கக்கனை மகன் போல வளர்த்த வைத்தியநாத அய்யர் | யார் இவர்?

வைத்தியநாத அய்யர் இறந்தபோது அவர் பெற்றெடுத்த பிள்ளைகள் மொட்டை அடித்துக்கொண்டது போல அவரது வீட்டில் வளர்ந்த கக்கன் அவர்களும் மொட்டை அடித்துக்கொண்டார்.
வைத்தியநாத அய்யர்

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் எழுத்தை புலவர் அ . நக்கீரன் அவர்கள் தொகுத்து வெளியிட்ட “தலைமைத் தமிழ்” எனும் புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒரு குறுந்தகவலை நக்கீரன் அவர்கள் கூறியிருந்தார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆலயப்போராட்டம் நடத்திய வைத்தியநாத அய்யர் அவர்களின் வீட்டில் மகனைப்போல கக்கன் அவர்கள் வளர்க்கப்பட்டார் என்ற செய்தி தான் அது அதுபற்றித்தான் இங்கே பார்க்க இருக்கிறோம்.











மொட்டையடித்த கக்கன்

கக்கன்

எளிமையின் சிகரமாக விளங்கிய முன்னாள் தமிழக அமைச்சர் திரு கக்கன் தன்னுடைய இளமைப் பருவத்தில் திரு வைத்தியநாத அய்யர் அவர்களின் வீட்டில் இருந்துதான் படித்தார். அய்யரும் கக்கனை தன் மகன்களில் ஒருவராகவே கருதினார். 23.2.1955 இல் வைத்தியநாத அய்யர் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். வைத்தியநாத அய்யர் அவர்களின் பிள்ளைகள் மொட்டை அடித்துக்கொண்டபோது கக்கன் அவர்களும் மொட்டையடித்துக்கொண்டு அவர்களோடு ஒருவராய் நின்றார். 

 

பொறுக்குமா சில சம்பிரதாய சாம்பிராணிகளுக்கு, புகைய ஆரம்பித்தார்கள். பெற்றோருக்கு செய்யவேண்டிய கடமையைத் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவன் ஒருவனும் செய்வதா என போர்க்குரல் கிளப்பினர். அப்போது அய்யரின் குடும்பத்தில் இருந்து ஒரே குரலாக ஒரு கருத்து ஒலித்தது, அதனைக்கேட்டு அங்கிருந்தவர்கள் வாயடைத்துப்போனார்கள். 

 

“நாங்கள் பிறப்பால் மகன்களானோம். ஆனால் கக்கன் வளர்ப்பதால் மகனானார். ஆகவே எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அந்த உரிமை கக்கனுக்கும் இருக்கிறது” என வைத்தியநாத அய்யர் அவர்களின் மனைவியும் பிள்ளைகளும் சொன்னார்கள். இதற்க்குப் பின்னர் உறவினர்கள் அதில் கலந்துகொள்ளப்போவதில்லை என அகன்றதாக இந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆலயப்பிரவேச முரண்பாடுகள்

வைத்தியநாத அய்யர்

பிராமண குடும்பத்தில் பிறந்த நீ இனியும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாகப் போராடினால் எரித்துக்கொள்ளப்படுவாய் என்ற எச்சரிக்கையையும் மீறி 1939, ஜூலை 8 ஆம் நாள் இரவு 8 மணியளவில் மதுரை ஆலயத்திற்குள் தாழ்த்தப்பட்ட மக்களோடு ஆலயப்பிரவேசம் செய்தார். திரு ராஜாஜி அவர்களின் ஆதரவு கிடைத்தவுடன் முத்துராமலிங்கர் பாதுகாப்பு கொடுக்க கக்கன், பூவலிங்கம், சின்னையா, ,முருகானந்தம், சண்முகம் உள்ளிட்ட 6 பேருடன் ஆலயப்பிரவேசம் வெற்றிகரமாக நடந்தது. 

 

இதுதான் தமிழகத்தில் நடந்த முதல் ஆலயப்பிரவேசம் என சொல்வோரும் அதனை எதிர்ப்போரும் இருக்கிறார்கள். யார் முதல் என்ற பெருமைக்குள் நாம் செல்ல வேண்டியதில்லை. இன்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் செல்வதற்கு அன்று நடந்த ஆலயப்பிரவேசமும் ஒரு காரணம் என்பதனை மறந்துபோகக்கூடாது. 

 

இதில் ஒரு சுவாரஸ்யமான தகவல் இருக்கிறது. இதே மதுரை வைத்தியநாத அய்யர் திருப்பூரிலே வாசுதேவ அய்யர் தலைமையில் (1922) தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கூடிய போது, நாடார் முதலியோர் கோவில் நுழைவைப்பற்றி இராம சாமி நாயக்கரால் ஒரு தீர்மானங் கொண்டுவரப்பட்டது. அவர் பெரும் புயலைக் கிளப்பினார். அத்தீர்மானம் என்னால் ஆதரிக்கப்பட்டது. அதை எதிர்த்தவர் மதுரை வைத்தியநாத அய்யரும், கிருஷ்ண அய்யங்காருமாவார். பின்னே காங்கிரஸ் ஆட்சியில் மதுரையில் தீண்டாமையைப் போக்க முயன்றவர் வைத்தியநாத அய்யர் என்று கேட்டு மகிழ்வெய்தினேன். சீர்திருத்த முன்னணிக்குத் தூற்றலும், பின்னணிக்குப் போற்றலும் நிகழ்தல் இயல்பு போலும்!’’  – இப்படி தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் தமது வாழ்க்கைக் குறிப்பு நூல் – 2 ஆம் தொகுதியில் (பக்கம் 274) பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

 

நாம் இதற்காக யாரையும் தவறாக எண்ணவேண்டிய அவசியமில்லை. இவ்விசயம் நடந்து 17 ஆண்டுகள் கழித்துத்தான் மதுரையில் ஆலயப்பிரவேசம் நடத்தினார் வைத்தியநாத அய்யர். ஆகவே அவர் மனம் பண்பட்டிருக்கலாம் என்றே எண்ணத்தோன்றுகிறது. மனித இயல்பும் அதுதானே. இல்லையேல் கக்கன் போன்ற ஒரு பிள்ளையை தன் மகனைப்போல வீட்டிலேயே வளர்த்திருப்பாரா! 

 

காலம் சில படிப்பினைகளை தரவேண்டும் அது நல்லவையாக இருக்க வேண்டும்.

Join with me :

எங்களுடைய பதிவுகளை நேரடியாக வாட்ஸ்ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்து இணைந்திடுங்கள்_ : https://chat.whatsapp.com/BpBkoxYbAdXLPCC0kZ4Apg






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *