தனியார்மயமாக்கல் நல்லதா கெட்டதா?

அனைத்தையும் அரசே நிர்வகிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் பொதுமக்களுக்கு நேரடியாக சம்பந்தப்படும் நிறுவனங்களையும் இயற்கை வளங்களோடு தொடர்புடைய நிறுவனங்களையும் அரசே நடத்திடுவது சிறந்தது.
பயமே முதல் எதிரி - விரட்டி விடுங்கள்

தனியார்மயமாக்கல் என்பது அரசு அதுவரை நிர்வகித்து வந்த ஒரு துறையை முற்றிலுமாக தனியாருக்கு விற்பது தான் தனியார்மயமாக்கல் என அழைக்கப்படுகிறது. இன்று இந்திய அளவில் பேசப்படும் ஒரு தலைப்பாக “தனியார்மயமாக்கல்” மாறி இருக்கிறது. இந்தப்பதிவில் தற்போதைய அரசின் செயல்பாடுகளை மையப்படுத்தி பேசுவதைக்காட்டிலும் தனியார்மயமாக்கல் நல்லதா கெட்டதா என்பது பற்றிய விழிப்புணர்வை சாதாரண பாமர மக்களுக்கு எடுத்துரைக்க இந்தக்கட்டுரையில் முயன்று இருக்கிறேன். 

இந்தக்கட்டுரையை முழுவதுமாக படியுங்கள் பின்னர் பிறருக்கும் பகிருங்கள்.

நஷ்டமடையும் நிறுவனங்கள்

ஒரு நிறுவனத்தை அரசு தனியாருக்கு விற்கப்போகிறது என்றால் “நிறுவனத்தால் நஷ்டம் ஏற்படுகிறது” என்ற காரணத்தைத்தான் முதன்மையாக முன்வைக்கும். தொடர்ச்சியாக அரசுக்கு நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க இத்தகைய நடவெடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். அரசு ஒரு நிறுவனத்தை ஏற்று லாபகரமானதாக நடத்திட முடியாதா என கேட்டால் நிச்சயமாக முடியும் என்றபதிலைத்தான் நான் கூறுவேன்.ஆனால் அரசுக்கென பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கின்ற சூழ்நிலையில் அதனை செய்வது சற்று சவாலான காரியமே.

செயல்திறன் அதிகமாகும்

ஒரு நிறுவனத்தை அரசு நடத்துவதற்கும் தனியார் நடத்துவதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருப்பது இயல்பான விசயமே. இதற்கு மிகமுக்கியகாரணம் பணியாளர்களின் நடத்தை கூட காரணமாக இருக்கலாம். உதாரணத்திற்கு, ஒரு தனியார் நிறுவனத்தில் ஒரு பணியாளர் நன்றாக வேலை செய்திடும்வரை வைத்துக்கொண்டு பின்னர் அவரை வெளியே அனுப்பிவிட முடியும். ஆனால் ஒரு அரசுத்துறை நிறுவனத்தில் அப்படி செய்திட இயலாது. அதேபோல ஒருவர் தவறு செய்தால் தனியார் நிறுவனத்தில் பதவிநீக்கம் செய்துவிட முடியும், ஆனால் அரசு நிறுவனத்தில் அப்படியெல்லாம் உடனே செய்துவிட முடியாது. 

 

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் ஒரு துறையை தனியார் அமைப்பு நிர்வகிக்கும் போது செயல்திறன் அதிகமாகிறது என்பது தனியார்மயத்திற்கு ஆதரவாக வைக்கப்படுகிற காரணங்களில் ஒன்று. 

தகுதிக்கேற்ப முன்னேற்றம்

தற்போது அரசு ஏற்று நடத்தும் நிறுவனங்களில் தகுதி அடிப்படையில் அல்லாமல் பதவி மூப்பின் அடிப்படையில் தான் உயர்பதவிகள் வழங்கப்படுகின்றன. ஆனால் அதே நிறுவனத்தை தனியார் ஏற்று நடத்தும் போது எத்தகைய கட்டுப்பாடும் இல்லை. அவர்கள் திறமைக்கு ஏற்றவாறு பதவி உயர்வை வழங்கிட முடியும். இதன்காரணமாக அந்த நிறுவனம் சிறப்பாக செயல்பட வைக்க முடியும். 

