புவிசார் குறியீடு என்றால் என்ன? முழு தகவல்களும் இங்கே!

புவிசார் குறியீடு (Geographical indication, GI) என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கப்படும் குறியீடாகும். குறிப்பிட்ட உற்பத்தி பொருள் முறையாக பாரம்பரிய ரீதியில் தயாரிக்கப்பட்டதற்கும், தரத்தை காப்பதற்குமான சான்றாக இதை எடுத்துக்கொள்ளலாம்

புவிசார் குறியீடு

அண்மையில் கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது என்ற செய்தியைக்கேட்டவுடன் பலருக்கு புவிசார் குறியீடு என்றால் என்ன அது எந்த வகையில் உதவும் என்ற கேள்விகளை கேட்டனர். புவிசார் குறியீடு குறித்த ஒரு புரிதலை ஏற்படுத்துவதற்காக பல்வேறு தகவல்களை தொகுத்து ஒரே கட்டுரையாக இங்கே கொடுத்திருக்கிறேன். படியுங்கள், படித்தபின்பு உங்களது நண்பர்களுக்கும் பகிருங்கள். 

புவிசார் குறியீடு என்றால் என்ன?

புவிசார் குறியீடு

அடிப்படையில் ஒவ்வொரு பகுதியில் இருக்கும் நிலத்தின் பண்புகளுக்கு ஏற்பவே வேளாண் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டன. அதுபோலவே பாரம்பரிய முறைகளை பின்பற்றி சில பொருள்கள் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தயாரிக்கப்பட்டன. ஆனால் நாளடைவில் அந்த பொருள்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரிக்க துவங்கிய பிறகு பிற இடங்களில் விளையும் பொருள்களையும் பிற இடங்களில் தயாரிக்கும் பொருள்களையும் பொய்யாக பெயரிட்டு மக்களிடம் விற்பனை செய்யும் போக்கு அதிகரித்தது. இதனை தடுக்க கொண்டுவரப்பட்டதே புவிசார் குறியீடு. 

புவிசார் குறியீடு (Geographical indication, GI) என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கப்படும் குறியீடாகும். குறிப்பிட்ட உற்பத்தி பொருள் முறையாக பாரம்பரிய ரீதியில் தயாரிக்கப்பட்டதற்கும், தரத்தை காப்பதற்குமான சான்றாக இதை எடுத்துக்கொள்ளலாம்

புவிசார் குறியீடு ஏன் தேவை?

கோவில்பட்டி கடலைமிட்டாய் புவிசார் குறியீடு

காஞ்சிபுரம் பட்டு என்றால் பாரம்பரியமானது, நன்றாக இருக்கும் என்பது உலகம் முழுமைக்கும் நம்பப்படுகிற விசயம். ஆனால் காஞ்சிபுரம் தவிர்த்த பிற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டையும் “காஞ்சிபுரம் பட்டு” என்று சொல்லி விற்பனை செய்தால் யாரால் கண்டுபிடிக்க முடியும்? ஏன் பொய் சொல்லி விற்கிறீர்கள் என காஞ்சிபுரம் பட்டு உற்பத்தியாளர்களால் எப்படி கேட்க முடியும்? அதற்காக கொண்டுவரப்பட்டது தான் இந்தியாவில் புவிசார் குறியீடுகள் சட்டம் (பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம்). 

 

இந்த சட்டம் 1999 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு 2003 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தின் கீழ் ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுவிட்டால் வேறு பகுதியில் இருப்பவர்களால் அந்தப்பெயரை பயன்படுத்தக்கூடாது. உதாரணத்திற்கு, காஞ்சிபுரத்திற்கு வெளியே உற்பத்தி செய்யப்படுகிற பட்டுக்கு காஞ்சிபுரம் பட்டு என முத்திரை குத்தி விற்க முடியாது. அப்படி விற்பனை செய்தால் அது தண்டனைக்கு உரிய குற்றமாக கருதப்படும். 

 

புவிசார் குறியீட்டின் பயன்கள் 

 

குறிப்பிட்ட பொருளுக்கான சட்டபூர்வ பாதுகாப்பு கிடைக்கும். 

 

வேறெங்கேயும் உற்பத்தி செய்யப்படுகிற பொருள்களை இந்தப்பெயர் கொண்டு விற்பனை செய்ய முடியாது. 

 

இதனால் குறிப்பிட்ட இடத்தில் உருவாகும் பொருளை மக்கள் ஏமாறாமல் வாங்க முடியும். 

 

பொருள்களை உற்பத்தி செய்வோருக்கும் ஏற்றுமதி கூடும். 

 

பொருளின் விளையும் அதிகரிக்கும். 

சர்வதேச அளவில் இதனால் ஏற்றுமதி அதிகரிப்பதோடு சட்டப்பாதுகாப்பும் கிடைக்கும். 

கோவில்பட்டி கடலைமிட்டாய்

கோவில்பட்டி கடலைமிட்டாய் புவிசார் குறியீடு

தமிழகத்தை பொறுத்தவரைக்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் தின்பண்டங்களில் ஒன்று கடலைமிட்டாய். இனிப்புடன் கடலை கலந்து தயாரிக்கப்படும் இந்த பண்டம் மிகவும் சத்துமிக்கதும் கூட. தற்போது பல்வேறு பகுதிகளில் கடலை மிட்டாய் தயாரிக்கப்பட்டு வந்தாலும் கூட, முதல் முதலாகவும் பாரம்பரியமாகவும் தயாரிக்கப்பட்டது கோவில்பட்டி பகுதியில் தான். ஆகவே தான் கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு என்று தனி மவுசு உண்டு. அதனாலேயே கோவில்பட்டியை தவிர்த்து பிற இடங்களில் கடலை மிட்டாய் தயாரிக்கப்பட்டாலும் கூட “கோவில்பட்டி கடலை மிட்டாய்” என ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்துவந்தனர் பலர். 

 

இந்த சூழ்நிலையில் தான் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவில்பட்டி பகுதியை சேர்ந்த கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மட்டுமே இனி “கோவில்பட்டி கடலை மிட்டாய்” என்கிற பெயரை பயன்படுத்த முடியும். வேறு பகுதிகளில் இருப்பவர்களால் இனி இந்தப்பெயரை பயன்படுத்த முடியாது. அப்படியே பயன்படுத்தினால் அவர்களுக்கு சட்டப்பிரச்சனை ஏற்படும். 

புவிசார் குறியீடு கிடைத்தபடியால் இனி கோவில்பட்டியை சேர்ந்த கடலை மிட்டாய் உற்பத்தியாளர்களுக்கு வருமானம் கூடும். ஒரு தனி அங்கீகாரம் கிடைக்கும்.

ஈரோடு மஞ்சள்

ஈரோடு மஞ்சள்

தமிழகத்தில் இருந்து உற்பத்தியாகும் பல்வேறு பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருந்தாலும் அதில் சிறப்புமிக்க பொருள்களில் ஒன்று “ஈரோடு மஞ்சள்”. ஏற்கனவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விளைந்திடும் மஞ்சளுக்கு புவிசார் குறியீடு தனித்தனியாக வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, ஒடிசா மாநிலத்தில் கந்தமால் மலை மஞ்சள், மகாராஷ்டிரா மாநிலத்தின் வைகான் மஞ்சள் போன்றவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இவைபோலவே தமிழகத்தில் ஈரோடு பகுதியில் விளைகின்ற மஞ்சளுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருக்கிறது. 

 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மஞ்சள் விளைந்தாலும் கூட ஈரோடு பகுதிகளில் விளைகின்ற மஞ்சளுக்கு சந்தையில் வரவேற்பு அதிகம். அதற்கு மிக முக்கிய காரணம் அதில் இருக்கும் குர்குமின் என்ற வேதிப்பொருளின் அளவு தான், குறிப்பாக இங்கு விளைகின்ற மஞ்சளில் அதிக அளவில் குர்குமின் என்ற வேதிப்பொருள் அதிகமாக இருக்கும். இதனால், மஞ்சளின் நிறம், சுவை, மணம் வேறுபட்டதாக இருக்கும். மேலும், பல்வேறு மருத்துவ குணம் உள்ளதால், இயற்கை மருத்துவம், சித்த மருத்துவத்தில் பலவித நோய்களுக்கு மருந்து தயாரிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

 

இவ்வாறு சிறப்பு வாய்ந்த ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என கடந்த 2011 ஆம் ஆண்டு ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ஈரோடு மண்ணின் தன்மை, மஞ்சளின் தன்மை, மஞ்சள் விளையும் பகுதிகளின் எல்லை குறித்த ஆவணங்களுடன், சென்னையில் உள்ள இந்திய புவிசார் குறியீடு பதிவகத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து பலகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. 

ஈரோட்டில் விளைகின்ற மஞ்சள் விதைகளை வாங்கி ஈரோட்டிற்கு வெளியே விளைவித்தாலும் கூட ஈரோடு மஞ்சளுக்கான தகுதியை அது பெறாது. காரணம், ஈரோடு மண்ணில் விளைகின்ற மஞ்சள் தான் தனித்துவமிக்கதே தவிர அந்த மஞ்சள் விதைகள் அல்ல. 

புவிசார் குறியீடும் சஞ்சய் காந்தியும்

புவிசார் குறியீடும் சஞ்சய் காந்தியும்

புவிசார் குறியீடு குறித்து நீங்கள் தெரிந்துகொள்ளும் போது அதற்காகவே தனது வாழ்நாளின் பெரும்பகுதியை செலவு செய்திடும் வழக்கறிஞர் சஞ்சய் காந்தி என்பவர் குறித்தும் தெரிந்துகொள்வது அவசியம். இவர் தமிழகத்தின் பாரம்பரியப் பொருட்களுக்காக புவிசார் குறியீடு பெற்றுத் தரப் போராடி இதுவரை 19 பாரம்பரியப் பொருட்களுக்காக புவிசார் குறியீட்டை பெற்றுத்தந்திருக்கிறார். 

அதில் காஞ்சிபுரம் பட்டு, பவானி ஜமக்காளம், மதுரை சுங்கிடி புடவை, ஆரணிப் பட்டு, சேலம் வெண்பட்டு, கோவை போரா காட்டன், தஞ்சை தலையாட்டி பொம்மை, தஞ்சை வீணை, தஞ்சை ஓவியம், நாச்சியார்குளம் குத்துவிளக்கு, தஞ்சாவூர் தட்டு, பத்தமடை பாய், மாமல்லபுரம் கற்சிற்பம், திருப்புவனம் பட்டு, திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி கண்ணாடி சேலை, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா உள்ளிட்டவை அடங்கும். 

புவிசார் குறியீடு எதற்கெல்லாம் பெற முடியும்?

புவிசார் குறியீடு

அனைத்து பொருள்களுக்கும் வெறுமனே புவிசார் குறியீடு வாங்கிவிட முடியாது. அதற்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன. அந்தப் பொருட்களுக்கு உண்மையான தனிச்சிறப்பு இருக்க வேண்டும். அது விவசாயப் பொருட்களாக, வேளாண் பொருட்களாக , கைவினை, இயற்கைப்பொருட்களாக இருக்க வேண்டும். அந்தப் பொருட்களுக்கு வரலாற்றுச் சான்று கட்டாயம் இருக்கவேண்டும். அதேபோல தனி நபராக சென்று புவிசார் குறியீடு வாங்கிவிடவும் முடியாது. அதற்கென்று சங்கம், சொசைட்டி இருக்க வேண்டும். 

இதுபோன்ற பதிவுகளை உங்களது வாட்ஸ்ஆப்பில் பெற விரும்பினால் பின்வரும் பட்டனை கிளிக் செய்து இணைந்திடுங்கள்.


Get updates via WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *