“நிலம் எனது உரிமை” – புரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்

நிலம் எனது உரிமை என்கிற வாசகத்தை கேட்டவுடன் காலா படம் நினைவுக்கு வரலாம் , தவறில்லை .

 

 

தற்போது சென்னை முதல் சேலம் வரை அமைய இருக்கும் 8 வழி சாலைக்காக விவசாய நிலங்கள் மக்களின் விருப்பமின்றி கட்டாயப்படுத்தப்பட்டு வாங்கப்படுவதாக கூறப்படுகின்றது . இதனால் நிலத்தின் மீதான உரிமை குடிமக்களுக்கு இருக்கிறதா ? என்கிற கேள்வி எழுந்திருக்கின்றது . அதனை பற்றிதான் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள போகின்றோம் .

நன்றாக சிந்தித்து பார்தோமேயானால் ஆதிகாலம்  முதற்கொண்டு இன்றுவரை சிறு சண்டை முதல் பெரிய போர்கள் வரை நடப்பது அனைத்துமே நிலத்திற்காகத்தான் .

 

நிலம் மீதான உரிமையை காக்கவே போர்கள் நடைபெறுகின்றன .

தனக்கு உரிமையென கருதிடும் நிலத்தினை தனது அனுமதியின்றி ஆக்கிரமிப்பு செய்வதோ , பயன்படுத்துவதோ குற்றமாகவே கருதப்படுகிறது . ஆனால் அது எப்போது குற்றமாக கருதப்படுகிறது எண்பதில்தான் இருக்கின்றது பிரச்சனையே ?

 

 

அண்டை வீட்டுக்காரர் முயன்றால் குற்றம் , அந்நிய நாட்டுக்காரர் செய்தால் குற்றம் . ஆனால் அந்நாட்டு அரசாங்கமே தேசத்தின் வளர்ச்சிக்காக என ஆக்கிரப்பு செய்தால் ? பயன்படுத்திட முனைந்தால் ? சில நிவாரணங்களை கொடுத்துவிட்டால் போதும் குற்றமில்லை என்கிற சட்டம் தான் இங்கு மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலும் இருக்கின்றன .

 

ஒரு சுதந்திர நாட்டில் எவரும் பறிக்க முடியாத அளவிற்கு நிலத்தின் மீதான உரிமை குடிமகனுக்கு கிடையாதா ?

 

அரசு, தேவைப்படும்போது நிலத்தினை மக்களிடம் அவர்களின் விருப்பம் இன்றி பெறவே முடியாது என நிலத்தின் மீதான முழு உரிமையையும் மக்களுக்கே கொடுத்துவிட்டால் என்னாகும் ?

 

வெளிப்படையாக சொல்லவேண்டுமானால் எந்தவொரு திட்டமுமே நிறைவேறாமல் போகும் . மக்கள் தொகைக்கு ஏற்ப கட்டுமானங்களையோ , சாலை போடுவதையோ , விரிவு படுத்துவதையோ செயல்படுத்த முடியாது . எதிர்க்கட்சிகளுக்கு சொந்தமான நிலம் சாலை அமையப்போகும் இடத்தில் இருந்தால் அந்த திட்டத்தையே நிறுத்திவிட முடியும் .

எந்தவொரு திட்டத்தை நிறைவேற்றும்போதும் அங்கு சில இழப்புக்கள் இருந்தே தீரும் , அதனை மறுக்கவே முடியாது .

 

 அரசு விரும்பும்போது எப்போது வேண்டுமானலும் எடுத்துக்கொள்ளலாம் என்கிற சட்டம் சரியானதா ?

ஒவ்வொரு மனிதனும் தனது நிலத்தினை உயிராக மதித்து நேசிக்கிறான் . காடும் மேடுமாய் கிடந்த நிலங்களை பண்படுத்தி பசுமையான வயல்களாய் , தென்னந்தோப்புகளாய் , மரம் கொடிகள் செடிகள் நிறைந்த காடுகளாய் மாற்றி வைத்திருக்கிறான் .

 

 

திடீரென ஏதோ ஒரு நகரத்தின் கட்டிடத்தில் இருந்துகொண்டு , மேப்களை வைத்துக்கொண்டு சாலை அமைக்க இந்த இடங்களை ஆக்கிரமிக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டு மக்களிடம் குறைந்த நிவாரணங்களை வீசி இறைத்து நீ கொடுத்தே தீர வேண்டும் என நிர்பந்திப்பது , சொல்லமுடியாத கொடுமை ,தவறு ,குற்றம் .

 

இதுவும் தவறு அதுவும் தவறென்றால் என்ன தான் செய்வது ?

 

விவசாய நிலங்களுக்குள் சாலை போடவேண்டும் என்றால் சிறியதாக சாலைகளை வடிமைக்க வேண்டும் . உதாரணத்திற்கு கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழித்தடம் மிகவும் குறுகலாக வளைந்து வளைந்து இருக்கும்,   வேகம் குறைவானதாக இருக்கும் . ஆனால் அந்த சாலையால் மக்களுக்கும் தொந்தரவு இருக்காது , விவசாய நிலங்களும் பாதிக்கப்படாது . தற்போது அமையவிருக்கும் சாலை பயண நேரத்தை குறைக்கவே என சொல்லப்படுகிறது . யாருடைய பயண நேரத்தை குறைக்க என்பதே பிரதான கேள்வி ?

 

மக்களுக்காக மட்டுமே திட்டங்களும் சட்டங்களும் , ஏதோ சில முதலாளிகளுக்காக அல்ல

 

இந்தியா இயற்கையாகவே விவசாயத்தை அடிப்படையாக கொண்ட நாடு . அப்படிப்பட்ட தேசத்திற்கு சாலை எப்படி தேவையோ அப்படி அமைத்தால் மட்டுமே போதுமானது , உலகின் பல நாடுகள் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இயற்கைக்கு எந்தவித பாதிப்புகளும் இன்றி உண்மையான பசுமை வழி சாலைகளை அமைக்கிறார்கள் .ஆனால் நாம்தான் ஏற்கனவே இருக்கின்ற பசுமையான நிலங்களையும் மரங்களையும் திட்டங்கள் என்கிற பெயரில் அழித்துக்கொண்டு போகிறோம்.

 

நிலத்தினை எடுத்துக்கொள்ளும் உரிமை அரசிடம் தான் இருக்க வேண்டும் .அதேசமயம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மக்களின் நலனில் பொறுப்பு இருக்க வேண்டும் .

 

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *