மதுரை மீனாட்சியம்மன் கோவில் | இந்து அல்லாதோருக்கு அனுமதியில்லை | Non hindus not allowed in Madurai Meenakshi Amman temple Madurai

 

வாசகர் கட்டுரை : வினோத்குமார்

 

இன்று நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு மதுரைக்கு சென்றேன்.  திருமணம் மதியம் என்பதால் , தமிழகத்தின் முக்கியமான திருத்தலங்களில் ஒன்றான மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நானும் எனது நண்பர்களும் சென்றோம்.

[sg_popup id=”3271″ event=”inherit”][/sg_popup]

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

 

வழக்கம்போல் , திருக்கோவிலில் மக்கள் கூட்டம் இறைவனைக்காண அலைமோதியது. ஒருமணிநேரம் வரிசையில் சென்றோம். வரிசையில் செல்லும்போது, திருக்கோவிலின் உள்ளே பதாகை ஒன்று தென்பட்டது. அதில் , ” NON HINDUS NOT ALLOWED ” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. அதாவது , ” இந்து அல்லாதவர்கள் செல்லக்கூடாது”. படித்ததும் மனதிற்குள் ஒரு கேள்வி எழுந்தது.

 

துணை ஆணையரின் பெயரால் இந்து அல்லாதோருக்கு அனுமதியில்லை என வைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகை
துணை ஆணையரின் பெயரால் இந்து அல்லாதோருக்கு அனுமதியில்லை என வைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகை

 

” திரு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உலகப்புகழ் பெற்ற கோவிலாகும்.  இங்கு,  நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்கின்றனர் . மேலும், நம் நாட்டின் கலாச்சாரத்தைப் பற்றியும், சிற்பகலைகளை பற்றியும் அறிந்துகொள்ள வெளிநாட்டிலிருந்து பல சுற்றுலாப்பயணிகள் நாள்தோறும் வருகின்றனர் . வெளிநாட்டிலிருந்து  இந்துக்கள் மட்டும் சுற்றுலா வருவதில்லை மாறாக, மற்றமதத்தை சார்ந்தோரும் வருகிறார்கள். அவர்கள் இதைப்படிக்கும்போது , நம்நாட்டைப் பற்றி என்ன நினைப்பார்கள்?

 

“இந்தியா மதசார்பற்ற நாடு எனக்கூறுவது வெறும் வார்த்தைக்காகவும் புகழ்ச்சிக்காகவும்” என்றல்லவா நினைப்பார்கள்.

 

ஒருவேளை , மற்றமதம் சார்ந்த வெளிநாட்டினரை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்தால் விளைவுகள் என்னவாகும் ? மாறாக, வெளிநாட்டு மக்களை அனுமதித்து நாம்நாட்டு மக்களை அனுமதிக்காவிடில் அது நம்நாட்டு மக்களை அவமதிக்கும் செயலல்லவா ஆகும்.
இது, இந்து மதத்தில் மட்டும்தான் நடக்கிறது. சர்ச்சுகளிலும் , மசூதிகளிலும் இதுபோன்று நடப்பதில்லை.

 

கோவில்கள், இந்துக்களின் தெய்வங்களையும் புராணங்களையும்  மட்டும் பிரதிபலிப்பவையல்ல நம்நாட்டு கலாச்சாரங்களையும், கலைகளையும் மற்றும் இன்னும் பல மன்னர்களின் வரலாறுகளை பற்றியும் எடுத்துரைப்பவையாகும்.

 

எத்தனையோ பெரிய மதக்கலவரங்கள் நம்நாட்டில் நடந்திருப்பினும், தமிழ்நாட்டில் அப்படியேதும் நடந்ததில்லை . அப்படியிருக்க, தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற கோயிலில் இவ்வாறு எழுதப்பட்டிருப்பது வருத்தப்படவேண்டிய ஒன்றாகும். பிரதமர், பல மாநிலங்களின் முதலமைச்சர்கள்,
அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் போன்றோர் கோவில்களுக்கு செல்கின்றனர் ஆனால்  யாருமே இதைப்பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது.

 

ஒருவேளை “உள்ளே வரும் வேற்று மதத்தினரை நாங்கள் தடுப்பதில்லை” என கோவில் நிர்வாகம் கூறுவாராயின், அந்த பதாகை எதற்கு? தூக்கி எறியலாமல்லவா?

 

மதம் மறித்து!  மனிதம் காண்போம் !

 

நன்றி,
க. வினோத்குமார்

 

பொறுப்பு துறப்பு : வாசகர் கட்டுரைகளில் வழங்கப்படும் கருத்துக்கள் அவர்களுடைய சொந்தக்கருத்துக்கள் . அதற்கு பாமரன் கருத்து பொறுப்பேற்காது .

உங்களுடைய கட்டுரைகள் இடம்பெற வேண்டுமா எழுதி அனுப்புங்கள்

Email :

admin@pamarankaruthu.com

pamarankaruthu@gmail.com

————————————

 

பாமரன் கருத்து :

 

இந்தியாவின்எந்தவொரு இடத்திற்கும் தவறான நோக்கமின்றி செல்ல அனுமதி அளிக்கின்றது இந்திய அரசியலமைப்புச்சட்டம் . அதன்படிதான் தற்சமயம் அய்யப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் வழக்கும் நடந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம் .

எதற்காக மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் மற்ற மதத்தினருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது ? பாதுகாப்பு காரணங்களுக்காகவா , கோவிலின் புனிதம் போன்றவைகளுக்கு களங்கம் ஏற்பட்டுவிடும் என்பதனாலா?

இந்த இரண்டில் எதனை காரணமாக கூறினாலும் தவறுதான் .

வினோத் அவர்கள் கூறுவதைப்போல கோவில்கள் வெறும் கடவுள் சார்ந்த விசயம் மட்டுமல்ல . அது நமது கலாச்சாரத்தை , சிற்ப கலையினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் அருங்காட்சியகமாகவே நானும் காண்கின்றேன் .

பொதுவெளிகளில் அனைத்து மதத்தவரும் சமம் என வரிந்து கட்டிக்கொண்டு பேசும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அங்கிருக்கும் கோவில் நிர்வாகிகளும் இதனை கூட்டாக சேர்ந்துகொண்டு செய்வது வேதனையளிக்கக்கூடிய விசயம் .

கோவில் , பள்ளிக்கூடம் போன்றது . அங்கு சாதி மத பேதங்களுக்கு இடமளிக்க கூடாது .

இந்த தவறை எதிர்த்து முதல் குரல் மதுரை இளைஞர்களிடத்தில் இருந்துதான் வரவேண்டும் . சமத்துவத்திற்கான குரல் வருமா ? மதுரைக்காரர்களுக்கு முதலில் பகிருங்கள் .

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *