7 நாட்களில் 1200 கிமீ தொலைவை சைக்கிளில் கடந்த 15 வயதான ஜோதிகுமாரி, ஏன் ?
15 வயதான ஜோதிகுமாரி தனது காயமடைந்த தந்தையை சைக்கிளில் பின்பக்கத்தில் அமரவைத்துக்கொண்டு 1200 கிலோமீட்டர் தொலைவை 7 நாட்களில் கடந்து சொந்த ஊருக்கு திரும்பியிருக்கிறார் . இந்த நிகழ்வு இந்தியர்களின் உறுதியான சகிப்புத்தன்மையையும் அன்பையும் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பளிக்கிறது .
இப்படி ஜோதிகுமாரிக்கு புகழாரம் சூட்டியிருப்பது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவங்கா தான் . அவர் தனது ட்விட்டர் கணக்கில் இப்படி டிவீட் செய்தவுடன் உலகம் முழுமைக்கும் ஜோதிகுமாரி கவனம் பெற்றார் .
பீகாரை சேர்ந்த மோகன் பாசுவான் ஹரியானாவில் இருக்கும் குருகிராம் பகுதியில் ஆட்டோ ஓட்டிவந்தார் . ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பாக விபத்தில் சிக்கியதனால் ஆட்டோ ஓட்ட முடியவில்லை . இதனால் ஆட்டோ வாடகை கொடுக்கவும் இயலவில்லை . ஆகவே அதன் ஓனர் ஆட்டோவை பறிமுதல் செய்துவிட்டார் .
இதனால் சொந்த ஊருக்கு திரும்ப அவரும் அவரது மகள் ஜோதிகுமாரியும் முடிவெடுத்தனர் . ஆனால் ஊரடங்கினால் ரயில் பஸ் எதுவும் கிடைக்கவில்லை . ஆகவே சொந்த ஊர் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது . இதனையடுத்து சைக்கிளில் செல்லலாம் என யோசனை சொன்னார் ஜோதிகுமாரி .
மனதில் உறுதியிருந்தால் போதும் இமயத்தையும் ஏறிடலாம்
தனது அப்பாவை சைக்கிளின் பின்பக்கமாக அமரவைத்துக்கொண்டு 1200 கிலோமீட்டர் தூரத்தை 7 நாட்களில் கடந்து சொந்தவூரையும் அடைந்துவிட்டார் . இதனையடுத்து அவரது சாதனைப்பயணம் பெரிய அளவில் பேசப்பட்டது . அமெரிக்க அதிபரின் மகளும் இந்த லிஸ்டில் இணையவே பெரிய கவனம் பெற்றார் ஜோதிகுமாரி .
இந்திய சைக்கிள் பெடரேஷன் இவருக்கு பயிற்சியாளர் ஆவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அதற்கு அவர் சில பயிற்சிகளுக்கு உட்பட்டு அதில் தேர்ச்சி அடைந்தால் போதுமானது எனவும் தெரிவித்து இருந்தது . ஆனால் இந்த வாய்ப்பினை ஜோதிகுமாரி நிராகரித்துவிட்டார் . நின்று போன தனது பள்ளிப்படிப்பை முடிக்க நினைப்பதாக அவர் தெரிவித்துள்ளார் .
15 வயது சிறுமி தனது தந்தையை பின்னால் அமரவைத்துக்கொண்டு 7 நாட்களில் 1200 கிமீ பயணித்துள்ளார் என்றால் அதனை சாதாரண விசயமாக கருதி நகர்ந்துசெல்ல முடியாது . அவருக்குள் ஏதோ ஒரு சக்தி ஒளிந்திருப்பதையே இந்தப்பயணம் உணர்த்துகிறது .
தொடர்ச்சியான பயிற்சிகள் , சத்தான உணவுகள் இவற்றைக்கொண்டு பல பிள்ளைகள் பயிற்சி செய்து அடைகின்ற உடல்திறனையும் மன திறனையும் ஒரு ஏழை சிறுமி பெற்றிருப்பது வியப்பான விசயமே . இவர்களைபோன்றவர்களை கண்டெடுத்தால் இந்தியா பல்வேறு துறைகளில் சாதிக்கும் வாய்ப்பினைப்பெறும் என்பது மட்டும் நிதர்சனம் .
ஒருபுறம் ஜோதிகுமாரியை கொண்டாடும் அதேவேளையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் அவதியையும் இந்தப்பயணம் உணர்த்தவே செய்கின்றது .
பாமரன் கருத்து