விபத்துக்களை அதிக அபராதத்தால் தடுக்க முடியாது, நடத்தையில் மாற்றம் வேண்டும்
அதிகப்படியான அபராதங்கள் போலீசார் இருக்கும் போது மட்டுமே சாலை விதிகளை பின்பற்றிட உதவும், மக்களின் நடத்தையில் ஏற்படும் மாற்றம் தான் உண்மையான நிரந்தர மாற்றத்தை உண்டாக்க உதவும்
இந்தியாவை பொறுத்தவரைக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் சாலை விபத்துக்களில் 1.49 லட்சம் பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 12216 பேர் மரணித்து இருக்கிறார்கள். பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு முக்கியக்காரணம் வாகன ஓட்டிகள் முறையாக சாலை விதிகளை பின்பற்றாமை தான் காரணம் என சொல்லப்பட்டது. சாலை விபத்துகளை குறைப்பதற்காக சாலை விதிகளை மீறுவோர் மீது கடுமையான அபராதங்கள் விதிக்கும் வண்ணம் மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்தது இந்திய அரசு. புதிய அபராதத்தை அந்தந்த மாநிலங்கள் வேண்டுமானால் பின்பற்றலாம் இல்லையேல் தவிர்த்துக்கொள்ளலாம் என இப்போது மாநிலங்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரைக்கும் புதிய அபராதம் விதிக்கப்படுகிறது.
இப்படி அபராதங்கள் அதிகமாக விதிக்கப்பட்டால் விபத்துக்களை குறைத்துவிட முடியுமா? என்ற கேள்வி பரவலாக எழுந்திருக்கிறது. அதுபற்றித்தான் இந்தக்கட்டுரையில் விரிவாக பேச இருக்கிறோம்.
புதிய அபராதம்
மாற்றப்பட்ட சட்டதிருத்தத்தின்படி ஏற்கனவே விதிக்கப்பட்ட அபராதத்தொகையை விட 10 மடங்கு அதிகமான அபராதத்தொகை விதிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு லைசென்ஸ் இல்லாமல் ஓட்டினால் ரூ 5000 [முன்பு 500] , குடித்துவிட்டு ஓட்டினால் ரூ 10,000 [ முன்பு 2000] , காரில் சீட் பெல்ட் போடாமல் ஓட்டினால் ரூ 5000 [முன்பு 100] என ஒவ்வொன்றுக்கும் அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. புதிய மோட்டார் வாகனச்சட்டம் அமல்படுத்தப்பட்ட செப்டம்பர் 01 முதல் செப்டம்பர் 5 வரைக்கும் மட்டும் ரூ 1 கோடிக்கும் அதிகமான அபராதம் ஹரியானா மற்றும் ஒடிசா மாநிலத்தில் மட்டும் விதிக்கப்பட்டிருக்கிறது.
சில செய்திகளை நாம் ஏற்கனவே செய்தித்தாள்களில் கூட படித்திருப்போம். ஹரியானாவில் மோட்டார் வாகனம் ஓட்டி வந்தவருக்கு ரூ 23,000 அபராதம் விதிக்கப்பட்டது [வண்டியே அவ்வளவு விலை இல்லை என புலம்பியது நினைவிருக்கலாம்]. நாட்டிலேயே அதிகபட்சமாக போக்குவரத்து விதிகளை மீறிய ராஜஸ்தான் லாரி உரிமையாளருக்கு ரூ 1.41 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. சென்னையில் அதிக அளவிலான போலீசார் மிகத்தீவிரமாக செயல்பட்டு போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது அபராதத்தை விதித்து வருவதையும் கண்கூடாக பார்க்க முடிகிறது.
கடுமையான அபராதம் மட்டுமே விபத்தை குறைத்துவிடுமா?
சாலை விபத்துகளுக்கு பிரதான காரணம் பொதுமக்கள் விதிகளை மீறுவதனால் மட்டுமே அல்ல என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தகுதியற்ற சாலைகளும் அதற்க்கு பிரதான காரணம் என்பதனை நம்மால் மறுத்துவிட முடியாது என்பதனை இங்கே அரசுக்கு சுட்டிக்காட்டிட வேண்டும். அரசாங்கத்தை முதலில் சாலையை ஒழுங்காக போட சொல்லுங்கள் பிறகு நாங்கள் ஏன் ஹெல்மெட் போடவில்லை என பலர் கேட்கிறார்கள். இது ஒரு உடன்பாடற்ற கேள்வியாகவே நான் பார்க்கிறேன். ஹெல்மெட் போட சொல்வது நம்முடைய பாதுகாப்பிற்கு, அதனை நாம் நினைத்தாலே எளிமையாக செய்துவிட முடியும். ஆகவே நம்மால் சரி செய்ய முடிந்த ஒரு விசயத்திற்கு அரசாங்கத்தை இழுப்பது தேவையற்ற செயலாகவே பார்க்கிறேன்.
ஆனால் அபராதங்கள் அதிகரிப்பு என்பது சாலை விதிமீறலை குறைத்து விடுமா? இதுதான் இந்த கட்டுரையின் பிரதானமான கேள்வி. ஒவ்வொரு இடத்திலும் 4 போலீசாரை நிறுத்தி கண்காணிப்பது என்பது நடக்கக்கூடிய காரியமே அல்ல. பலர் என்ன செய்கிறார்கள், போலீசார் நிற்கும் இடம் தெரிந்துவிட்டால் அந்த இடத்தில் மட்டும் சிக்னலை மதிக்கிறார்கள், ஹெல்மெட் போடுகிறார்கள். போலீசார் இல்லாத சூழல்களில் எப்போதும் போலவே செயல்படுகிறார்கள். பிறகு எப்படி கடுமையான அபராதங்கள் சாலை விபத்துகளை குறைக்கும். மக்கள் மனதளவில் சாலை விதிகளை பின்பற்றிட வேண்டும் நினைக்க வேண்டும். அப்படி நினைக்கும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசு நடத்திட வேண்டும். அதனை ஒரு இயக்கமாக மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். அரசியல் கட்சிகள் தங்களது தொண்டர்கள் இனி சாலை விதிகளை மதித்து நடக்க அறிவுறுத்த வேண்டும். பின்னால் அமர்ந்திருக்கும் மனைவியோ, குழந்தையோ, காதலியோ, நண்பரோ – ஓட்டுபவர் சாலை விதிகளை மீறினால் அதனை தட்டிக்கேட்க வேண்டும், சாலை விதிகளை மதிக்குமாறு சொல்லவேண்டும். அப்போது தான் ஒரு நிரந்தரமான மாற்றம் ஏற்படும்.
Join with me :
எங்களுடைய பதிவுகளை நேரடியாக வாட்ஸ்ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்து இணைந்திடுங்கள்_ : https://chat.whatsapp.com/
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!