அகில இந்திய இடஒதுக்கீடு என்றால் என்ன? OBC பிரிவுக்கு என்ன பிரச்சனை முழு விவரம்? #Video

மத்திய அரசிடம் ஒரு பிறப்படுத்தப்பட்ட ஜாதிகளின் பட்டியல் இருக்கிறது. ஒவ்வொரு மாநில அரசிடமும் ஒரு பட்டியல் இருக்கிறது. எந்தப் பட்டியலின்படி இட ஒதுக்கீட்டை அமல் செய்வது என்ற குழப்பம் இருப்பதால், இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லையென்கிறது மத்திய அரசு.

மருத்துவக்கல்வி இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான [ஓபிசி] இடஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும் எனக்கூறி பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மாநிலங்களில் கடைபிடிக்கப்படும் இடஒதுக்கீட்டிற்கும் இதற்கும் சில வேறுபாடுகள் இருக்கின்றன. அதனை ஒவ்வொருவரும் புரிந்துகொள்வது அவசியமான ஒன்று. 

அகில இந்திய பங்கீடு

தற்போது பேசப்படும் இடஒதுக்கீடு பிரச்சனை என்பது “அகில இந்திய பங்கீட்டிற்க்கான இடஒதுக்கீடு ” என்பதனை முதலில் தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். மாணவர்கள் மருத்துவக்கல்விக்கு விண்ணப்பிக்கும் போது இரண்டு விதமான பங்கீடுகள் அதில் இருக்கும். ஒன்று மாநில பங்கீடு, மற்றொன்று அகில இந்திய பங்கீடு. தற்போதைய பிரச்சனை அகில இந்திய பங்கீட்டில் இருக்கும் மருத்துவ இடங்களுக்கு தான் வருகிறது. மாநில அரசுகள் நிர்வகிக்கும் மருத்துவ கல்லூரிகளில் இருந்து 15% இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு கொடுக்க வேண்டியது கட்டாயம். உதாரணத்திற்கு, மாநில அரசு நிர்வகிக்கும் மருத்துவ கல்லூரியில் 100 இடங்கள் இருந்தால் அதில் இருந்து 15 இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு கொடுக்க வேண்டியது கட்டாயம். ஒருவேளை ஒரு மாநில அரசு அப்படி 15% இடங்களை கொடுக்க விரும்பவில்லை எனில் மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு கொடுக்கக்கூடிய நிதியை பெற முடியாது. அதேபோல அந்த குறிப்பிட்ட மாநிலத்தை சேர்ந்த மாணவர்களால் அகில இந்திய பங்கீட்டில் உள்ள இடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது. இந்தியாவில் ஆந்திர மாநிலம் மட்டும் இப்படி 15% இடங்களை கொடுக்காமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

அகில இந்திய பங்கீட்டில் இடஒதுக்கீடு

இப்படி மாநில அரசுகளால் கொடுக்கப்படும் 15% இடங்களுக்கும் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. அதன்படி, தற்போது பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நிலை இருந்தாலும் கூட மத்திய அரசு அதனை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. மத்திய அரசு நிர்வகிக்கும் ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவக்கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கபடுகிறது. ஆனால் மாநில அரசுகள் வழங்கிய 15% இடங்களுக்குத்தான் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. 

மத்திய அரசு ஏன் இட ஒதுக்கீடு வழங்கவில்லை

மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு ஏன் இடஒதுக்கீடு வழங்கவில்லை என்பதற்கு சில காரணங்களை வைத்திருக்கிறது. அதன்படி, மத்திய அரசிடம் ஒரு பிறப்படுத்தப்பட்ட ஜாதிகளின் பட்டியல் இருக்கிறது. ஒவ்வொரு மாநில அரசிடமும் ஒரு பட்டியல் இருக்கிறது. எந்தப் பட்டியலின்படி இட ஒதுக்கீட்டை அமல் செய்வது என்ற குழப்பம் இருப்பதால், இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லையென்கிறது மத்திய அரசு.

கூடுதலாக உச்சநீதிமன்றத்தில் கிடைத்த உத்தரவின் அடிப்படையில் தான் தாங்கள் பின்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை எனவும் இதுதொடர்பாக சென்னைஉயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கில் அகில இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்து இருக்கிறது. கவுன்சில் இப்படி சொல்வதற்கான காரணத்தை பார்க்கும் பார்க்கும் போது “இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆனால், பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு ஒரு enabling சட்டத்தின் மூலம், அதாவது விரும்பினால் அளிக்கலாம் என்ற சட்ட வசதியின் மூலம் அளிக்கப்படுகிறது. ஆகவே, இதனை இப்போது நாங்கள் விசாரணைக்கு ஏற்கப்போவதில்லை எனச் சொல்லிவிட்டார்கள்” இதைத்தான் தற்போது மத்திய அரசு பயன்படுத்திக்கொள்கிறது. உச்சநீதிமன்றம் சொன்னால் நாங்கள் இடஒதுக்கீடு கொடுக்கிறோம் என்ற ரீதியில் பேசிவருகிறார்கள். 

இடஒதுக்கீடு அவசியமான ஒன்று

தற்போதைய ஆளும் மத்திய அரசை சேர்ந்தவர்கள் இடஒதுக்கீட்டிற்கு எதிரான மன நிலையில் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தான் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டையும் கொண்டுவந்தார்கள் என்பதனை இங்கே நினைவில் கொண்டிருக்க வேண்டியது அவசியமான ஒன்று. தகுதியின் அடிப்படையில் தான் மருத்துவ இடங்கள் கொடுக்கப்பட வேண்டும் என வலியுத்துகிறவர்களிடம் இடஒதுக்கீடும் ஒரு தகுதிதான் தகுதி தான் என கூறுகிறார்கள் இடஒதுக்கீட்டை வலியுத்துகிறவர்கள். 






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *