பிரசாந்த் பூஷன் vs உச்சநீதிமன்றம் | என்ன பிரச்சனை?

உச்சநீதிமன்றத்தின் மிக மூத்த வழங்கறிஞரான பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி மற்றும் கடந்த காலங்களில் பணியாற்றிய 4 தலைமை நீதிபதிகளின் செயல்பாடுகள் குறித்து ட்விட்டரில் சில கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். இதற்காக மன்னிப்பு கேட்கபோவது இல்லை எனவும் கூறி வருகிறார்.

 

கடந்த ஜூன் மாதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, ஒரு விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு படத்தை டுவிட்டரில் வெளியிட்டார் பூஷன். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நான்கு பேரின் பங்களிப்பு பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பிரசாந்த் பூஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவு செய்திருந்தார். இதற்காக இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு தண்டனைக்காக காத்திருக்கிறது. தனது செயல்பாட்டுக்காக மன்னிப்பு கேட்கும் பட்சத்தில் இவர்மீதான வழக்கை விலக்கிக்கொள்ள நீதிமன்றம் தயாராக இருந்த போதும் இவர் மன்னிப்பு கேட்க மறுத்து வருகிறார். 

முக்கியமான இரண்டு கருத்துக்கள்

 

பிரசாந்த் பூஷன் பல்வேறு பொதுநல வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி நன்மையை பெற்றுத்தருகிறவர். இன்னும் நீதித்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்புகள் ஏராளம். ஆகவே இவரது கருத்துக்கள் எப்போதும் முக்கியத்துவம் பெறுகின்றன. இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இரண்டு டுவீட்டுக்கள் காரணமாக அமைந்தன.

“CJI rides a 50 Lakh motorcycle belonging to a BJP leader at Raj Bhavan Nagpur, without a mask or helmet, at a time when he keeps the SC in Lockdown mode denying citizens their fundamental right to access Justice!”

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, பாஜக தலைவர் ஒருவருக்கு சொந்தமான 50 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை ஓட்டுகிறார். சாதாரண பொதுமக்களுக்கு நீதி கிடைப்பதை தடை செய்திடும் விதமாக நீதிமன்றம் மூடப்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையில் மாஸ்க்,ஹெல்மெட் எதையும் அணியாமல் பயணிக்கிறார்

“When historians in future look back at the last 6 years to see how democracy has been destroyed in India even without a formal Emergency, they will particularly mark the role of the Supreme Court in this destruction, & more particularly the role of the last 4 CJIs.””

 

எதிர்காலத்தில் வரலாற்றாசிரியர்கள் கடந்த 6 ஆண்டுகளில் ஒரு முறையான அவசரநிலை இல்லாமல் கூட இந்தியாவில் ஜனநாயகம் எவ்வாறு அழிக்கப்பட்டுவிட்டது என்பதைப் பார்க்கும்போது, அவர்கள் குறிப்பாக இந்த அழிவில் உச்சநீதிமன்றத்தின் பங்கைக் குறிப்பார்கள், மேலும் குறிப்பாக, கடந்த 4 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளின் பங்கைப்பற்றி குறிப்பார்கள். இந்த இரண்டு விசயங்கள் தான் தற்போது பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடருவதற்கு காரணமாக அமைந்து இருக்கிறது.

பிரசாந்த் பூஷன் சுமத்திய குற்றம் உண்மையா?

இருக்கிறது அல்லது இல்லை என ஊர்ஜிதமாக சொல்லமுடியாத விசயம் இவை. கடந்த காலங்களில் பணியாற்றிய தலைமை நீதிபதிகளின் செயல்பாடு கேள்விக்கு உட்பட்டது தான். அதுபோலவே நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட வேண்டியதும் நியாயமே என்றாலும் கூட பிரசாந்த் பூஷன் அவர்கள் தெரிவித்த சில கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவையாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

முதல் பதிவில் அவர் குறிப்பிட்டது போல தற்போதைய தலைமை நீதிபதி இருசக்கர வாகனத்தை ஓட்டவில்லை எனவும் நின்று கொண்டிருந்த வாகனத்தின் மீது அமர்ந்து புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டார் என்பதே உண்மை என சிலர் வாதிடுகிறார்கள். அதேபோல உச்சநீதிமன்றம் செய்லபடாமல் இருக்கிறது என்ற வாதத்தையும் எதிர்க்கவே செய்கிறார்கள். மார்ச் ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு ஆகஸ்ட் 4 வரையில் 879 அமர்வுகளின் மூலம் 12,748 வழக்குகளை விசாரித்ததையும், 686 ரிட் பெட்டிஷன்களைக் கையில் எடுத்தது என்பதையும் குறிப்பிட்டு சொல்கிறவர்கள் பிரசாந்த் பூஷன் அவர்கள் குறிப்பிட்ட இந்த விசயமும் தவறு என கூறுகிறார்கள். 

உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறது?

 

உச்சநீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்து பிரசாந்த் பூஷன் குற்றம் செய்திருக்கிறார் என்பதை கூறிவிட்டது. தற்போது தண்டனைக்காக வழக்கை ஒத்திவைத்து இருக்கிறது. இந்த வழக்கில் ஆஜரான இவரது வழக்கறிஞரும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரும் கூட பிரசாந்த் பூஷன் அவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டாம் என நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளனர். இதற்கு மிக முக்கிய காரணம் அவர் நீதித்துறைக்கு ஆற்றியுள்ள பங்களிப்பு தான். ஆனால் கடைசி வரை மன்னிப்பு கேட்க பிரசாந்த் பூஷன் மறுத்து வருவதனால் தண்டனை கொடுக்கும் என்றே தெரிகிறது.

இவ்வழக்கை விசாரித்துவரும் நீதிபதி – இந்த வழக்கில் பிரசாந்த் பூஷன் அளித்துள்ள பதில் சற்றும் பொருந்தாதது. பிரசாந்த் பூஷன் போன்ற ஒரு மூத்த வழக்கறிஞரிடமிருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை. அவரது பதிலை படித்து பார்த்தால் வேதனையாக இருக்கிறது. அவர் மட்டுமல்ல பெரும்பாலானோர் அப்படித்தான் ஆகிவிட்டார்கள். நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக ஊடகங்களை வழக்கறிஞர்கள் சந்தித்து பேசுவது சரியான முன்னுதாரணம் கிடையாது. நீதிமன்றம் போன்ற ஒரு அலுவலகத்தில் இருப்பவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் வேறுபாடு இருக்கிறது. எல்லாவற்றுக்கும் ஊடகத்தை சந்தித்துக் கொண்டு இருந்தால், நீங்கள் அதிகமாக அடையாளப்படுத்தப்பட்டுவிடுவீர்களே தவிர உங்களிடம் உரிய காரணம் எதுவும் இருக்காது.

30 ஆண்டுகளாக சட்டத் துறையில் பணியாற்ற கூடிய பிரசாந்த் பூஷன் போன்ற ஒருவர் ஒரு வார்த்தையை சொல்லும் போது அதை மக்கள் நம்ப தொடங்குவார்கள். அவர்கள் எது சொன்னாலும் சரி தான் என்று நினைப்பார்கள். வேறு யாராவது இப்படி பேசி இருந்தால் அதை அப்படியே விட்டு விடலாம். ஆனால் பிரசாந்த் பூஷன் போன்ற ஒருவர் சொல்லும்போது அது சமூகத்தில் விளைவுகளை ஏற்படுத்திவிடும். ஆக்கபூர்வமான விமர்சனம், பிரச்சினை கிடையாது. ஆனால் அது நீதிமன்றம் என்ற இந்த அமைப்பின் நன்மைக்காக இருக்க வேண்டும். நீங்களும் இந்த அமைப்பில் ஒரு அங்கம். நீங்களே இந்த அமைப்பை அழித்து விட கூடாது. நாம் ஒருவருக்கொருவர் மரியாதை வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். நாம் ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ள நினைத்தால் யார் தான் இந்த அமைப்பின் மீது நம்பிக்கை கொள்வார்கள்?

நீதிமன்றம் எதற்காக, என்ன செய்கிறது என்பதை பொறுமையுடன் பாருங்கள். அதைவிடுத்து நீதிமன்ற அமைப்பின் மீது தாக்குதலை தொடுக்காதீர்கள். ஏனெனில், நீதிபதிகள், மீடியாக்களுக்கு சென்று தங்கள் தரப்பு நியாயத்தை பேச முடியாது என்பதை உணருங்கள். இவ்வாறு நீதிபதி அருண் மிஸ்ரா தெரிவித்தார். சுமார் 4 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்ற நிலையில் இறுதிவரை மன்னிப்பு கேட்பது பற்றி பிரசாந்த் பூஷன் தரப்பு எந்த ஒரு உத்தரவாதமும், அளிக்கவில்லை. இதனிடையே தண்டனை விவரத்தை மீண்டும் நீதிபதி அருண் மிஸ்ரா தள்ளி வைத்துள்ளார்.

 

உங்களுடைய கருத்தை கமென்டில் பதிவிடுங்கள்



Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *