குடும்பத்தினரோடு செலவு செய்யும் பொன்னான நேரமே முக்கியமானது – ஏன் ?
இப்படி ஓடி ஓடி சம்பாரிப்பவர்களை ஒரு நிமிடம் நிறுத்தி கேட்டுப்பாருங்கள் “எதற்காக இப்படி ஓடுகிறீர்கள் ” என்று . ஒட்டுமொத்த மக்களின் ஒரே பதில் “குடும்பத்திற்க்காக ஓடி ஓடி உழைக்கிறேன்” என்பார்கள் . அவர்கள் சொல்வதும் உண்மைதான் . அனைவரின் ஓட்டத்திற்கு பின்னாலும் தனது பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் ,குடும்பத்தினர் சந்தோசமாக இருக்க வேண்டும் என்கிற அக்கறைதான் பிரதானமாக இருக்கின்றது .
எங்கு பிரச்சனை வருகிறதென்றால் எந்த குடும்பத்திற்காக ஓடி ஓடி வேலை செய்கிறோமோ அந்த குடும்பத்திற்க்காக நாம் நேரத்தை செலவிடாமல் வெறும் பணத்தை மட்டும் கொடுக்கும்போதுதான் நிகழ்கிறது .
ஒருநாளில் 10 மணிநேரம் வேலைக்காக ஒதுக்குகிறீர்கள் என்றால் உங்களின் கனவு உங்களின் எதிர்காலம் என நினைக்கும் உங்கள் பிள்ளைக்காக மனைவிக்காக பெற்றோருக்காக சகோதரர்களுக்காக குறைந்தது 2 மணி நேரம் ஒதுக்குங்கள் .
பிள்ளைகளிடம் பள்ளியில் நடந்ததை கேளுங்கள் , மனைவியிடம் குடும்பத்தை பற்றி பேசுங்கள் , அப்பா அம்மாவிடம் சந்தோசமாக இருங்கள் . இவைதான் எதிர்காலத்திற்கு நீங்கள் சம்பாதித்து வைக்கும் அற்புத செல்வம் .
நம்மில் எத்தனை பேர் குழந்தைகளை நல்ல பள்ளியில் சேர்த்துவிட்டு சூ டிரஸ் வாங்கிக்கொடுத்துவிட்டு மாதாமாதம் பள்ளிக்கட்டணத்தை சரியாக கட்டிவிட்டு பிள்ளை என்ன படிக்கிறான் ,பள்ளியில் எவ்வாறு நடந்துகொள்கிறான் , அவனது நண்பர்கள் யார் , போட்டிகளில் பங்கேற்கிறானா என எதுவும் தெரியாமலே வாழ்க்கையை கடந்து கொண்டிருக்கிறோம் ?
பொன்னான நேரமென்பது குடும்பத்தினருடனான நேரமே ! சேகரியுங்கள் .
நன்றி