2018 நெல் ஜெயராமன் ஏன் போற்றப்படுகிறார்? | History of Nel Jeyaraman
சாதனை மனிதர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறாரார்கள்
கிட்டத்தட்ட 170 பாரம்பரிய நெல் வகைகளை மீட்டு அவைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விதைகளாக கொடுத்து செய்வதற்கு அறிய தொண்டு செய்தவர் திரு நெல் ஜெயராமன் (Nel Jeyaraman) அவர்கள். இயற்கை விவசாயத்தின் தந்தை என போற்றப்படுகின்ற திரு நம்மாழ்வாரின் விழுதுகளில் ஒருவர் தான் இந்த நெல் ஜெயராமன். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்றுவந்த திரு நெல் ஜெயராமன் அவர்கள் டிசம்பர் 06,2018 அன்று மரணமடைந்தார்.
நெல் ஜெயராமன் உருவான நிகழ்வு?
“நெல்” என்ற அடைமொழி பிறந்த போதே வந்தது அல்ல. 2006 ஆம் ஆண்டுவாக்கில் திரு நம்மாழ்வார் அவர்களுடன் ஜெயராமனும் பயணிக்கிறார். அப்போது வடுகூர் என்ற கிராமத்தில் இருக்கும் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ஒருவர் இவர்களை வீட்டிற்கு அழைத்து “காட்டு யானம்” என்ற நெல் வகையின் விதைகள் அடங்கிய மஞ்சள் பை ஒன்றினை கொடுக்கிறார். அப்போது நம்மாழ்வார் அவர்களுக்கு உதித்த சிந்தனைதான் பாரம்பரிய நெல் வகைகளை மீட்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது. இதற்கான பணியினை மேற்கொள்ளும் பொறுப்பினை நீங்கள் தான் செய்யவேண்டும், இனி நீங்கள் “நெல் ஜெயராமன்” (Nel Jeyaraman) என பெயரிட்டார் திரு நம்மாழ்வார்.
பின்னர் அந்த பெயரிலேயே நாட்டம் கொண்ட நெல் ஜெயராமன் அரசு ஆவணங்களிலும் தன்னுடைய பெயரினை நெல் ஜெயராமன் என மாற்றிக்கொண்டார்.
நெல் ஜெயராமன் செய்தவையும் பெற்றவையும்?
மனிதனுக்கு உணவே அடிப்படை மருந்து. அப்படிப்பட்ட உணவினை உருவாக்க வேண்டுமெனில் விதைகள் அவசியம். மூத்த குடியென அறியப்படுகின்ற தமிழ் இனம் இடத்திற்கு, மருத்துவத்திற்கு , கால மாற்றத்திற்கு என பல நெல் வகைகளை பயிரிட்டு வந்தது. ஆனால் அந்த பாரம்பரிய நெல் வகைகளை வேளாண் முன்னேற்றம் என்கிற பெயரில் முடக்கிவிட்டார்கள். நெல் ஜெயராமனின் அதீத முயற்சியால் இன்று ஓரளவேனும் பாரம்பரிய நெல் வகைகள் மீட்கப்பட்டுள்ளன.
ஆண்டுக்கு ஒருமுறை அவரது ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா பிரசித்தம். அதற்காக இந்தியா மட்டுமல்ல உலக அளவிலும் ஆய்வாளர்களை அழைப்பது, விவசாயிகளுக்கு 1 கிலோ விதையினை இலவசமாக கொடுப்பது பின்னர் 4 கிலோவாக உற்பத்தி செய்து பெற்று மீண்டும் கொடுப்பது போன்று லட்சக்கணக்கான விவசாயிகளை இயற்கை வேளாண்மையின் பக்கம் கொண்டுவந்த பெருமை நெல் ஜெயராமனுக்கு தான் சேரும்.
இவரது மகத்தான சேவையினை பாராட்டி இந்திய அரசின் குடியரசு தலைவர் விருது, தமிழக அரசின் விருது என பல விருதுகளை வாங்கியுள்ளார்.
அனைத்தையும் தாண்டி இன்று மக்களின் மனங்களை வென்றும் இருக்கிறார்.
நெல் ஜெயராமனுக்கு பிறகு?
நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்க ஆரம்பித்த காலகட்டத்தில் அவருக்கு விவசாயிகளிடமிருந்து பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை என்பதே உண்மை. இதற்க்கு முக்கிய காரணம், அரசிடம் இருந்து கிடைக்கின்ற மானியத்தோடு கூடிய உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் தான். ஆனாலும் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் விதைகளின் மூலமாகவும் அதிக மகசூலை பெற முடியும் என நிரூபித்துக்காட்டியுளார். தற்போது அவருக்கான மதிப்பு தமிழ் சமூகத்தில் கூடியிருக்கிறது. ஆனால் இயற்கை இன்று அவரை நம்மிடம் இருந்து பிரித்து இருக்கிறது.
ஒரு நல்ல விசயத்தை முன்னெடுக்கும் போது பெரிய ஆதரவு மக்களிடமிருந்து வராவிட்டாலும் தொடர்ந்து செயல்பட்டால் மக்கள் உணர்ந்து அதற்கான அங்கீகாரத்தை அளிப்பார்கள் என்பதற்கு நெல் ஜெயராமன் ஓர் உதாரணம். நெல் ஜெயராமனுக்கு பிறகு விட்டுச்சென்ற பணிகளை மேற்கொள்ளப்போவது யார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
ஒரு விதை மண்ணிலே புதைந்தால் நூறு விதைகளை உருவாக்குமாம், நெல் ஜெயராமன் என்ற விதை இன்று வீழ்ந்திருக்கிறது, தமிழ் பிள்ளைகள் விதைகளாக எழ வேண்டும்.