அப்போ தீவிரவாதி இப்போ ரியல் ஹீரோ | அசோக சக்ரா வென்ற நஷீர் அகமது வானி


 

இந்திய தேசம் இன்று (ஜனவரி 26,2019) குடியரசு தின விழாவினை கொண்டாடுகிறது. இந்த குடியரசு தின விழாவில் லேன்ஸ் நாயக் நஷீர் அகமது வானி என்ற ராணுவ வீரருக்கு அசோக சக்ரா விருது வழங்கி அவருடைய சேவையை பாராட்ட இருக்கிறது இந்திய அரசு. கடந்த நவம்பர் 2018 இல் தீவிரவாத குழுவுடன் நடந்த மோதலில் தனது இன்னுயிரை நாட்டிற்க்காக தியாகம் செய்திருந்தார் நஷீர் அகமது வானி.  தற்போது நாடு முழுவதும் இவரது தியாகம் பற்றிய பேச்சாகத்தான் இருக்கின்றது. யார் இந்த  நஷீர் அகமது வானி? அவருடைய புகழ் இந்தியா முழுமைக்கும் பேசப்படுவதற்கான காரணம் என்ன? என்ற மெய்சிலிர்க்க வைக்கும் உண்மையை தான் இந்த பதிவில் காண இருக்கிறோம்.

 


 

தீவிரவாதியாக நஷீர் அகமது வானி

 

நஷீர் அகமது வானி
நஷீர் அகமது வானி

 

காஷ்மீரில் இருக்கும் சில இளைஞர்கள் இந்திய ராணுவத்திற்கு எதிராக தீவிரவாதத்தில் ஈடுபடுவதை போலவே நஷீர் அகமது வானி அவர்களும் ஆரம்பகாலங்களில் தீவிரவாதியாக இருந்தார். ஆனால் தன்னுடைய நடவடிக்கைகளை பற்றி சிந்தித்து பார்த்து வன்முறையால் அமைதியை எப்போதும் பெற முடியாது என்ற முடிவிற்கு வந்தார் நஷீர் அகமது வானி. அதனை தொடர்ந்து இந்திய ராணுவத்திடம் சரணடைந்தார். சரணடைந்ததோடு அல்லாமல் இந்திய ராணுவத்திலேயே சேர்ந்து தீவிரவாத எதிர்ப்பு நடவெடிக்கைகளில் தீவிரம் காட்டினார்.

 


ராணுவ வீரராக நஷீர் அகமது வானி

 

2004 ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்திற்காக பணியாற்ற துவங்கினார் நஷீர் அகமது வானி. தீவிரவாதிகளாக இருந்து பின்னர் இந்திய ராணுவத்தில் இணைந்தவர்களை கொண்டு உருவாக்கப்பட்டிருந்த Territorial Army’s 162 Battalion இல் இணைந்து தனது பணியினை துவங்கினார்.இந்த குழுவினருக்கு இருக்கும் அனுபவம் தீவிரவாத ஒழிப்பில் பயனுள்ளதாக இருக்கும் என்பதனால் இவர்கள் தான் முன்வரிசை வீரர்களாக இருந்தார்கள். அப்போதே பல வீரதீர செயல்களை செய்திருந்தார்.

 

ராணுவ உடையில் நஷீர் அகமது வானி
ராணுவ உடையில் நஷீர் அகமது வானி

 

தீவிரவாதிகள் இருப்பதாக தகவல் வந்தால் மிகவும் ஆர்வமாகவும்  தன்னை முன்னிலை படுத்திக்கொண்டும் முதல் ஆளாக செல்லும் பழக்கமுடியவர் நஷீர் அகமது வானி என்கிறார்கள் அவருடன் பணியாற்றிய நபர்கள். தன்னை சுற்றி இருப்பவர்கள் சந்தோசமாக இருக்க வேண்டும் என விரும்பிடும் வானி, தான் சார்ந்திருந்த பட்டாலியன் மிகவும் பெருமையடைய வேண்டும் அதற்காக நாம் பாடுபட வேண்டும் என்பதில் ஆர்வமுடைவராக இருந்தார்.

 


 

ரியல் ஹீரோ நஷீர் அகமது வானி

 

கடந்த நவம்பர் 2018 இல் சோபியான் மாவட்டத்தில் பதன்கன்ட் கிராமத்தில் 6 தீவிரவாதிகள் நுழைந்திருக்கிறார்கள் என்ற தகவல் புலனாய்வு துறையில் இருந்து கிடைத்தவுடன் அவர்களை பிடிக்க சென்ற ராணுவ குழுவுடன் இவரும் சென்று இருந்தார். மற்ற ராணுவ வீரர்கள் முன்வாசலை சுற்றியிருக்க, பின்வழியில் தீவிரவாதிகள் தப்பிக்கலாம் என்று அறிந்து பின்வாசலை முற்றுகை இட்டார் நஷீர் அகமது வானி. கடுமையான துப்பாக்கி சூடு, கைகளில் குண்டுகள் என தீவிரவாதிகள் பின்வாசலில் வெளிப்பட எதிர்த்தாக்குதல் நடத்தினார் வானி.

 

நஷீர் அகமது வானியின் உடல் கொண்டு செல்லப்படுகிறது
நஷீர் அகமது வானியின் உடல் கொண்டு செல்லப்படுகிறது

 

இதில் ஒரு தீவிரவாதி இறக்க வானியும் காயமடைந்தார். இருந்தாலும் தன்னுடைய போராட்டத்தை கைவிடாமல் வெறும் கைகளாலேயே இன்னொரு தீவிரவாதியை கடுமையாக தாக்கி வீழ்த்தினார். இதன்பின்னர் நடந்த துப்பாக்கி சூட்டில் மற்ற தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வில் காயமடைந்த நஷீர் அகமது வானி மரணமடைந்தார்.

 


 

ராயல் சல்யூட் ஹீரோ நஷீர் அகமது வானி

 

நாம் அனைவரும் நம் நாட்டிற்குள் நிம்மதியாக வாழ்ந்திட பெரும் காரணமாக இருப்பவர்கள் இந்த ஹீரோக்கள் தான். இவர்களுக்கும் உணர்வுகள் இருக்கின்றன, சொந்த வாழ்க்கை இருக்கின்றன, குடும்பங்கள் இருக்கின்றன, வலிகள் இருக்கின்றன. ஆனால் அத்தனையையும் தாண்டி தன் நாடு என்கிற உணர்வு மேலோங்கி நிற்பது தான் அவர்களை ஒரு உண்மையான ஹீரோக்களாக நமக்கு கொடுத்திருக்கிறது .

 

நஷீர் அகமது வானியின் உடலுக்கு மரியாதை செலுத்திடும் ராணுவ வீரர்கள்
நஷீர் அகமது வானியின் உடலுக்கு மரியாதை செலுத்திடும் ராணுவ வீரர்கள்

 

இந்த குடியரசு தினவிழாவில் மாண்புமிகு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் நஷீர் அகமது வானி அவர்களின் வீரதீரத்தை பாராட்டி இந்தியாவின் மிக உயரிய விருதான அசோக சக்ரா விருதினை வழங்குகிறார். இதனை நஷீர் அகமது வானியின் மனைவி பெற்றுக்கொள்ள இருக்கிறார். இதற்கு முன்னர் இரண்டுமுறை சேனாமண்டல் விருதைப் பெற்றுள்ளவர் வானி.

 

இந்த தருணத்தில் நாம் செய்யவேண்டியது – நமக்காக உயிர்த்தியாகம் செய்திட்ட, செய்ய துணிந்து ராணுவத்தில் இருக்கும் வீரர்களுக்கு நன்றி சொல்லுவதும் அவர்களை போற்றுவதும் தான்.

 

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

 

நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

 


பாமரன் கருத்து

Share with your friends !

2 thoughts on “அப்போ தீவிரவாதி இப்போ ரியல் ஹீரோ | அசோக சக்ரா வென்ற நஷீர் அகமது வானி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *