சீமைக் கருவேல மரத்தினால் வாழ்ந்த தலைமுறை உண்டு தெரியுமா?

சீமைக்கருவேல மரங்கள் தண்ணீரை உறிஞ்சிவிடும் என அறிந்திருப்போம் ஆனால் பலரின் வாழ்வாதாரமாக அது இருந்திருக்கிறது என்பது தெரியுமா?

சீமைக்கருவேல மரங்கள்

சில மாதங்களுக்கு முன்பு சீமைக்கருவேல மரங்களுக்கு எதிராக மிகப்பெரிய கூட்டமே கிளம்பியது. அவரவர் தங்களது நிலம் மட்டுமல்லாது பொது இடங்களில் இருந்த சீமைக்கருவேல மரங்களையும் வெட்டித்தள்ளினார்கள். நீதிமன்றமும் கூட அவரவர் நிலத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்டவேண்டும் இல்லையேல் அபராதம் விதிக்கப்படும் எனக்கூறியது, பின்னர் அந்த உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டது. இப்படி ஒரு இயக்கமாக சீமைக்கருவேல மரத்திற்கு எதிராக மக்கள் புறப்பட்டதற்கு காரணம் அதிக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சி வாழும், காற்றில் இருக்கக்கூடிய ஈர்ப்பதத்தைக்கூட உறிஞ்சி வறட்சியை உண்டாக்கும் என்பதே முதன்மையான காரணம்.

 

ஆனால் முந்தைய காலங்களில் மழையின்றி மக்கள் பஞ்சத்தால் தவித்தபோது அவர்களின் வயிற்றுப்பசியை போக்கிட இதே கருவேல மரம் தான் பெரும் உதவி புரிந்திருக்கிறது என்பதே உண்மை. கருவேல மரங்கள் அகற்றப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக இருந்தாலும் கடந்த காலத்தில் மக்களின் வாழ்வில் இது எப்படி ஒரு முக்கியமான விசயமாக இருந்திருக்கிறது என்ற சுவராஷ்யமான விசயத்தை அண்மையில் ஒரு நாளிதழில் படிக்க நேர்ந்தது. அதைத்தான் இங்கே பார்க்க இருக்கிறோம்.

 

1960 ஆம் ஆண்டிலிருந்து 1980 ஆம் ஆண்டு காலகட்டங்களில் தமிழகத்தில் பெரும் வறட்சி நிலவியது. வறட்சியின் தாக்கம் குளத்துப்பாசனத்தை மட்டுமே நம்பியிருந்த புதுக்கோட்டை, ராமநாதபுரம் பகுதிகளில் அதிகம். அப்படிப்பட்ட சூழலில் விவசாயம் செய்ய முடியாதபடியால் வெறுமனே கிடந்த வயல்களில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்தன, சிலர் வளர்த்தனர். வறட்சியாக இருந்தபோதும் இந்த மரங்கள் மட்டும் வளர்ந்தன. மேலும் இதிலிருந்து காய்க்கும் கருவைக்காயை ஆடு மாடுகள் விரும்பி உண்ணும். அப்போது அந்த நிலங்களில் இருந்து சிறு வருமானம் ஏழைகளுக்கு கிடைத்ததென்றால் அது சீமைக்கருவேல மரங்கள் மூலமாகவும் மரம் வெட்டுவதற்காக கிடைத்த கூலியின் மூலமாகவும் தான்.

 

ஒரு டன் விறகின் விலை 2003 இல் ரூ 800, தற்போது அதிகம். ஒரு ஏக்கரில் நல்ல கருவேல மரங்கள் இருந்தால் அதனை 10000 முதல் 25000 ரூபாய் வரை விற்கலாம். வெட்டப்பட்ட கருவேல மரங்களை கரி மூட்டம் போடுவார்கள். 10 முதல் 15 நாட்கள் ஈரமான மணல் பூசப்பட்ட ஒரு கூடு போன்ற அமைப்பிற்குள் விறகுகளை அடைத்துவைத்து நெருப்பு மூட்டுவார்கள். பிறகு அதிலிருந்து எடுக்கப்படும் கரி தரம் பிரிக்கப்பட்டு விற்கப்படும்.

 

ஒரு டன் விறகினை அப்படியே விற்றால் 4000 ரூபாய்க்கு விற்கலாம். அதே விறகை கரி மூட்டம் போட்டு கரியாக விற்றால் 10000 ரூபாய்க்கு விற்கலாம். இதனைக் கொள்முதல் செய்து விற்பவர்கள் 12000 க்கும் கூட விற்பார்கள். இன்றும் சீமைக்கருவேல மரத்தினால் வாழ்வாதாரம் பெருகிறவர்கள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றும் கிராம மக்கள் தங்களது வீடுகளில் எரிக்க சீமை கருவேல மரங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஒரு நாளைக்கு சீமை கருவேல மரங்களை வெட்ட கூலியாக 200 முதல் 300 ரூபாய் வரை சம்பளமாக பெற்று அதன் மூலமாக குடும்பத்தை நடத்துகிறவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

இந்தக்கட்டுரை சீமைக் கருவேல மரங்களை காப்பதற்காக எழுதப்பட்டது அல்ல. விசித்திரமான மாற்றுக்கோணத்தையும் நாம் அறிந்திருக்க வேண்டும் என்பதற்க்காக எழுதப்பட்டது தான்.

Join with me :

எங்களுடைய பதிவுகளை நேரடியாக வாட்ஸ்ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்து இணைந்திடுங்கள்_ : https://chat.whatsapp.com/BpBkoxYbAdXLPCC0kZ4Apg





எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *