அடடே! கிராம சபைக்கு இவ்வளவு அதிகாரமா? நெடுவாசலில் தீர்மானம்…..

கிராம சபை தீர்மனம்  : 

நெடுவாசலில் ஹைடிரோகார்பன் எடுப்பதற்கு எதிராக போராட்டம் நடந்த பொழுது சிலர் கிராம சபையில் இந்த திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் மத்திய அரசாலும் மாநில அரசாலும் ஒன்றும் செய்ய இயலாது என்று கூறியதை கேட்டிருந்தோம். அதன்படியே தற்போது மார்ச் 27 அன்று நெடுவாசலில் அரசு பிரதிநிதிகளின் முன்னிலையில் இந்த திட்டத்தை நெடுவாசலிலும் அதனை சுற்றி உள்ள படுகை நில பகுதிகளிலும் செயல்படுத்த கூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்ற பட்டது.

கிராம சபையின் அதிகாரம் : 

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், பட்டியல் 11-ன் படி கிராம மக்களின் வாழ்வாதாரங்களான வேளாண்மை, நீர் மற்றும் நில பாதுகாப்பு கிராம பஞ்சாயத்து மற்றும் மக்களின் உரிமையாகும். உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில், கிராமத்தின் இயற்கை வளங்கள் மற்றும் கிராம மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் உரிமை மற்றும் கடமை கிராம சபைக்கு உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.

உண்மையில் மக்களுக்கான அதிகாரம் என்பது சட்டத்தை மீறிய அதிகாரம் கிடை யாது. 1992-ம் ஆண்டில் 73 மற்றும் 74-வது இந்திய அரசியலமைப்புச் சட்டத் திருத்தமாக நாடாளுமன்றத்தில் மக்கள் பெற்ற அதிகாரம் இது. 73-வது சட்டத் திருத்தம் என்பது ஊராட்சி மக்களுக்கானது. 74-வது சட்டத் திருத்தம் என்பது நகர மக்களுக்கானது. 73-வது சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் கிராம ஊராட்சியில் இருக்கும் வாக்காளர்கள் ஒவ்வொருவருமே தானாகவே கிராம சபையின் உறுப்பினராகிவிடுகிறார். இந்த வாக்காளர்கள் அனைவரையும் உள்ளடக்கிய அமைப்புதான் கிராம சபை. ஊர்க் கூடி முடிவு செய்வது என்பது நமது பண்டைய கால மரபு. அதன் நீட்சியே கிராம சபைகள்.

1994-ம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின்படி அனைத்து வாக்காளர்களையும் கொண்ட அரசு அங்கீகாரம் பெற்ற அமைப்பு தான் உங்கள் கிராம சபை. அது வெறும் குறைகளை மட்டும் சொல்லும் அமைப்பு கிடையாது. மக்கள் அதிகாரம் கொண்ட அமைப்பு அது. நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு மற்றும் நாடாளுமன்ற கூட்டுக் குழுக்கள் ஆகியவற்றுக்கு இணையான அங்கீகாரம் பெற்றவை அவை. பஞ்சாயத்து நிர்வாகத்தை அவை கண்காணிக்கும். தவறு செய்தால் தட்டிக் கேட்கும். நடவடிக்கை எடுக்க பரிந் துரைக்கும்.

பஞ்சாயத்து எழுத்தர்தான் கிராம சபையின் செயலாளர். இவர் கிராம சபையின் நடவடிக்கைகளைப் பதிவு செய்ய வேண்டும். பஞ்சாயத்தின் வரவு – செலவுகளை கிராம சபையில் சமர்ப்பிக்க வேண்டும். சட்ட விதி முறைகள், அரசு ஆணைகளை கிராம சபையினருக்கு தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு கிராமசபை கூட்டத்திலும் கிராம நிர்வாக அதிகாரி, வட்டார வளர்ச்சி அதிகாரி கலந்துக்கொண்டு அரசு திட்டங்களை விளக்க வேண்டும். மக்கள் கேள்வி கேட்பார்கள். பதில் சொல்ல வேண்டும். கிராமப் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளிடமும் மக்கள் கேள்விகளைக் கேட்பார்கள். தவறுகளை சுட்டிக்காட்டுவார்கள். கண்ணியமான முறையில் விவாதங்கள் நடைபெறும்.

கிராமத்தின் மக்கள் நினைத்தால் தங்கள் தேவைகளுக்காக எப்போது வேண்டுமானாலும் கிராம சபையைக் கூட்டிக்கொள்ளலாம். ஒரே இடத்தில்தான் கிராம சபையைக் கூட்ட வேண்டும் என்பதில்லை. தேவையைக் கருதி ஒரு கிராமத்தில் பல்வேறு பகுதிகளிலும் கூட்டிக்கொள்ளலாம். மாநிலத்துக்கு மாநிலம் கிராம சபைகளின் செயல்பாடுகள் மாறு படுகின்றன. தமிழகத்தில் ஓர் ஆண்டில் சுதந்திர தினம், குடியரசு தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு நாட்களில் கண்டிப்பாக கூட்ட வேண்டும்.

சரி, இந்த கிராம சபையில் உங்களுக்கான அதிகாரத்தை எப்படி செயல்படுத்துவீர்கள்? ஒரு திட்டம் வேண்டும் அல்லது வேண்டாம் என்பதில் உங்கள் அதிகாரத்தை எப்படி செலுத்துவீர்கள்? ரொம்பவும் எளிது. 500 பேர் கொண்ட கிராமம் எனில், உங்களைப் போல 50 பேர் திரள வேண்டும். 501 3 ஆயிரம் பேர் கொண்ட கிராமம் எனில் 100 பேர் திரள வேண்டும். 3001 10 ஆயிரம் பேர் கொண்ட கிராமம் எனில் 200 பேர் திரள வேண்டும். 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோரைக் கொண்ட கிராமம் எனில் 300 பேர் திரள வேண்டும். இப்படி ஒன்று சேர்பவர்கள் கிராம சபையில் நிறைவேற்றும் தீர்மானத்தின் மூலம் உங்கள் அதிகாரத்தைச் செயல்படுத்தலாம்.

இந்த தீர்மானத்தின் அதிகாரம் என்பது சாதாரணமானதல்ல. கேரளம், பிலாச்சிமடா கிராமத்தில் இயற்கையைச் சுரண்டிய பன்னாட்டு நிறுவனத்தை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் அது. தமிழகம் குத்தப்பாக்கம் கிராமத்தில் 100 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற மாநில அரசையே பின்வாங்கச் செய்த மக்கள் அதிகாரம் அது!

கிராம சபையின் மூலமாக உங்களால் என்ன செய்திட முடியும் : 

மதுபான கடைகளை உங்கள் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த முடியும்.

நெல்லை மாவட்டம், கலிங்கப் பட்டியில் கிராம சபை தீர்மானத்தின் அடிப்படையில் அரசு மதுபானக் கடையை மூட உத்தரவிட்டிருந்தது உயர் நீதிமன்றம். அந்தத் தீர்ப்புக்கு தடை கோரும் சிறப்பு விசாரணை மனுவை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்தது. இதைத் தான் தள்ளுபடி செய்து கிராம சபையின் அதிகாரத்தை நிலைநிறுத்தி யிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

சர்வாதிகாரம் படைத்த சுரண்டும் நிறுவங்களை ஓட ஓட விரட்டலாம் :

பிலாச்சிமடாவில் கோகோ கோலா நிறுவனம் நீர்நிலைகளை சீரழித்தபோது போராடி தடுத்தது கிராம சபை. சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களில் வனப் பகுதிகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் வேட்டையாடியபோது நீதிமன்றங்கள் மூலம் தடுத்து நிறுத்தின கிராம சபைகள். கோவாவில் கடலோர கிராமம் ஒன்றில் தொடங்கப்பட்ட தனியார் நைலான் நிறுவனத்தின் கழிவுகள் கடலில் விடப்பட்டன. மீன்கள் செத்து மிதந்தன. பிரச்சினையை உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டுச் சென்றது கிராம சபை. ‘நாட்டில் கிராம சபைகளின் பங்கு என்ன? அரசியல் சாசனம் மூலம் அவற்றுக்கு அளிக்கப்பட்ட அதிகாரம் செயல்பாட்டில் இருக்கிறதா?’ என்று அன்றைய அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜிடம் கேள்வி எழுப்பினார்கள் நீதிபதிகள். பிரச்சினையில் அன்றைய பிரதமர் வாஜ்பாய் தலையிட்டார். இறுதியாக நீதிமன்றம், ‘மேல் அவை, கீழ் அவை ஆகியவை எப்படியோ அப்படிதான் கிராம சபைகளும். அவற்றின் அதிகாரத்தை மாற்றவோ, குறைக்கவோ முடியாது. உடனடியாக அந்த கிராமத்தில் இருந்து பன்னாட்டு நிறுவனம் வெளியேற வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். தேசிய அளவில் இப்படி பல முன்னுதாரணங்களை சொல்லலாம்.

கிராம சபையின் அதிகாரத்தை மக்களிடம் பரப்புங்கள்…உங்கள் பகுதியை உங்கள் உரிமையின் மூலமாக நீங்களே நிறைவேற்றி கொள்ளுங்கள் .

நன்றி : தி ஹிந்து தமிழ் 

நன்றி
பாமரன்

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *