நீதிமன்றம் தன்னை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளவேண்டிய காலம் இது…
நீதிமன்றம் தன்னை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளவேண்டிய காலம் இது
சுதந்திர இந்தியாவின் இத்தனை ஆண்டுகால பயணத்தில் மக்களின் உரிமைகளை காத்தும் குற்றங்கள் அத்துமீறல்கள் ஊழல்கள் என அனைத்தையும் தடுத்து இந்திய வரலாற்றினை வெற்றிப்பயணமாக அமைத்ததில் நீதிமன்றங்களின் பங்கு அளப்பரியது.
உலகில் இருக்கக்கூடிய மிகப்பெரிய சட்ட புத்தகங்களில் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டமும் ஒன்று.
நாட்டில் சீர்திருத்தங்களையும் கட்டுப்பாடுகளையும் கொண்டுவந்த நீதிமன்றம் இத்தனை ஆண்டுகளில் தன்னுடைய பணியினை சுயபரிசோதனை செய்துகொள்ள தவறிவிட்டது என்றே கூறலாம். அதன் விளைவு இன்று நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு. அதற்க்கு ஏற்றாற்போல மாற்றப்படாமல் இருக்கும் சட்டங்கள்.
ஆம் உதாரணமாக கீழ்நீதிமன்றம் அளிக்கக்கூடிய ஒரு தீர்ப்பினை மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் மாற்றும் அல்லது உறுதிசெய்யும் அதிகாரம் அதற்க்கு உண்டு. இந்தமுறை நல்லவர்கள் தவறாக தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்க்காக கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனால் அப்படி தீர்ப்பு மாற்றப்படும் போது மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதாகவும் கீழ்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறு என்றாகவும் ஆகிறது.
என்ன நடக்கிறது ?
பெரும்பாலான வழக்குகளில் மேல்முறையீட்டில் மாறுபட்ட தீர்ப்புகளே வழங்கப்படுகின்றன. ஆனால் தவறான தீர்ப்பு வழங்கிய கீழ்நீதிமன்ற நீதிபதிக்கு எந்தவித கேள்விகளையோ அல்லது விளக்கங்களையோ மேல்நீதிமன்றங்கள் கேட்பதில்லை. குறைந்தபட்சம் அவருக்கு அந்த வழக்கில் தீர்ப்பு மாற்றப்பட்டதற்கான புரிதல்களைக்கூட ஏற்படுத்துவதில்லை. விளைவு அவர் மீண்டும் அதேமாதிரி தீர்ப்பினை வழங்குவார்.
உதாரணமாக ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் விசாரணை நீதிமன்றம் அளித்த 4 ஆண்டு சிறை 100 கோடி அபராத தண்டனையை உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அவர்கள் தவறானது என குறிப்பிட்டு விடுதலை செய்தார். குமாரசாமி தீர்ப்பு விவரம்விளைவு ஜெயலலிதா தேர்தலில்போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் தமிழக முதலமைச்சர் ஆனார் (அவர் இறந்துவிட்டாலும் இன்னும் 4 ஆண்டுகளுக்கு மேல் அந்த கட்சிக்கு ஆட்சி செய்யும் உரிமை உண்டு)
ஆனால் நேற்று உச்சநீதிமன்றம் குமாரசாமி அவர்களின் தீர்ப்புக்கு தடைவிதித்து விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனை செல்லும் என அறிவித்து இருக்கின்றனர். இதன்மூலம் குமாரசாமி அவர்களின் தீர்ப்பு தவறாகிறது. அவரது தவறான தீர்ப்பினால் ஒரு மாநிலத்தின் ஆட்சி அப்படியே மாறிப்போனது.
இப்படி ஒவ்வொருமுறை தவறான தீர்ப்பு வழங்கப்படும் போதும் அதனை வழங்கிய நீதிபதிகளை உச்சநீதிமன்றம் அப்படியே விட்டுவிடுவது ஆச்சர்யம் அளிக்கின்றது. ஒவ்வொரு நீதிபதியும் அரசு ஊழியரே. ஆகவே அவரும் கேள்விக்கு உட்பட்டவரே.
தவறான தீர்ப்பு அளித்த நீதிபதிகளை கேள்விகூட கேட்க வேண்டாம். ஆனால் இதுபோன்ற தவறான தீர்ப்புகள் ஏன் கொடுக்கப்படுகின்றன என்பதை ஆராயவேண்டியது உச்சநீதிமன்றத்தின் கடமை தானே .அப்போதுதானே தவறான தீர்ப்புகள் வருவதை பிற்காலத்திலாவது குறைக்க முடியும்.
முதலில் நீதிபதிகள் தங்களுக்குள் ஒருமித்த கருத்துக்கு வரவேண்டும். மாவட்ட, உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற என அனைத்து நீதிபதிலுமே ஒரே சட்டப்புத்தகத்தின்படிதானே தீர்ப்பு அளிக்கிறார்கள் அப்பறம் எப்படி தீர்ப்பு மாறுபடுகின்றது. இந்த கேள்வி உச்சநீதிமன்றத்திற்கு எழுந்து அவர்கள் தான் ஆராயவேண்டும்.
நீதிமன்றம் தன்னை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளவேண்டிய காலம் இது…