10 சதவீத இடஒதுக்கீடு | ஏன் எதிர்க்கிறோம்?

 


Highlights

  • > இந்தியாவில் பொதுப்பிரிவினரில் பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு இரண்டிலும் 10% இடஒதுக்கீடு கொடுக்க அமைச்சரவை முடிவு
  • > வருமானம் 8 லட்சத்திற்கு உள்ளகவும், நிலம் 5 ஏக்கருக்கு உள்ளாகவும் இருக்க வேண்டும்
  • > பலர் இதனை எதிர்த்து வருகின்றனர்

 


 

இந்த பிரச்சனையை அணுகுவதற்கு முன்னதாக இடஒதுக்கீடு என்றால் என்ன, எதற்க்காக இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்பதை பாப்போம். அப்போது தான் இந்த பிரச்சனையை தெளிவாக அணுகிட முடியும்.

 

இடஒதுக்கீடு ஏன் வழங்கப்படுகிறது?

 

பன்னெடுங்காலமாக இந்திய மக்கள் வர்ணாசிரமத்தின் அடிப்படையில் சாதியாக பிரிக்கப்பட்டு கிடந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் குறிப்பிட்ட சில சாதிகளை சேர்ந்த மக்களுக்கு கல்வி உரிமை முற்றிலுமாக மறுக்கப்பட்டு வந்தது. அந்த மக்களுக்கு மேல் சாதிகளை சேர்ந்த மக்களால் கொடுமைகளும் இழிவுகளும் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டு வந்தன. பல தலைமுறைகளாக இந்த கொடுமை அரங்கேறியதன் விளைவாக குறிப்பிட்ட சாதி மக்கள் உயர்வான நிலைக்கும் புறக்கணிக்கப்பட்ட சாதியை சேர்ந்த மக்கள் மிகவும் பின்தங்கிய நிலைக்கும் சென்றனர்.

 

 

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அரசியல் சட்டத்தை வடிவமைக்க இருந்தவர்களின் கண்களின் முன்னால் தராசின் ஒரு பக்கம் ரொம்பவும் மேலேயும் இன்னொரு பக்கம் ரொம்பவும் கீழேயும் இருப்பதை உணர்ந்தனர். பல ஆண்டுகளாக உரிமைகள் மறுக்கப்பட்டு கல்வி என்றால் என்னவென்றே அறியாத அவர்களை பிறருக்கு இணையாக கொண்டுவந்து சமத்துவமான சமூகத்தை கட்டமைக்க எண்ணினர் அப்போதைய தலைவர்கள்.

அதன் விளைவாக கொண்டு வந்தது தான் “இடஒதுக்கீடு”.

 

இடஒதுக்கீடு என்பதனை சலுகையாக பார்க்க கூடாது. பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்த மக்களுக்கு செய்கின்ற பரிகாரம் தான் இடஒதுக்கீடு என்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். இது உண்மையான வார்த்தைகள்.

 


——————————————————————————————-





——————————————————————————————–

ஏன் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு எதிர்க்கப்படுகிறது?

 

நீ இந்த சாதிக்காரன் அதுனால படிக்க கூடாதுனு சொன்ன காலம் இருந்துச்சு, நீ ஏழை அதுனால படிக்க கூடாதுனு எங்கும் இல்லை

 

சாதாரண நபர்களுக்கு பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு என்பது சரிதானே? உயர்சாதியில் எத்தனையோ குடும்பங்கள் ஏழை குடும்பங்களாக இருக்கின்றன. அவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது சரிதானே என எண்ணுவோம். ஆனால் பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் கூறுகின்ற காரணத்தை கேட்டால் அதில் இருக்க கூடிய சூட்சமம் புரியும்.

 


அரசியலமைப்பு சட்டம் என்ன சொல்கிறது?

 

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ” சமூக ரீதியிலான மற்றும் கல்வி ரீதியிலான” என்ற வார்த்தை தான் இடம் பெற்று இருக்கிறது. “பொருளாதார ரீதியிலான” என்ற வார்த்தை இடம்பெறவே இல்லை. கலைஞர் அவர்கள் குறிப்பிட்டுள்ள ஒரு செய்தியில்  “பொருளாதார ரீதியிலான” என்ற வார்த்தை ஏன் சேர்க்கப்படவில்லை என்பதற்கான விளக்கத்தை பதிவிட்டுள்ளார்.

 

 

1951 ஆம் ஆண்டு திருத்தப்பட்டபோது இணைக்கப்பட்ட 15(4) என்ற புதிய பிரிவில் “பொருளாதார ரீதியாக” என்ற வார்த்தை இடம்பெற வேண்டும் என பலர் நேருவிடம் வலியுறுத்தினர். அதனை நேரு அவர்களும் அம்பேத்கார் அவர்களும் நிராகரித்தனர். அதுகுறித்து கூறிய நேரு அவர்கள் “சமூக ரீதியாக” என்ற வார்த்தைக்கு பரந்துபட்ட அர்த்தம் இருக்கிறது என விளக்கினார்.

 

இப்போதுவரை அந்த பிரிவில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. அதில் தான் தான் திருத்தம் செய்வோம் என மத்தியில் ஆளும் பாஜக தெரிவித்துள்ளது.

 

மேலும் பொருளாதார ரீதியாக மக்களை பிரிப்பது என்பது குழப்பத்தையே உருவாக்கும்.

 

> ஓர் ஆண்டு அதிக வருமானமும் அதற்கடுத்த ஆண்டு குறைவான வருமானமும் பெற்றால் எப்படி பிரிப்பது?

 

> இடஒதுக்கீட்டு பலனை பெறுவதற்காகவே ஆண்டு வருமானத்தை மறைக்கவோ அல்லது செயற்கையாக குறைக்கவோ முயன்றால் என்னாவது?

 

> இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது சமூக சமத்துவத்தை ஏற்படுத்தவே அன்றி பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்த அல்ல

 

> சாதி ரீதியாக கொடுமைகளை அனுபவிப்பதை போன்று பொருளாதார ரீதியாக யாரும் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டது இல்லை

 


 

——————————————————————————————-





——————————————————————————————–

மத்திய அரசின் பிற்போக்குத்தனமான விதிமுறை

 

மத்திய அரசு தற்போது கொண்டுவந்துள்ள திட்டத்தின்படி 8 லட்சத்திற்கும் குறைவாக ஆண்டு வருமானம் பெறுகிறவர்கள் இடஒதுக்கீட்டை பெறலாம். அப்படியானால் மாதம் 66,666 ரூபாய் சம்பாதிக்கக்கூடிய ஒரு குடும்பத்தில் இருந்து வரக்கூடிய நபரால் இடஒதுக்கீட்டை அனுபவிக்க முடியும். 66 ஆயிரம் என்பது எவ்வளவு பெரிய மாத சம்பளத்தொகை.

 

இதன்மூலமாக என்ன சொல்ல வருகிறது மத்திய அரசு, குறிப்பிட்ட பொது பிரிவினரில் 8 லட்சம் சம்பாதிப்பவர்கள் கூட ஏழைகள் என சொல்ல வருகிறதா? உண்மையான நோக்கத்திற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டிருந்தால் இவ்வளவு பெரிய தொகையினை இவர்கள் நிர்யணித்திருக்க வாய்ப்பே இல்லை. இது தேர்தல் தந்திரத்திற்க்காக செய்யப்பட்ட வேலையை போன்றே தோன்றுகிறது.

 

பொதுப்பிரிவினரே இந்த திட்டத்தை எதிர்ப்பார்கள் என்றே நம்புகிறேன். அனைவரும் ஒன்றிணைந்து மத்திய அரசின் இம்முயற்சிக்கு தடையாக இருக்க வேண்டும்.

 


இதையும் படிங்க :

Reservation (இடஒதுக்கீடு) இன்னும் தேவையா ? உங்களுக்கான பதில் இங்கே

இடஒதுக்கீடு என்றால் என்ன? பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன் விளக்கம்

இடஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் தம்பிதுரை பேச்சு


பாமரன் கருத்து

Share with your friends !

One thought on “10 சதவீத இடஒதுக்கீடு | ஏன் எதிர்க்கிறோம்?

  • January 9, 2019 at 6:23 pm
    Permalink

    பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள உயர்சாதி என கூறப்படும் மக்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வரவேற்கப்பட வேண்டியதுதான். அதேசமயம் அவர்களுக்கு தளர்த்தப்பட்ட விதிகள்தான் முற்றிலும் தவறு. ஆண்டு ஒன்றுக்கு 8 இலட்சம் மற்றும் 5 ஏக்கருக்கு மிகாமல் இருப்பவர்களுக்கு இந்த இடஒதுக்கீடு செல்லும். ஆண்டுக்கு ஒரு இலட்சம் என்றால் மாதத்திற்கு ரூ.66666.67. மாதம் ரூ.66666.67 வருமானம் பெறுபவர்களை எப்படி பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்று கணக்கிட முடியும். இந்த 10 சதவீதத்தில் மாதம் ரூ.6000 வருமானம் பெறுபவர்களும் அடங்குவர். இது எப்படி பொருளாதார ஒதுக்கீடு என்று கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இல்லையேல் , பொதுவகுப்பினரில் அனைவருமே ரூ.50000 வரை வருமானம் பெருகிறார்களா?? அவ்வாறெனில் அவர்களுக்கு எதற்கு ஒதுக்கீடு??

    பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் பொருளாதார அடிப்படையில் உயர்ந்தாலும் உயர்சாதியில் உள்ளவர்களுக்கு கிடைக்கும் மரியாதை கிடைப்பதில்லை. அதனால் சமூக சமத்துவம் என்பது அவரவரின் மனநிலையை பொறுத்தே அமைகின்றது. அதனால் சமத்துவமானது அரசு அளிக்கும் திட்டங்களால் நடைபெறப்போவதில்லை. மாற்றமானது மக்களிடமிருந்தே பிறக்கவேண்டும். ஆகவே மனிதர்கள் மற்ற மனிதர்களிடம் கையேந்தா நிலையை உருவாக்கிட மக்களின் பொருளாதார நிலையை மட்டுமே உயர்த்த முடியும்.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *