2021 PM Kisan Scheme In Tamil | விண்ணப்பிப்பது எப்படி? | பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி
>> நாடு முழுமைக்கும் இருக்கும் சிறு குறு விவசாயிகளின் நலன் கருதி அவர்களுக்கு பொருளாதார ஆதரவை நல்கிட இந்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி [PM Kisan Scheme] ஐ கொண்டு வந்தது.
>> ஆண்டுக்கு மொத்தமாக ரூ 6000 நிதி வழங்கப்படும். மூன்று தவணைகளாக ரூ 2000 வீதம் வழங்கப்படும்.
>> பெரும்பாலான விவசாயிகள் பலன் பெற்றுவரும் இந்த பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியை பெறுவதற்கு எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட விசயங்களை இங்கே பார்க்கலாம்.
பிரதான் மந்திரி கிசான் திட்டமானது பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி [Pradhan Mantri Kisan Samman Nidhi] என விரிவாக்கம் செய்யப்பட்டு செப்டம்பர் 1, 2019 ஆம் ஆண்டு அப்போதைய நிதி அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டில் வருமானம் குறைந்து வறுமையில் வாடும் சிறு குறு விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த மூன்று தவணைகளாக ரூ 2000 வீதம் வருடத்திற்கு ரூ 6000 வழங்கும் விதத்தில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலமாக கந்து வட்டி, பட்டினி சாவு உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து விவசாயிகளை காக்க முடியும் என நம்பப்படுகிறது.
எதற்காக பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் கொண்டுவரப்பட்டது?
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி என்பது மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம். இந்தியாவில் இருக்கும் 125 மில்லியன் சிறு குறு விவசாயிகளின் நலன் காப்பதற்காக ஆண்டுக்கு ரூ 6000 மூன்று தவணைகளாக ரூ 2000 வீதம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வைக்கப்படும். இந்த திட்டத்திற்கு 75000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிலத்தை அடிப்டையாகக்கொண்டு அல்லாமல் இந்த நிதி வழங்கப்படுவதனால் ஒருவரிடம் மிகக்குறைந்த நிலம் இருந்தாலோ கூட இந்த நிதியை பெற முடியும்.
பிஎம் கிசன் சம்மன் நிதியை பெற தகுதி என்ன?
விவசாய குடும்பத்திடம் விவசாயம் செய்வதற்கு தகுதியான நிலம் இருப்பின் அவர்கள் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் அளிக்கின்ற பலனைப் பெற விண்ணப்பிக்கலாம். கிராமப்புற மற்றும் நகர்ப்புற விவசாயிகள் எவர் வேண்டுமானாலும் இந்த நிதியைப்பெற விண்ணப்பிக்க முடியும். இந்த நிதியைப்பெற விவசாயிகள் சிறு மற்றும் குறு விவசாயிகள் பட்டியலுக்குள் இருக்க வேண்டும்.
பிஎம் கிசன் சம்மன் நிதியை யாரெல்லாம் பெற முடியாது?
பின்வரும் எவரும் பிஎம் கிசன் சம்மன் நிதியை பெற விண்ணப்பிக்க முடியாது,
நிறுவன விவசாயிகள்
மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள்
ஓய்வு பெற்ற அதிகாரிகள்
பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள்
வருமான வரி செலுத்துபவர்கள்
அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள்
மருத்துவர்கள் வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள்
ஓய்வு பெற்றவர்கள் மாதத்திற்கு 10,000 ரூபாய்க்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்கள்
PM Kisan Nithi -யை பெற எப்படி விண்ணப்பிப்பது?
PM Kisan Nithi க்காக விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் முதலில் மாநில அரசு அல்லது வருவாய் துறை அதிகாரிகள் நியமித்து இருக்கும் நோடல் அலுவலரை [Nodal Officer] அணுக வேண்டும். பின்னர் பொது சேவை மையங்களுக்கு சென்று சிறிய கட்டணத்தை செலுத்தி விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி விண்ணப்பம் ஐ பதிவு செய்திடலாம். கூடவே விவசாயிகள் ஆன்லைனிலும் நேரடியாக விண்ணப்பம் செய்திட முடியும்.
இதற்காக இணையதளம் ஒன்று https://pmkisan.gov.in/ மத்திய அரசால் துவங்கப்பட்டுள்ளது. PMKISAN எனும் மொபைல் ஆப்பும் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த இணையத்தளத்திற்குள் சென்றால் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதிக்கு விண்ணப்பிப்பது, ஏற்கனவே இருக்கும் தகவலை மாற்றுவது, பயனாளர் தகவலை அறிவது, விண்ணப்பத்தின் நிலையை அறிவது என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதிலை பெறலாம்.
பிஎம் கிசன் சம்மன் நிதிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்கள் என்ன?
இந்தத்திட்டத்தில் விண்ணப்பிக்க பின்வரும் சான்றிதழ்கள் அவசியம்,
>> இந்திய அரசு வழங்கிய ஆதார் அட்டை
>> குடியுரிமை சான்றிதழ்
>> நில உரிமையாளருக்கான சான்றிதழ்
>> ஜன் தன் வங்கிக்கணக்கு
Farmers Corner இல் என்னென்ன வசதிகள் இருக்கும்?
New Farmer Registration – இந்தப்பகுதியின் வாயிலாக விவசாயி தானாக பிஎம் கிசன் சம்மன் நிதிக்கு விண்ணப்பிக்க முடியும்.
Edit Aadhaar Failure Records – இந்தப்பகுதியில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஆதார் விவரங்களை மாற்றிட முடியும்.
Beneficiary Status – ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் அல்லது மொபைல் எண் ஏதேனும் ஒன்றை கொடுத்து சரிபார்த்துக்கொள்ள முடியும்
இன்னும் பல ஆப்சன்களின் மூலமாக தகவல்களை பெற மற்றும் மாற்றியமைக்க முடியும்.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி – ஊழல்
பெரும் துயரத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு சிறு உதவியை செய்திடும் நோக்கத்தில் தான் மத்திய அரசு “பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி” திட்டத்தை கொண்டுவந்தது. ஆனால் இதிலும் தவறான தகவல்களை அளித்து போலியான விவசாயிகளை இணைத்து ரூ110 கோடிக்கும் மேல் பணம் கையாடல் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. தமிழ்நாட்டில் கிசான் திட்டத்தின் கீழ் ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கிசான் திட்டத்தில் போலி கணக்குகளை உருவாக்கி இதுவரை ரூ.110 கோடி முதல் ரூ.120 கோடி வரை மோசடி நடந்திருக்கலாம் என்று தமிழக வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
அவ்வாறு தவறான முறையில் பதிவு செய்து அதன் மூலமாக நிதியைப் பெற்ற வங்கிக்கணக்குகளில் இருந்து பணம் மீண்டும் பெறப்பட்டு வருகிறது. இதுவரைக்கும் 32 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில் தொடர்ச்சியாக பணம் மீட்கப்பட்டு வருகிறது. மோசடியில் ஈடுபட்ட 80 க்கும் மேற்பட்ட நபர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இது தமிழகத்தில் நடைபெற்ற மோசடி மட்டுமே. இந்திய அளவில் என்ன நிலைமை என்பது தெரியவில்லை.
குறைந்தபட்ச நேர்மையோடு செயல்படுவோம்
அரசாங்கம் கொடுக்கிற நிதி மற்றும் திட்டங்களை அலட்சியமாகவும் அபகரிக்கவும் பலர் ஆசைப்படுவது வாடிக்கையாக போய்விட்டது. அரசாங்கம் நம்மிடம் வசூலிக்கும் வரி வருவாயில் தான் நமக்கு இவற்றையெல்லாம் செய்கிறது என்பதை முதலில் மக்களும் அதிகாரிகளும் புரிந்துகொள்ள வேண்டும். சத்தமே இல்லாமல் தமிழ்நாட்டில் இத்தகைய முறைகேடு நடைபெற்று இருப்பதென்பது கொடுமையிலும் கொடுமை. இந்தத்தவறை செய்த அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் தண்டனைக்கு உரியவர்கள்.
என்னதான் கண்காணித்தாலும் ஏமாற்றும் எண்ணமுடையவர்கள் ஏமாற்றிக்கொண்டு இருக்கவே செய்வார்கள். விசாரணை, தண்டனை என்பது அவர்களை ஒருவகையில் கட்டுப்படுத்தினாலும் கூட “திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்பதற்கு இணங்க தாங்களாகவே சுய ஒழுக்கம் கொண்டவர்களாய் மாறாதவரை நாம் முன்னேறவே முடியாது. இதனை படித்த அதிகாரிகள் முதலில் உணர வேண்டும். பேராசையினால் இப்படி ஊழல் செய்கிறவர்கள் என்பது இறந்த பிணத்திலும் ரத்தம் குடிக்கும் பேய்களுக்கு சமமானவர்கள்.
தயவு கூர்ந்து அனைவரும் குறைந்த பட்ச நேர்மையோடு செயல்படுவோம்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!