அரசுக்கு சமூக பொறுப்பு உள்ளது

ஒரு துறையை அரசாங்கம் நடத்துகிறது என்றால் அதற்கென சமூகப்பொறுப்பும் இருக்கிறது. ஆகவே அனைத்து நேரங்களிலும் லாபத்தை நோக்கியே ஒரு நிறுவனத்தை கொண்டு சேர்ப்பதில் அரசுக்கு சில சிக்கல்கள் இருக்கின்றன. வயதானவர்களை வேலையை விட்டு நீக்க முடியாது, இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என பல பல விதிகள் அரசு ஒரு நிர்வாகத்தை நடத்தும் போது இருக்கிறது. ஆனால் இதில் பெரும்பான்மையான விசயங்களை தனியார் நிறுவனம் பின்பற்றிட வேண்டிய அவசியமில்லை. ஆகவே லாபத்தை நோக்கி அவர்களால் எளிதாக செல்ல முடியும்.

தனியார்மயமாக்கல் நல்லதா கெட்டதா?

எந்தத்துறையை அரசு தனியாரிடம் ஒப்படைக்கபோகிறது என்பதை பொறுத்தது என்றே சொல்ல இயலும். ஏற்கனவே சொன்னதுபோல அரசு நடத்தும் சில துறைகளில் நிச்சயமாக நஷ்டம் ஏற்படத்தான் செய்யும்.  அதற்கான காரணங்கள், அரசு ஒரு நிறுவனத்தை ஏற்று நடத்திடும் போது சட்டதிட்டங்களை முறையாக கடைபிடிக்க வேண்டி வரும், பணியாளர்களை சட்டப்படி நடத்திட வேண்டிய கட்டாயம் இருக்கும். அனைத்திற்கும் மேலாக அரசு நடத்திடும் நிறுவனம் மக்களின் நலனில் அக்கறை கொண்டிருக்க வேண்டிய தேவை ஏற்படும். 

 

உதாரணத்திற்கு, தமிழக போக்குவரத்துத்துறையை எடுத்துக்கொள்வோம். ஆண்டுக்கு ஆண்டு அந்தத்துறை நஷ்டத்தில் இயங்குகிறது என சொல்லலாம். அதற்கு முக்கியக்காரணம் ஓரிருவர் சென்று வரக்கூடிய ஊர்களுக்கு கூட பேருந்துகளை விட வேண்டிய தேவை, கட்டணத்தை கண்டபடி உயர்த்த முடியாத கட்டாயம். இந்த இரண்டும் அரசு மக்கள் நலனில் கொண்டிருக்கும் அக்கறை சம்பந்தப்பட்டது. ஆகவே இந்த காரணங்களால் ஏற்படும் இழப்புகளை அரசு நஷ்டமென கருதாது, கருதக்கூடாது. ஆனால் நிர்வாகக்காரணங்களால் இழப்பு ஏற்படுவதை இதில் சேர்க்க முடியாது. 

 

இப்படி பொதுமக்களின் நேரடி விசயத்தில் பங்கேற்கும் நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பது என்பது நிச்சயமாக தவறானது. இதற்கு அப்பாற்பட்ட நிறுவனங்களை வேண்டுமானால் தனியாரிடம் ஒப்படைக்கலாம். உதாரணத்திற்கு, ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியாரிடம் விற்க நடவெடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா பிரச்சனையின் போது வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்டுக்கொண்டுவர அதே விமானங்கள் தான் பயன்பட்டன. அதுவும் கட்டணம் ஏதும் இல்லாமல். இதுவே தனியாரிடம் விற்று இருந்தால் அவர்களை நாடவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும். 

 

தனியார் எப்போதும் லாப நோக்கத்தோடு தான் செயல்படுவார்கள், ஆனால் அரசு பொது சமூக நோக்கத்துடன் செயல்படும். ஆகவே அரசு நிறுவனங்களை அரசு நடத்துவது தான் சரியானதாக இருக்கும். 



Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *