குப்பை கிடங்கிற்குள் ஒரு சாமானியனின் தேடல் – சமூக வலைதளங்களின் அவலநிலை

சாதாரண மனிதர்களின் மனதில் வெறுப்புணர்வினை , விரோத மனப்பான்மையை உருவாக்கக்கூடிய வகையிலான கருத்துக்களை கொண்ட சமூக வலைதளங்களும் குப்பை தொட்டிதான் .

அதிகாலையில் நடை பயிற்சிக்கு செல்லுகையில், நாம் பிச்சைக்காரர் என பெயர் வைத்துள்ள நபர் ஒருவர் பச்சை நிறத்திலான குப்பை தொட்டியை ஒரு குச்சியை வைத்து கிளறிக்கொண்டு இருந்தார். அவருக்கு உபயோகமான பொருள்களோ உணவோ கிடைத்தால் மகிழ்ச்சியையும் எதுவும் கிடைக்காவிட்டால் கிளறுகிற முறையில் வெறுப்பையும் காட்டிக்கொண்டு இருந்தார். இதனை கவனிக்கும் போது எனக்கு ஓர் கேள்வி எழுந்தது, இதே போன்றதொரு குப்பை தொட்டியை தானே நாமும் தினம் கிளறிக்கொண்டு இருக்கிறோம்.

ஆம், நான் சொல்லுகின்ற குப்பை தொட்டி “சமூக வலைதளம்” தான்.உங்களுடைய facebook அல்லது ட்விட்டர் ஆப்பை திறந்து ஒரு 5 நிமிடம் நீங்கள் காணுகின்ற பதிவினை கவனியுங்கள். இப்போது நீங்களே சொல்லுங்கள் எத்தனை கேவலமான, கெட்டுப்போன, பொய்யான, வன்மமான விசயங்களை கொண்டிருக்கிறது இந்த குப்பை தொட்டி. ஆனால் காலை எழுந்தது முதல் இரவு உறங்குவது வரை இதனை கிளறிக்கொண்டுதானே இருக்கிறோம் நாம். சிலமுறை உண்மையான,பயன்படுகிற கருத்துக்கள் கிடைத்தாலும் பலமுறை எதுவுமே கிடைப்பதில்லையே. சிலரோ சமூக வலைதளம் என்றால் இப்படித்தான் இருக்கும் என அறிந்து பிழைத்துக்கொள்கிறார்கள். பலரோ எது உண்மை எது பொய் என அறியாத குழப்பத்திலேயே இருந்துவிடுகிறார்கள். இன்னும் சிலரோ பொய்யை உண்மையென நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். மொத்தத்தில் சமூக வலைதளமும் குப்பை தொட்டிதான்.

சாதிய மத கட்சி பேத குப்பைகள் தான் ஏராளம்

 

சமூக வலைத்தளங்களை சாதாரண பொதுமக்கள் மட்டுமே கையாளுகிறோம், நமக்கு என்ன வாய்ப்புகள் இருக்கின்றனவோ அவை தான் மற்றவர்களுக்கும் இருக்கின்றதென நீங்கள் நினைத்துக்கொண்டால் அந்த எண்ணத்தை இன்றே மாற்றிக்கொள்ளுங்கள். இங்கு பணம் படைத்தவர்களால், அரசியல் கட்சிகளால், ஆதிக்க சக்திகளால் பெருமளவிலான கருத்துக்கள் திணிக்கப்படுகின்றன. நான் இந்த மதம், அந்த கட்சி என பிரித்துக்கூற விரும்பவில்லை. ஏறக்குறைய அனைவருமே இன்று அந்த வேலையைத்தான் செய்துவருகிறார்கள். தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் வரும் போது இது விளம்பரம் தான் என்பதனை நம்மால் பிரித்துப்பார்க்க முடியும். ஆனால் சமூக வலைத்தளங்களில் அப்படி நம்மால் பிரித்துப்பார்க்க முடியாது. காரணம் ஒரு செய்தியை கூறுபவரும் சாதாரண மனிதனுக்கு உரிய அடையாளத்துடனேயே இருப்பார். இவற்றில் இருந்து உண்மையான செய்தியையோ அல்லது முன்னேற்றத்திற்கு உதவுகின்ற செய்திகளையோ கண்டறிந்து படிப்பது மிகப்பெரிய சவாலான விசயமாக இருக்கிறது.

ஏன் இப்படி மிருகமாக மாறிவிட்டோம்?

 

முன்னேறிய சமூகம் என நம்மை நாமே கூறிக்கொள்கிறோம். ஒருநாள் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படுகின்ற கருத்துக்களை படித்துப்பார்த்தால் ஹிட்லர் கூட பரவாயில்லை என தோன்றிவிடும். படிப்பறிவு இல்லாத காலத்தில் கூட சக மனிதனுக்கு தீங்கு விளைவிக்கின்ற விசயத்தை செய்யக்கூடாது என்ற தார்மீக கட்டுப்பாட்டை ஒவ்வொருவரும் வைத்திருந்தார்கள். ஆனால் இன்று படிப்பறிவு பெற்றுவிட்ட சமூகம் தன் மொத்த அறிவையும் பயன்படுத்திக்கொண்டு மனிதத்திற்கு சற்றும் உதவாத கருத்துகளையும் வெறுப்புகளையும் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஒவ்வொருவரும் உங்களை உணர்ந்தால் மட்டுமே “நம்மால் மீள முடியும்”. கருத்துக்களை பகிரும் போது குறைந்தபட்சம் இது ஒருவறையேனும் காயப்படுத்தும் என உணர்ந்தால் அதனை பகிராதீர்கள்.

குப்பை தொட்டியை சுத்திகரிப்போம்.






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *