிருந்து இறங்கும்போதே முகத்தில் காண முடிந்தது.

மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, மண்ணில் கால் வைத்ததுமே மண்டியிட்டு நிலத்தில் முத்தமிட்டார். அன்றைக்கே வெற்றி அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. என்ன தகவல் அவருக்குக் கிடைத்து, அத்தனை பரவசப்பட்டிருக்க முடியும்? பிரபாகரன் பிடிபட்டுவிட்டார் அல்லது கொல்லப்பட்டுவிட்டார் என்பதைத் தவிர வேறு எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னதாக, பிரபாகரன் கொல்லப்பட்டதாகவோ அல்லது பிடிபட்டுவிட்டதாகவோ, தற்கொலை செய்துகொண்டதாகவோ எந்தத் தகவலோ அல்லது வதந்தியோகூட எழவில்லை. அவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்றே சொல்லப்பட்டது. ஆனால் யுத்தக் களத்தில் நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகள் இறந்து கிடப்பதாக மட்டும் செய்திகள் வந்துகொண்டிருந்தன.

ஞாயிறு மதியத்துக்கு மேல் ராஜபக்ஷே கொழும்பு திரும்பிய அதே தினம் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியை ஒரு வதந்தியாக முதலில் பரப்ப ஆரம்பித்தார்கள். ஆதாரம் எதையும் காட்டாமல், ராணுவ உயர் அதிகாரிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்காமல், ஆனால் ராணுவத் தரப்புத் தகவலாகவே இந்த வதந்தி பரப்பப்பட்டது. இது ‘உண்மையான வதந்தியாக’ இருந்திருக்கக்கூடிய பட்சத்தில் இலங்கை ராணுவம் உடனே இதனை மறுத்திருக்கும். ஆனால் செய்யவில்லை. மாறாக, ‘ஆயுதங்களைக் கீழே போட புலிகள் முடிவு செய்திருக்கிறார்கள். நான்கு மணிநேரம் பிரபாகரனுடன் பேசினேன். அவர்தான் இந்த உத்தரவை அளித்தது’ என்று தமிழ் நெட்டில் அறிவித்து பிரபாகரன் உயிருடன் இருக்கும் விஷயத்தைப் பத்மநாதன் உறுதிப்படுத்தினார். ஆனால், மறுநாள் திங்கள் அதிகாலை பிரபாகரனின் மகன் சார்ல்ஸ் ஆண்டனியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக ராணுவம் அறிவித்தது.

நடேசன், புலித்தேவன் ஆகியோர் உடல்களும் கைப்பற்றப்பட்டதாகத் தொடர்ந்து அறிவிப்பு வந்தது. பல விடுதலைப் புலி முக்கியப் பிரமுகர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் அடையாளம் காணப்படும் முயற்சியில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இப்போதுதான் பிரபாகரன் நிலைமை பற்றிய கவலை மக்கள் மத்தியில் தீவிரமாக எழத் தொடங்கியது. வந்த வதந்தி ஒருவேளை உண்மையாக இருக்குமோ என்று அச்சம் ஏற்படத் தொடங்கிய வேளை, திங்களன்று காலை பிரபாகரனின் உடல் நந்திக்கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக இலங்கை ராணுவம் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

இது தொடர்பான அதிர்ச்சி அலைகள் சற்றே வடியத்தொடங்கிய பிறகு புதன் கிழமை அன்று பிரபாகரனின் குடும்பத்தினர் உடல்களும் அதே நந்திக்கடல் படுகையில் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்கள். (பின்னால் அதை ராணுவமே மறுத்தது. பெண் மற்றும் குழந்தைகளின் உடலைக் காட்டினால் பெரிய பிரச்னையாகக்கூடும் என்று அஞ்சியதே இதற்குக் காரணம் என்று பேசினார்கள்.) இடையில் இருந்த ஒரு நாளில் போர் முடிந்த அறிவிப்பு, அதிபரின் மகிழ்ச்சிப் பிரகடனம், ஒருநாள் தேசிய விடுமுறை, கொண்டாட்டங்கள் யாவும் நடந்தேறின. ஏராளமான உடல்கள் கிடைத்திருப்பதாகவும் ஒவ்வொன்றாக அடையாளம் காணப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் சொல்லப்பட்டதே ஒரு வசதிக்காகத்தான். உண்மையில் பிரபாகரன் குடும்பத்தார் கொலை என்பது யுத்தக் களத்தில் நிகழ்ந்ததே இல்லை.

அறிவித்தபடி பதினெட்டாம் தேதி திங்களன்று நிகழ்ந்ததும் இல்லை. நிச்சயமாக, ஞாயிற்றுக்கிழமைக்கு முன்பே அவர்கள் முடித்திருக்க வேண்டும். அறிவிப்பில்தான் தாமதம். மஹிந்த ராஜபக்ஷே ஜோர்டனில் இருந்தபோதே யுத்தம் கிட்டத்தட்ட அதன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், பிரபாகரனும் முக்கியத் தளபதிகளும் மட்டுமேனும் உயிர்தப்ப ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா என்று பார்க்கப்பட்டிருக்கிறது. நடேசனும் புலித்தேவனும் சரணடைய ஏற்பாடு செய்யும்படித் தன்னிடம் சொன்னதாகவும் தான் அதற்கான முயற்சிகளை எடுத்ததாகவும் Marie Colvin என்கிற டைம்ஸ் நிருபர் பிரபாகரன் இறந்து, சரியாகஒருவாரம் கழித்து அறிவித்தார்! பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமான, அதே சமயம் இலங்கை விவகாரம் குறித்து சர்வதேச மட்டத்தில் தொடர்ந்து பேசியும் அரசியல் ராஜதந்திர ரீதியிலான செயல்பாடுகளுக்கு வடிவம் கொடுத்துக்கொண்டும் இருக்கக்கூடிய நபர்கள், நம்பகமான மூன்றாம் தரப்பினர் யாரிடமாவது சரணடைந்து பேச்சுவார்த்தைகளுக்கு முயற்சி செய்யலாம் என்று சொல்லியிருக்க வேண்டும்.

அந்த ஏற்பாடுகளின் முதல் கட்டமாகத்தான் இலங்கை ராணுவத்தின் 53வது படைப்பிரிவுடன் பேச்சுவார்த்தை நடத்த நடேசன், புலித்தேவன் ஆகியோர் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்கள். முதலில் அவர்கள் ஐ.நா. அதிகாரிகளைத்தான் தொடர்புகொண்டதாகவும், அவர்கள்தாம் இலங்கை ராணுவத்தின் குறிப்பிட்ட பிரிவுடன் பேசும்படி சொல்லி அனுப்பியதாகவும் புலிகள் தரப்பில் சொன்னார்கள். சரணடையச் சென்ற நடேசன் குழுவினர் வழியிலேயே நயவஞ்சகமாக சுட்டுக்கொல்லப்பட, அந்தத் தகவல் பிரபாகரனுக்குத் தெரியாமல் திறமையாக மறைக்கப்பட்டிருக்கிறது. அதே போன்ற முயற்சியில் பிரபாகரன் தனது குடும்பத்தாருடன் அடுத்து ஈடுபட்டபோது அவருக்கும் அதே விதி எழுதப்பட்டிருக்கிறது!

நந்திக்கடல் பகுதி வழியே மணலாற்றைக் கடந்து வலி ஓயா காட்டுப்பகுதிக்குச் செல்வது, அங்கிருந்து தகவல் அனுப்பி வரவழைத்து, மூன்றாம் தரப்பு (அநேகமாக நார்வே) யாரிடமேனும் சரணடைவது, மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளுக்கும் போர் நிறுத்தத்துக்கும் ஏற்பாடு செய்வது என்னும் திட்டமுடன் பிரபாகரன் தம் குடும்பத்தாருடனும் உடனிருந்த தளபதிகளுடனும் பதிமூன்று படகுகளில் புறப்பட்டிருக்கிறார். அப்படிப் புறப்பட்டு வந்தவரைக் கூப்பிட்டு உட்காரவைத்துப் பேசுவதுபோல் பாவனை காட்டி, தலையில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இது என்றைக்கு நடந்தது என்பது என்றைக்கும் தெரியப்போவதில்லை.

அறிவிப்பு வந்தது மே பதினெட்டு, திங்களன்று. பிரபாகரன் இலங்கை ராணுவத்திடமே நேரடியாகச் சரணடைய முடிவு செய்து புறப்பட்டதாகவும், பேச்சுவார்த்தை நடத்துவது போல பாவனை காட்டி இறுதியில் மொத்தமாகக் கொன்றுவிட்டதாகவும் சொல்பவர்கள், இதற்கு ஆதாரமாக இலங்கை ராணுவம் வெளியிட்டிருக்கும் பிரபாகரனின் மகனது இரண்டு புகைப்படங்களை முன்வைக்கிறார்கள். சார்ல்ஸ் ஆண்டனி சமீப நாள்களில் எம்மாதிரியான தோற்றத்தில் இருந்தார் என்று எடுத்துச் சொல்ல யாரும் கிடையாது. அவரது புகைப்படங்கள் என்று நமக்குக் கிடைக்கும் அனைத்தும் மிகப் பழைய படங்களே. இலங்கை பாதுகாப்புத்துறையின் இணையத்தளத்தில் ஒரு மாதம் முன்னர் வெளியிடப்பட்ட பிரபாகரனின் குடும்ப போட்டோ ஆல்பத்தில் காணப்படும் ஆண்டனியின் படங்களும் மிகப் பழையவை. அவர் குண்டான நபர் என்பதைத்தவிர வேறு அடையாளம் ஏதும் பார்த்ததும் கண்டுபிடிக்கக்கூடிய நிலையில் இல்லை.

இந்நிலையில் பதினெட்டாம் தேதி திங்களன்று அதிகாலை சார்ல்ஸ் ஆண்டனி இறந்து கிடக்கும் படத்தையும் அவர் உயிருடன் இருக்கும்போது எடுக்கப்பட்ட படம் என்ற ஒன்றையும் இலங்கை ராணுவம் வெளியிட, அதில் அதிர்ச்சிதரக்கூடிய சில தடயங்கள் இருந்தன. முதலாவது, சார்ல்ஸ் ஆண்டனி சந்தோஷமாகச் சிரிக்கும் க்ளோசப் படத்தில் அவர் அணிந்திருக்கும் சட்டை. அதே நீல நிறச் சட்டை அணிந்த நிலையில்தான் அவர் கொல்லப்பட்டிருக்கும் படமும் வெளியிடப்பட்டிருந்தது. மேலே படிந்திருக்கும் ஏரிப்படுகை மணல், அதன் ஈரம் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டுக் கூர்ந்து பார்த்தால் இரண்டும் ஒரே சட்டை, ஒரே நபர் என்பது உறுதியாகும்.

அங்க அடையாளங்களும் மிகத் துல்லியமாக ஒத்துப்போயின. சிரிக்கும் புகைப்படம் எடுக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள்ளாகவே இறந்து கிடக்கும் புகைப்படம் எப்படி சாத்தியம்? இவை வேறு வேறு தினங்களில் எடுக்கப்பட்டிருக்கலாம், ஒரே சட்டையாக அமைந்தது தற்செயல் என்று வாதிடலாம். ஆனால் சார்ல்ஸ் ஆண்டனியின் உடல் முதல் முதலில் காட்டப்பட்டபோது அவரருகே அப்போதுதான் பீறிட்ட ரத்தம் கொப்பளித்ததைத் தொலைக்காட்சியில் பார்க்க முடிந்தது. வீடியோ கேமராவைத் தயாராக வைத்துக்கொண்டு சுட்டுக்கொன்றால் ஒழிய பொங்கும் ரத்தம் படமாவது சாத்தியமில்லை. எனவே பேச்சுவார்த்தைக்கு வரவழைத்து, புகைப்படமெல்லாம் எடுத்துக்கொண்டு, அதன்பின் சுட்டுக்கொன்றுவிட்டு அதை வீடியோவில் பதிவு செய்து ஒளிபரப்பியிருக்கிறார்கள். ஈழத் தமிழர்களால் இந்த வாதத்தை ஜீரணிக்கவே முடியவில்லை.

தனது இறுதி மூச்சுவரை இலங்கை அரசுக்கும் ராணுவத்துக்கும் எதிராக யுத்தம் நடத்திவந்த பிரபாகரன், கனவிலும் அவர்களிடம் சரணடைய நினைத்திருக்க வாய்ப்பில்லை அல்லவா? ‘வேண்டுமானால் மூன்றாம் தரப்பிடம் சரணடைய ஒப்புக்கொண்டு அவர் புறப்பட்டிருக்கலாம். பேச்சுவார்த்தை நடத்துவதுபோல் பாவனை காட்டி, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு தலையில் சுட்டுக்கொன்றிருக்கலாம். பிறகு உடல்கள் இலங்கை ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கலாம்’ என்று பெரும்பாலானவர்கள் சொன்னார்கள். ஐநா, நார்வே குழுவினர், இந்திய உளவுத்துறை என்று அத்தனை பேரையும் சந்தேகப்பட்டு ஈழத்தமிழர்கள் புலம்பிய காட்சி மிகவும் உருக்கமாக இருந்தது. அது ஒரு கையறு நிலை. தலைவன் இனி இல்லையே என்கிற ஏக்கம் கலந்த கோபம். இயலாமையின் அப்பட்டமான வெளிப்பாடு.

எப்படியானாலும் இயக்கத்துக்குள்ளேயே யாரோ ஒருவர் காட்டிக்கொடுக்காமல் பிரபாகரன் குடும்பத்தாருடன் சுட்டுக்கொல்லப்பட வாய்ப்பே இல்லை. இந்நிலையில் அவர் தப்பிக்கும்போது சுடப்பட்டாரா, தண்ணீரில் விழுந்து சுடப்பட்டாரா, தற்கொலை செய்துகொண்டு இறந்தாரா அல்லது இறக்கவே இல்லையா என்பது போன்ற வாதங்கள் அர்த்தமற்றுப் போய்விடுகின்றன.

காட்டிக்கொடுத்தது யார், 84ம் ஆண்டிலிருந்து இயக்கத்தில் இருந்தாலும் இந்த 2009 மே வரை ஒருவார்த்தை கூடப் பேசாதிருந்துவிட்டு, பிரபாகரன் இறந்த பிறகு நாளொரு அறிக்கை விடுத்து, தன் அறிக்கையைத் தானே மறுத்து, பிரபாகரன் இறந்ததை அறிவித்த செல்வராஜா பத்மநாதனா, வேறு யாராவதா என்பதெல்லாம் இனி மெதுவாக வெளிவரும். பிரபாகரன் இப்போது இல்லை. இனி இல்லை. இதுதான். இது ஒன்றுதான் இப்போதைய, எப்போதைக்குமான உண்மை. 1976ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை நீடித்த அவரது விடுதலைப் போராட்டம், மிகப்பெரிய தோல்வியுடன் ஒரு முடிவை எட்டியிருக்கிறது என்னும் உண்மையை, விழுங்கித்தான் தீரவேண்டும். இனி விடுதலைப் புலிகள் என்னும் இயக்கம் பழைய வீரியத்துடன் செயல்படும் வாய்ப்பு அநேகமாக இல்லை.

யுத்தத்தில் சிலர் தப்பியிருக்கிறார்கள். அது உண்மை. ஆனால் கட்டுக்கோப்புடன் வழி நடத்தக்கூடிய அடுத்த தலைமை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியே வழி நடத்த யாராவது வந்தாலும் உலகு பரவிய ஈழத் தமிழர்கள் இனி ஆயுதப் போராட்டத்துக்குத் தோள் கொடுப்பார்கள் என்று தோன்றவில்லை. விழுந்த அடிகள் அதிகம். இனி அவர்களுக்கு வேண்டியது அமைதி மட்டும்தான்.

பா. ராகவன்

 

மேதகு பிரபாகரன் ஆயுதமேந்தியது ஏன்?
ஏன் நீங்கள் எப்போதும் பெரிதாக சிந்திக்க வேண்டும்?

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *